கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் விற்பனை அதிரடி துவக்கம்!
கேடிஎம் நிறுவனத்தின் மிக குறைவான விலை மாடலாக கேடிஎம் 125 ட்யூக் பைக் கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் விற்பனை துவக்கத்திலேயே சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.

கேடிஎம் நிறுவனத்தின் மிக குறைவான விலை மாடலாக கேடிஎம் 125 ட்யூக் பைக் கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. எதிர்பார்த்தது போலவே, துவக்கத்திலேயே மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை கேடிஎம் 125 ட்யூக் பைக் பதிவு செய்துள்ளது.

ஆம், அறிமுகம் செய்யப்பட்ட முதல் ஒரு வாரத்தில், அதாவது கடந்த நவம்பர் மாதத்தில் 457 பைக்குகள் விற்பனையாகி இருக்கின்றன. இது சிறப்பான எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

இந்த மாதம் முதல் கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் விற்பனை 2,000 யூனிட்டுகளுக்கும் மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நிச்சயம் கேடிஎம் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை தரும் விஷயமாக இருக்கும்.

கேடிஎம் 125 ட்யூக் பைக் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக ஆதரவை பெற்றிருப்பதற்கு முக்கிய காரணம், விலை. இந்த பைக் ரூ.1.18 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்துள்ளது. 125சிசி பைக் மாடலுக்கு இது சற்று அதிகமாக கருதினாலும், செயல்திறனில் 150சிசி பைக்குகளுக்கு இணையாக இருக்கிறது.

இந்த பைக்கில் பொருத்தப்பட்டு இருக்கும் 124சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 14.3 பிஎச்பி பவரையும், 12 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக் லிட்டருக்கு 62 கிமீ மைலேஜ் தருவதாக, இந்த பைக்கை டெலிவிரி எடுத்த முதல் வாடிக்கையாளர் தெரிவித்துள்ளார். எனவே, மைலேஜிலும் இது சிறப்பான மாடலாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருப்பதுடன், பின்சக்கரம் மேலே தூக்காத ரியர் லிஃப்ட் புரொடெக்ஷன் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கிறது. இதுவும் மிக முக்கிய பாதுகாப்பு தொழில்நுட்பமாக இருக்கிறது.

எல்லாவற்றையும்விட கேடிஎம் ட்யூக் வரிசை மாடல்களுக்கு உரிய தனித்துவமான டிசைனும் இந்தியர்களை இந்த பைக் வசியம் செய்ய காரணமாகி இருக்கிறது. இது இந்த ரகத்தில் புதிய அத்தியாயத்தை எழுதி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








