மஹிந்திரா மோஜோ அடிப்படையில் 2 புதிய பீஜோ பைக் கான்செப்ட் மாடல்கள் அறிமுகம்!
மஹிந்திரா மோஜோ பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, இரண்டு புதிய பீஜோ பைக்குகள் பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய பைக்குகள் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில்
மஹிந்திரா மோஜோ பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இரண்டு புதிய பீஜோ பைக்குகள் பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த புதிய பைக்குகள் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

பீஜோ P2X ரோட்ஸ்டெர் மற்றும் பீஜோ P2X கஃபே ரேஸர் என இரண்டு ரகத்தில் கான்செப்ட் மாடல்களாக இவை பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பழமையான டிசைன் தாத்பரியங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களை பெற்றதாக இந்த பைக் கான்செப்ட் மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

பீஜோ P2X ரோட்ஸ்டெர் பைக் மாடலானது பாரம்பரிய டிசைனில் அசத்துகிறது. இந்த பைக்கில் எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், வித்தியாசமான பெட்ரோல் டேங்க் அமைப்புடன் அசத்துகிறது. முன்புற ஃபென்டர் குட்டையாக இருப்பதும் இதன் ரோட்ஸ்டெர் ரகத்திற்கு உரிய அம்சமாக பாவிக்கலாம்.

இந்த பைக்கில் ஸ்போக்ஸ் சக்கரங்கள் மற்றும் பைரெல்லி டயாப்லோ ராஸ்ஸோ - II டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் அப்சைடு டவுன் அமைப்புடைய ஃபோர்க்குகளும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

பீஜோ P2X கஃபே ரேஸர் மாடல் மிக தனித்துவமான டிசைன் தாத்பரியங்களுடன் கவர்்கிறது. இந்த பைக்கில் முக்கிய உதிரிபாகங்கள் ரோட்ஸ்டெர் மாடலுடன் பங்கிட்டு கொண்டுள்ளது. ஆனால், இந்த பைக்கில் க்ளிப் ஆன் ஹேண்டில்பார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும், ரோட்ஸ்டெர் மாடலில் ஸ்போக்ஸ் சக்கரங்கள் இருக்கும் நிலையில், இந்த பைக்கில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டு சக்கரங்களுக்குமான டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றுள்ளது.

இந்த இரண்டு புதிய பீஜோ பைக் கான்செப்ட் மாடல்களிலும் சிங்கிள் சிலிண்டர் கொண்ட 300சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.. 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் மிக முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனமான பீஜோ 70 ஆண்டுகளுக்கு பிறகு, மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் மீண்டும் களம் புகுந்துள்ளது. பீஜோ நிறுவனத்தின் இருசக்கர வாகனப் பிரிவு மஹிந்திரா நிறுவனத்தின் கீழ் செயல்படுகிறது.

மேலும், இந்த இரண்டு மாடல்களுமே, மஹிந்திரா மோஜோ அடிப்படையிலான மாடல்களாக கருதப்படுகிறது. இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லாவிட்டாலும், இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சஸ்பென்ஷன், எஞ்சின் என அனைத்து முக்கிய பாகங்களுமே மஹிந்திரா மோஜோ பைக்கிலிருந்து பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படலாம்.

இந்த இரண்டு பைக் கான்செப்ட் மாடல்களும் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு 2020ம் ஆண்டு முதலில் ஐரோப்பிய நாடுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்த இரண்டு புதிய பைக்குகளையும் தனது கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் மூலமாக மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications