2019 வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!
வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 150 மற்றும் விஎக்ஸ்எல் 150 ஆகிய இரண்டு ஸ்கூட்டர் மாடல்களிலும் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் மேட் ராஸோ டிராகன், மேட் யெல்லோ மற்றும் அ
பண்டிகை காலத்தை முன்னிட்டு புதுப்பொலிவுடன் வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

வெஸ்பா எஸ்எக்ஸ்எல் 150 மற்றும் விஎக்ஸ்எல் 150 ஆகிய இரண்டு ஸ்கூட்டர் மாடல்களிலும் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டர்கள் மேட் ராஸோ டிராகன், மேட் யெல்லோ மற்றும் அஸூரோ புரொவென்ஸா ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்கூட்டர்களில் 5 ஸ்போக்குகள் கொண்ட மெஷின் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வெஸ்பா 150 ஸ்கூட்டரில் தொழில்நுட்ப மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. இந்த ஸ்கூட்டர் மாடல்களில் 154.8 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.35 பிஎச்பி பவரையும், 10.9 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. ஏப்ரிலியா 150 ஸ்கூட்டரின் அதே அளவு டார்க் திறனையே இந்த ஸ்கூட்டரும் வெளிப்படுத்துகிறது.

வெஸ்பா எல்எக்ஸ்எல் 150 மாடல் ரூ.91,140 விலையிலும், விஎக்ஸ்எல் 150 மாடல் ரூ.97,276 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். இவை புனே எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

வெஸ்பா 150 ஸ்கூட்டர் மாடல்கள் தவிர்த்து, வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டரில் முழுவதுமாக கருப்பு வண்ணக் கலவை மாடல் வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் விற்பனையில் இருக்கும் வெஸ்பா ஜிடிஎஸ் நோட் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்களை பிரதிபலிக்கும் விதத்தில் இந்த மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் ரூ.68,829 என்ற புனே எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது.

வெஸ்பா நோட் 125 ஸ்கூட்டரில் இருக்கும் 125சிசி எஞ்சின் அதிகபட்சமாக 10 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. 125சிசி செக்மென்ட்டில் சிறப்பான டிசைன் மற்றும் எஞ்சின் அம்சங்களில் நிறைவான மாடலாக இருக்கும்.

இந்த ஸ்கூட்டர்களில் அனலாக் - டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில், ஸ்மார்ட்போன் செயலியையும், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அப்ளிகேஷனையும் தொடர்பு படுத்தி நேவிகேஷன், வாகனத்தின் இருப்பிடத்தை கண்காணிக்கும் வசதிகளை பெற முடியும்.

இந்த ஸ்கூட்டரில் முன்புறத்தில் 110/70 R11 டயரும், பின்புறத்தில் 120/70 R11 ட்யூப்லெஸ் டயரும் பொருத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 140மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன.

பாரம்பரிய டிசைன் மற்றும் நவீன தொழில்நுட்பங்களுடன் வந்துள்ள புதிய வெஸ்பா ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான தேர்வாக அமையும். மேலும், பண்டிகை காலத்தை முன்னிட்டு வந்துள்ள புதிய வெஸ்பா ஸ்கூட்டர் மாடல்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications