நார்டன் கமாண்டோ 961 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
நார்டன் கமாண்டோ 961 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.
நார்டன் கமாண்டோ 961 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இங்கிலாந்தை சேர்ந்த நார்டன் நிறுவனம் பைக் தயாரிப்பில் உலகின் பழமையான நிறுவனங்களில் ஒன்று. கைனெட்டிக் நிறுவனத்துடன் கூட்டணி வைத்து இந்தியாவில் தனது பைக் மாடல்களை விற்பனை செய்ய முடிவு செய்து சில மாதங்களுக்கு முன் அறிவிப்பை வெளியிட்டது.
இந்த நிலையில், நார்டன் - கைனெட்டிக் கூட்டணியில் முதல் மாடலாக கமாண்டோ 961 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கஃபே ரேஸர் ரகத்தில் இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பாரம்பரிய டிசைன் தாத்பரியங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களை இந்த மோட்டார்சைக்கிள் பெற்றிருக்கிறது. வட்ட வடிவ ஹெட்லைட், அழகாக செதுக்கப்பட்ட பெட்ரோல் டேங்க், சிறிய விண்ட் ஸ்கிரீன், ஒற்றை இருக்கை அமைப்பு, மொழுக்கையான வால் பகுதியுடன் கஃபே ரேஸர் அம்சங்களை பெற்றிருக்கிறது.

புதிய நார்டன் கமாண்டோ 961 கஃபே ரேஸர் மோட்டார்சைக்கிளில் அலுமினியம் க்ளிப் ஆன் ஹேண்டில்பார் பொருத்தப்பட்டு இருக்கிறது. மட்கார்டுகள் மற்றும் விண்ட் ஸ்கிரீன் கார்பன் ஃபைபரில் தயாரிக்கப்பட்டிருப்பது விசேஷம்.

இந்த மோட்டார்சைக்கிளில் முன்சக்கரத்தில் 4 பிஸ்டன்கள் கொண்ட பிரேம்போ காலிபர் மற்றும் இரண்டு டிஸ்க்குகளுடன் கூடிய பிரேக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. பின்சக்கரத்தில் 220மிமீ ஒற்றை டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளில் முன்புறத்தில் 43மிமீ அப்சைடு டவுன் ஓலின்ஸ் ஃபோர்க்குகளுடன் கூடிய சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஓலின்ஸ் ட்வின் ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

புதிய நார்டன் கமாண்டோ 961 மோட்டார்சைக்கிளில் 961சிசி பேரலல் ட்வின் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 78.9 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.

கைனெட்டிக் நிறுவனத்தின் மோட்டோராயல் என்ற விற்பனைப் பிரிவின் கீழ் இந்த புதிய மோட்டார்சைக்கிள் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் நார்டன் மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தி துவங்கப்பட இருக்கிறது.

ரூ.23 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.2 லட்சம் முன்பணத்துடன் முன்பதிவு ஏற்கப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் இறக்குமதி செய்து விற்பனைக்கு கிடைக்கும்.

இப்போதைக்கு கஃபே ரேஸர் ரகத்தில் இதற்கு நிகரான விலையில் எந்த மோட்டார்சைக்கிளும் இல்லை. ட்ரையம்ஃப் த்ரக்ஸ்டன் ஆர் மோட்டார்சைக்கிள் மட்டுமே இதற்கு அடுத்தபடியாக அதிக விலை கொண்ட கஃபே ரேஸர் மாடல். இந்த பைக் ரூ.11.92 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








