பெகாசஸ் 500 எடிசன் பைக்கை கொடுத்து விட்டு பணத்தை பெற்று கொள்ளலாம்.. ராயல் என்பீல்டு திடீர் முடிவு
அதிருப்தியில் உள்ள பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை திருப்திபடுத்த, 3 ஸ்கீம்களை ராயல் என்பீல்டு டீலர்கள் வழங்குகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
அதிருப்தியில் உள்ள பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை திருப்திபடுத்த, 3 ஸ்கீம்களை ராயல் என்பீல்டு டீலர்கள் வழங்குகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களுக்கான ஆன்லைன் முன்பதிவு, கடந்த ஜூலை மாத கடைசியில் நடைபெற்றது. அப்போது இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்ட 250 மோட்டார் சைக்கிள்களும் வெறும் 178 வினாடிகளில் விற்று தீர்ந்தன. இது ஒரு புதிய சாதனையாகும்.

2ம் உலக போர் நடைபெற்ற சமயத்தில், இங்கிலாந்து வீரர்கள் பயன்படுத்திய WD/RE 125 என்ற மோட்டார் சைக்கிள்களை நினைவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் பெகாசஸ் 500 எடிசன். இதில், WD/RE 125 மோட்டார் சைக்கிளை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய டிசைன் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ஒன்றாக பெகாசஸ் 500 எடிசன் கருதப்படுகிறது. இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம். ஆனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்கள், லிமிடெட் எடிசன் மாடலாக மட்டுமே உருவாக்கப்பட்டன.

அதாவது உலகம் முழுமைக்கும் சேர்த்து 1,000 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. இதில், இந்தியாவுக்கு என ஒதுக்கப்பட்டது வெறும் 250 மோட்டார் சைக்கிள்கள் மட்டும்தான்.

இந்த 250 மோட்டார் சைக்கிள்களும்தான், ஜூலை மாத கடைசியில் நடைபெற்ற ஆன்லைன் முன்பதிவின்போது, வெறும் 178 வினாடிகளில் விற்பனையாயின. பெகாசஸ் 500 எடிசனில் இருந்த பிரத்யேகமான அம்சங்களே, வாடிக்கையாளர்கள் அதிகளவில் ஈர்க்கப்பட காரணம்.

ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில், ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்படவில்லை. மாறாக வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்ட எஞ்சிய 750 பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில், டியூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வழங்கப்பட்டது.

ஆனாலும் இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன்தான், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை ஏற்றுக்கொண்டனர். எனினும் ஆகஸ்ட் மாத கடைசி வாரம் வரை மட்டுமே இந்த மகிழ்ச்சி நீடித்தது.

ஏனெனில் ஆகஸ்ட் மாத கடைசி வாரத்தில், கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிள்களை, ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்தது. கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிள்கள், கிட்டத்தட்ட அப்படியே பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை போன்றே இருந்தன.

அத்துடன் கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிள்களில், டியூயல் சேனல் ஏபிஎஸ் வசதி வேறு வழங்கப்பட்டிருந்தது. இதன்மூலம் ஏபிஎஸ் வசதியுடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட முதல் ராயல் என்பீல்டு நிறுவன மோட்டார் சைக்கிள் என்ற பெருமையை கிளாசிக் 350 சிக்னல்ஸ் பெற்றது.

ஆனால் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களில், ஏபிஎஸ் வசதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் அதிருப்தியடைந்தனர்.

இதுதவிர கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிள்களின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.1.62 லட்சம் மட்டுமே. ஆனால் பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.2.40 லட்சம். கிளாசிக் 350 சிக்னல்ஸ் மோட்டார் சைக்கிள்களுடன் ஒப்பிடுகையில் இதன் விலை சுமார் ரூ.80 ஆயிரம் அதிகம்.

எனவே 'பிரத்யேகம்', 'தனித்துவம்' என்ற பெயர்களில், ராயல் என்பீல்டு நிறுவனம் எங்களை ஏமாற்றி விட்டது என பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் புகார் தெரிவிக்க தொடங்கினர். இதனால் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டது.

அதிருப்தியின் உச்சகட்டத்தில் இருந்த 2 பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்கள், தங்கள் மோட்டார் சைக்கிள்களை குப்பையில் வீசினர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியானதால், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு தலைகுனிவு ஏற்பட்டது.

எனவே பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள்களை திரும்ப பெற ராயல் என்பீல்டு முடிவு செய்திருப்பதாக ஒரு சில நாட்களுக்கு முன், அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியானது. இந்த சூழலில், பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்களை, ராயல் என்பீல்டு டீலர்கள் தொடர்பு கொள்ள தொடங்கியுள்ளனர்.

இதன்படி சென்னை, குர்கான், சண்டிகர், பெங்களூரு, ஜெய்ப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பெகாசஸ் 500 எடிசன் உரிமையாளர்களுக்கு, ராயல் என்பீல்டு டீலர்களிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்துள்ளது. கோவாவை சேர்ந்த சில உரிமையாளர்களும் கூட அழைக்கப்பட்டுள்ளனர்.

பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களில் ஒருவரான அனூஜ் சிங் என்பவர் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். நொய்டாவை சேர்ந்த இவர், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் 60 பேருடன் தொடர்பில் இருக்கிறார்.

இதன்மூலம்தான் டீலர்கள் அழைக்கும் தகவல் அனூஜ் சிங்கிற்கு தெரியவந்துள்ளது. இதனிடையே பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களை அழைக்கும் ராயல் என்பீல்டு நிறுவன டீலர்கள் மூன்று ஸ்கீம்களை தெரிவிக்கின்றனர்.

இதில் முதலாவது ஸ்கீம், பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளை அப்படியே திரும்ப எடுத்து கொள்வது. இதன்படி மோட்டார் சைக்கிளை டீலர் வாங்கி கொள்வார். மோட்டார் சைக்கிளுக்கு செலுத்தப்பட்ட முழு பணமும், உரிமையாளருக்கு திரும்ப வழங்கப்பட்டு விடும்.

அதன்பின் அந்த மோட்டார் சைக்கிள்கள், டீலர்ஷிப்பில் காட்சிக்கு வைக்கப்படும். அந்த மோட்டார் சைக்கிளின் மீது ஆர்வம் உள்ள வேறு வாடிக்கையாளர்கள் யார் வேண்டுமானாலும், பணத்தை செலுத்தி விட்டு, அதனை வாங்கி கொள்ளலாம்.

இரண்டாவது ஸ்கீம், ஒரு வருட இன்சூரன்ஸ் மற்றும் 2 இலவச சர்வீஸ்கள். மூன்றாவது ஸ்கீம் எக்ஸ்சேஞ்ச். இதன்படி பெகாசஸ் 500 எடிசனை கொடுத்து விட்டு, அதற்கு பதிலாக ஸ்டெல்த் பிளாக் 500 ஏபிஎஸ் அல்லது டெசர்ட் ஸ்ட்ரோம் 500 ஏபிஎஸ் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு மோட்டார் சைக்கிளை பெற்று கொள்ளலாம்.

தற்போது வரை ஒரு சில பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்கு மட்டுமே அழைப்பு வந்துள்ளது. வெகு விரைவில் அனைவருக்கும் அழைப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலமாக இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண ராயல் என்பீல்டு முடிவு செய்துள்ளது.
ராயல் என்பீல்டு பெகாசஸ் 500 எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications