இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஸ்கோமாடி ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியாவில் கால் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த 2005ம் ஆண்டு ஸ்கோமாடி நிறுவனம் துவங்கப்பட்டது. ஸ்கூட்டர் தயாரிப்பில் 60 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க பிராஃங்க் சாண்டர்சன் மற்றும் பால் மெலிசி ஆகிய நிறுவனங்களின் கூட்டணியில் ஸ்கூட்டர் தயாரிப்பை துவங்கியது.
இங்கிலாந்து மட்டுமின்றி, ஐரோப்பிய, ஆசிய நாடுகளில் ஸ்கோமாடி ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான வர்த்தக வாய்ப்பு உணர்ந்து கொண்டு தனது ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதற்காக, இந்தியாவை சேர்ந்த ஏஜே பெர்ஃபார்மென்ஸ் நிறுவனத்துடன் ஸ்கோமாடி ஸ்கூட்டர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதாக ஆட்டோகார் இந்தியா தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
புனே நகரை சேர்ந்த ஏஜே பெர்ஃபார்மென்ஸ் நிறுவனம் தற்போது கார்களை இறக்குமதி செய்து தருவது மற்றும் பெர்ஃபார்மென்ஸை கூட்டுவதற்கான பாகங்களை இறக்குமதி செய்து தரும் வர்த்தகத்தில்ல ஈடுபட்டு இருக்கிறது.
இந்த நிலையில், ஸ்கோமாடி ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் பொறுப்பை ஏஜே பெர்ஃபார்மென்ஸ் ஏற்றுக் கொள்ள இருக்கிறது. முதலாவதாக, ஸ்கோமாடி நிறுவனத்தின் 125சிசி ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஸ்கோமாடி டிடி125 என்ற மாடல்தான் முதலாவதாக வர இருப்பதாக தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் தாய்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்த ஸ்கூட்டரில் 124.6சிசி 2 வால்வு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அப்ரிலியா நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது. இந்த எஞ்சினுக்கான ஃப்யூவல் சிஸ்டம் டெல்பி நிறுவனம் வழங்ககுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 11 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது.
இந்த எஞ்சினை ரீமேரப் செய்து கொள்ளும் வசதி, உயர் வகை புகைப்போக்கி அமைப்பு மற்றும் சக்தி வெளிப்படுத்தும் திறனை 15 பிஎச்பி வரை கூட்டும் வாய்ப்புகளையும் ஸ்கோமாடி நிறுவனம் வழங்கும்.
புதிய ஸ்கோமாடி டிடி125 ஸ்கூட்டரில் காயில் ஸ்பிரிங் கொண்ட டபுள் ஹைட்ராலிக் ப்ரீலோடு அட்ஜெஸ்ட்டபிள் ஷாக் அப்சார்பர் முன்புறத்திலும், 4 பிஸ்டன்கள் கொண்ட அட்ஜெஸ்ட்டபிள் காயில் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்கள் பின்புறத்திலும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த ஸ்கூட்டரில் 12 அங்குல அலாய் சக்கரங்கள் மற்றும் பைரெல்லி ட்யூப்லெஸ் டயர்கள் இடம்பெற்றுள்ளன.
ஸ்கோமாடி டிடி125 ஸ்கூட்டரில் முன்சக்கரத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 200மிீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் உள்ளது. இந்த ஸ்கூட்டர் 100 கிலோ எடை கொண்டது. 11 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொள்திறன் உடையது.
இந்த ஸ்கூட்டரை வாடிக்கையாளர்கள் விருப்பம்போல் கஸ்டமைஸ் செய்து கொள்வதற்கான வாய்ப்பையும் ஸ்கோமாடி வழங்கும். பெயிண்ட், விண்ட்ஸ்கீரின், கிராஷ் கார்டு உள்ளிட்ட கூடுதல் ஆக்சஸெரீகளும் வாடிக்கையாளர்கள் வாங்கி பொருத்த முடியும்.
வெஸ்பா போன்றே பாரம்பரிய டிசைன் தாத்பரியத்திலான ஸ்கோமாடி ஸ்கூட்டர்கள் செயல்திறன் மிக்க ஸ்கூட்டர் மாடலை விரும்புவோருக்கு சரியான தேர்வாக அமையும். இந்த ஸ்கூட்டர் ரூ.1.98 லட்ம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அடுத்து சக்திவாய்ந்த டிடி200 ஸ்கூட்டரும் வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark