சுஸுகி வி- ஸ்ட்ரோம்650 எக்ஸ்டி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!
சுஸுகி வி- ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. நீண்ட தூர சாகச பயணங்களுக்கு ஏற்ற அம்சங்களுடன் மோட்டார்சைக்கிள் மாடலாக வந்துள்ளது.
சுஸுகி வி- ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அட்வென்ச்சர் மற்றும் அட்வென்ச்சர் டூரர் ரக பைக் மாடல்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனால், இந்த செக்மென்ட்டுகளை குறிவைத்து பல புதிய மாடல்கள் வரிசை கட்டி வருகின்றன. அந்த வகையில், லேட்டஸ்ட் வரவு சுஸுகி வி- ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி மோட்டார்சைக்கிள்.

சுஸுகி வி- ஸ்ட்ரோம் 1000 மோட்டார்சைக்கிளின் டிசைன் தாத்பரியங்களுடன் நீண்ட தூர சாகச பயணங்களுக்கு ஏற்ற அம்சங்களுடன் மோட்டார்சைக்கிள் மாடலாக வந்துள்ளது. ஆஃப்ரோடுகளிலும், சாதாரண சாலைகளிலும் மிக சவுகரியமான பயணத்தை வழங்கும் விதத்தில் இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் V வடிவ இரட்டை சிலிண்டர்கள் கொண்ட 645சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 62.3 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லது. நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற விதத்தில், இதன் கியர்பாக்ஸ் ரேஷியோ கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் வயர் ஸ்போக் சக்கரங்கள் மற்றும் பிரிட்ஜ்ஸ்டோன் நிறுவனத்தின் பேட்லாக்ஸ் அட்வென்சச்சர் ஏ-40 டயூப்லெஸ் டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷனும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன.

இந்த பிரிமியம் அட்வென்ச்சர் டூரர் பைக்கில் முன்சக்கரத்தில் 310 மிமீ விட்டமுடைய இரண்டு டிஸ்க் பிரேக்குகளும், பின்சக்கரத்தில் 260 மிமீ டிஸ்க்கும் கொண்ட பிரக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு தொழில்நுட்பமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் மூன்று நிலைகளில் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதியுடன் கூடிய விண்ட் ஸ்க்ரீன் கண்ணாடி உள்ளது. ஈஸி ஸ்டார்ட் சிஸ்டம், டிஜிட்டல்- அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 3 ஸ்டேஜ் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இந்த பைக்கின் முக்கிய சிறப்பம்சங்களாக கூறலாம்.

இந்த பைக்கிற்கான முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஹயபுசா மற்றும் ஜிஎஸ்எக்ஸ்-எஸ்750 ஆகிய பிரிமியம் ரக பைக்குகளின் வரிசையில், இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட இருக்கும் மூன்றாவது சுஸுகி பைக் மாடல் இதுவாகும்.

புதிய சுஸுகி வி- ஸ்ட்ரோம் 650 எக்ஸ்டி பைக் ரூ. 7.46 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ரூ.50,000 முன்பணத்துடன் இந்த பைக்கிற்கு ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த பைக் கவாஸாகி வெர்சிஸ் 650 பைக்கிற்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








