அரசு பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பிய போதை வாலிபர்கள்.. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வீடியோ
மதுரை அருகே குடிபோதையில் மூன்று வாலிபர்கள் பயணம் செய்த பைக், எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது. பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மதுரை அருகே குடிபோதையில் மூன்று வாலிபர்கள் பயணம் செய்த பைக், எதிரே வந்த அரசு பஸ் மீது மோதியது. பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் மூவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுசூதனன், சுகுமார், அர்ஜூன். இவர்கள் மூவரும் கடந்த 16ம் தேதி, மேலக்கல் அருகே உள்ள தேனூர் சந்திப்பு பகுதியில், பைக்கில் சென்று கொண்டிருந்தனர். இதில், மதுசூதனன்தான் பைக்கை ஓட்டி சென்றார்.

இரு சக்கர வாகனம் இருவருக்கு மட்டுமே என்பதை மறந்து, மூவரும் ஒரே பைக்கில் பயணம் செய்துள்ளனர். அத்துடன் யாரும் ஹெல்மெட்டும் அணியவில்லை. அத்துடன் தி நியூஸ் மினிட் வெளியிட்டுள்ள செய்தியின்படி மூவரும் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மதுசூதனன் பைக்கை அதிவேகத்தில் ஓட்டி சென்றார். அப்போது அங்குள்ள ஒரு வளைவில் திரும்பும்போது, திடீரென எதிரே அரசு பஸ் ஒன்று வந்தது. ஆனால் அதிவேகத்தில் வந்ததால், மதுசூதனனால் பைக்கை கட்டுப்படுத்த முடியவில்லை.

இதன் காரணமாக பஸ் மீது பைக் அதிவேகத்தில் மோதியதால், மூவரும் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டு கீழே விழுந்தனர். ஆனால் பஸ் டிரைவர் நாகேந்திரன் சாமர்த்தியமாக செயல்பட்டு உடனடியாக பஸ்ஸை நிறுத்தி விட்டார். இல்லாவிட்டால் மூவர் மீதும் பஸ் ஏறியிருக்கும்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவ்வாறு நடக்கவில்லை. முன்னதாக அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, படுகாயம் அடைந்த மூவரையும் மீட்டனர். அவர்கள் மூவருக்கும் தற்போது, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே அங்கிருந்த சிசிடிவி கேமரா ஒன்றில், இந்த விபத்து பதிவாகியிருந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நெஞ்சை பதைபதைக்க வைக்கும் அந்த வீடியோ காட்சியை நீங்கள் கீழே காணலாம்.
உடனடியாக பஸ்ஸை நிறுத்தி டிரைவர் நாகேந்திரன் சாமர்த்தியமாக செயல்பட்டதாலேயே, மூவரும் தற்போது உயிர் பிழைத்துள்ளனர். இந்த பஸ் மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து காடுப்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதனிடையே இந்த விபத்து குறித்து சோழவந்தான் காவல் நிலையத்தில், பஸ் டிரைவர் நாகேந்திரன் புகார் அளித்தார். இதன்பேரில், 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ''விபத்தில் படுகாயம் அடைந்த மூவருக்கும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் அதிவேகத்தில் பயணம் செய்துள்ளனர். ஹெல்மெட்டும் அணியவில்லை.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் மதுசூதனனை கைது செய்ய திட்டமிட்டுள்ளோம். அதன்பின் அவரிடம் விசாரணை நடத்தப்படும். ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்த மற்ற இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது'' என்றார்.

இந்தியாவில் விபத்துக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இங்கு ஒரு ஆண்டுக்கு மட்டும் சாலை விபத்துக்களினால் சராசரியாக 1.50 லட்சம் பேர் உயிரிழந்து வருகின்றனர். போக்குவரத்து விதிமுறைகளை மீறுவதே சாலை விபத்துக்களுக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

மதுசூதனன், சுகுமார், அர்ஜூன் ஆகியோரும், போக்குவரத்து விதிகளை மீறிதான் பயணம் செய்துள்ளனர். அத்துடன் அவர்கள் குடிபோதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் உயிர் தப்பியுள்ளனர். ஆனால் இதுபோன்ற போக்குவரத்து விதிமீறல்களே சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கின்றன.
More from DriveSpark
ராயல் என்பீல்டு கிளாசிக் 350 சிக்னல்ஸ் எடிசன் மோட்டார் சைக்கிளின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications








