ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு நூதன தண்டனை வழங்கும் தமிழக போலீசார்
ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தமிழக போலீசார் நூதன தண்டனை வழங்கி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தமிழக போலீசார் நூதன தண்டனை வழங்கி வருகின்றனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும், சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவிலான சாலை விபத்துக்கள் நிகழ்கின்றன.

இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் சாலை விபத்துக்களினால் அதிகம் உயிரிழக்கின்றனர். ஹெல்மெட் அணியாததே இதற்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி, பின்னால் அமர்ந்து பயணம் செய்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது.

ஆனால் தமிழகத்தில் அதனை பெரும்பாலானோர் பின்பற்றுவது இல்லை. இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக அரசின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் எதற்கும் பயன் இல்லை. போலீசார் அதிகப்படியான அபராதம் விதித்தாலும் ஒரு சிலர் அதனை எளிதாக கட்டி விட்டு செல்கின்றனர். இந்த சூழலில் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை சென்னை போலீசார் வழங்கியுள்ளனர்.

ஹெல்மெட் அணியாமல் பயணித்த இரு சக்கர வாகன ஓட்டிகளை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். விபத்தினால் பாதிக்கப்பட்ட பலர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்கள் படும் துயரத்தை, ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்களுக்கு போலீசார் எடுத்துரைத்தனர். அந்த நேரத்தில், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களின் குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் அவசர சிகிச்சை பிரிவுக்கு வெளியே காத்திருந்தனர்.

தாங்கள் மிகவும் விரும்பிய நபர்களின் உடல் நிலை என்ன? என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று தவிப்பு அவர்கள் முகத்தில் தென்பட்டது. அந்த இறுக்கமான சூழ்நிலையை, ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்கள் கண்டனர்.

அத்துடன் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து உயிரிழந்தவர்களின் சடலமும் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காவிட்டால் இந்த நிலைதான் நேரும் என்பதை உணர்த்தவே இந்த வித்தியாசமான நடவடிக்கையை சென்னை போலீசார் மேற்கொண்டனர்.

பொதுவாக தமிழக போலீசில் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது என்ற புகார் உள்ளது. குறிப்பாக வாகன தணிக்கையின்போது, போலீசார் வசூல் வேட்டையில் இறங்கி விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டு அனைத்து வாகன ஓட்டிகளாலும் பொதுவாக முன்வைக்கப்படுகிறது.

இந்த சூழலில் சென்னை போலீசார் மேற்கொண்ட வித்தியாசமான முயற்சி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்மூலம் விபத்தில் சிக்கினால் எவ்வளவு விபரீதங்களை எதிர்கொள்ள வேண்டியது வரும் என்ற வலுவான செய்தி வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
டாடா டியாகோ என்ஆர்ஜி காரின் புகைப்பட ஆல்பத்தை நீங்கள் இங்கே காணலாம்.


Click it and Unblock the Notifications