புதிய டிவிஎஸ் அப்பாச்சி 160 4வி பைக்கில் வியப்பில் ஆழ்த்தும் டாப் 10 தொழில்நுட்பங்கள்!
டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் இடம்பெற்று இருக்கும் சிறப்பான தொழில்நுட்ப விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.
கடந்த 14ந் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் பல்வேறு நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன. ரேஸ் பைக்குகளில் பார்க்கக்கூடிய சில தொழில்நுட்பங்களையும் சேர்த்துள்ளது டிவிஎஸ். இந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

ரேஸ் பைக் எஞ்சின் நுட்பம்
தேசிய அளவிலான பைக் பந்தயங்களில் 6 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற டிவிஎஸ் ஆர்டிஆர் 165 புரோட்டோடைப் பைக்கின் எஞ்சினில் இருக்கும் பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இந்த புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

4 வால்வு எஞ்சின்
vஇந்த பைக்கின் எஞ்சின் சிலிண்டர் 4 வால்வு அமைப்புடன் வந்திருப்பது மிகச் சிறப்பான செயல்திறனுக்கு உதவும். இதுவும் இந்த பைக்கின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.

எஞ்சின் குளிர்விப்பு நுட்பம்
புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கின் ஆயில்கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சினில் ராம்- ஏர் அசிஸ்ட் என்ற அமைப்பு இடம்பெற்று இருக்கிறது. பைக் அதிவேகத்தில் செல்லும்போது எஞ்சின் சூடாவதை இந்த ராம்- ஏர் அசிஸ்ட் அமைப்பானது 10 டிகிரி வரை குறைக்கும்.

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் மாடல்
பெட்ரோல் டேங்கிற்கு பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் கவுல் அமைப்பில் கொடுக்கப்பட்டு இருக்கும் துளைகள் வழியாக இந்த ராம்- ஏர் அசிஸ்ட் அமைப்பிற்கு காற்று உட்செலுத்தப்படுகிறது. இந்த பைக்கின் எஞ்சின் கார்புரேட்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் தேர்வுகளில் கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய சேஸீ
இந்த பைக்கில் டபுள் க்ராடில் க்ரோனோ ஸ்டிஃப் சேஸீஸ் என்ற வலிமையான புதிய அடிச்சட்ட அமைப்பில் கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அடிச்சட்டத்தின் மூலமாக பைக்கின் நிலைத்தன்மை 25 சதவீதம் வரை மேம்பட்டு இருக்கும் என டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஷோவா சஸ்பென்ஷன்
புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் ரேஸ் பைக்குகளில் பயன்படுத்தப்படுவதற்கு இணையாக ட்யூன் செய்யப்பட்ட ஷோவா சஸ்பென்ஷன் அமைப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பர் சஸ்பென்ஷன் கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண சாலை மற்றும் பந்தய களங்களில் இந்த சஸ்பென்ஷன் மிகச் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தும்.

இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்
புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கில் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்தப்பட்டு இருக்கிறது. சாவியை போட்டு இக்னிஷனை ஆன் செய்தவுடன் இதன் திரையில், '3 - 2 -1 - GO - Race ON' என்று காண்பிக்கிறது.

அத்துடன், இந்த பைக்கில் பந்தய களத்தை ஒரு சுற்று வருவதற்கு ஆகும் நேரத்தை கணக்கிடுவதற்கான லேப் டைமர், 0 - 60 கிமீ வேகத்தை எவ்வளவு வினாடிகளில் தொடுகிறது என்பதை பார்ப்பதற்கான வசதி மற்றும் அதிகபட்ச வேகத்தை தொடுவதை பதிவு செய்வதற்கான ஸ்பீடு ரெக்கார்டர் வசதிகள் உள்ளன.

பைரெல்லி டயர்கள்
புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் பைரெல்லி டயர்கள் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. டிவிஎஸ் அப்பாச்சி பைக்கின் முன்சக்கரத்தில் 90/90 டயரும், பின்சக்கரத்தில் 130/70 டயரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 17 அங்குல சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பெட்டல் டிஸ்க் பிரேக்
இந்த பைக்கின் முன்சக்கரத்தில் 270மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 200மிமீ பெட்டல் டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆப்ஷனலாக கூட கொடுக்கப்படவில்லை.

டபுள் பேரல் புகைப்போக்கி
புதிய டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக்கில் டபுள் பேரல் புகைப்போக்கி அமைப்பு இடம்பெற்று இருக்கிறது. இதன்மூலமாக சிறப்பான செயல்திறனையும், தனித்துவமான புகைப்போக்கி சப்தத்தையும் இந்த பைக் பெற்றிருக்கிறது.

எல்இடி ரன்னிங் விளக்குகள்
புதிய அப்பாச்சி 160 பைக்கில் எல்இடி பகல்நேர விளக்குகள் மற்றும் எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. பெட்ரோல் டேங்க் பகுதியில் செக்கர்டு ஃபளாக் என்ற பந்தய களங்களில் பயன்படுத்தப்படும் கொடி போன்ற ஸ்டிக்கரும் இடம்பெற்று இருக்கிறது.

விலை
அனைத்து தொழில்நுட்ப அம்சங்களுடன் கொண்ட டாப் வேரியண்ட்டானது ரூ.89,990 எக்ஸ்ஷோரூம் விலையில் வந்துள்ளது. போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில், இது நிச்சயம் மிக சவாலான விலையாகவே இருக்கிறது.

சிறப்பான தேர்வு
புதிய அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி பைக் பல்வேறு விதத்திலும் மிகச் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்களை பெற்றிருக்கிறது. குறைவான விலையில் ரேஸ் பைக் அம்சங்களுடன் கூடிய பைக்கை விரும்பும் இளைஞர்களுக்கு இந்த பைக் சிறந்த தேர்வாக அமையும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications








