எலக்ட்ரிக் ஸ்டார்ட், சார்ஜர் என நவீன வசதிகளுடன் கூடிய டிவிஎஸ் XL 100 மொபட் அறிமுகம்!
எலக்ட்ரிக் ஸ்டார்ட், சார்ஜர் என நவீன வசதிகளுடன் கூடிய XL 100 ஐ-டச் ஸ்டார்ட் மொபட்டை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.
எலக்ட்ரிக் ஸ்டார்ட், சார்ஜர் என நவீன வசதிகளுடன் கூடிய XL 100 ஐ-டச் ஸ்டார்ட் மொபட்டை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை பின்வரும் ஸ்லைடர்களில் காணலாம்.

டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின், எக்ஸ்எல் 100 (TVS XL 100) ஹெவி டியூட்டி மொபட், 2018ம் ஆண்டிற்காக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வெர்ஷனுக்கு 'ஐ-டச் ஸ்டார்ட்' (i-Touch start) என்று டிவிஎஸ் மோட்டார் கம்பெனி பெயரிட்டுள்ளது.

1980ம் ஆண்டு முதல் விற்பனையாகி வரும் டிவிஎஸ் XL மொபட் இன்றளவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகவே உள்ளது. கடந்த மே மாதம் மட்டும் 73,067 டிவிஎஸ் XL மொபட்டுகள் விற்பனையாகி இருப்பதே அதற்கு சாட்சி. குறிப்பாக சிறு நகரங்கள், கிராமங்களில் டிவிஎஸ் XL அதிகமாக விற்பனையாகிறது.

எனினும் டிவிஎஸ் XL மொபட்டிற்கு மிக அதிக வயதாகி விட்டதால், பல புதிய நவீன வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட 'ஐ-டச் ஸ்டார்ட்' வெர்ஷனை டிவிஎஸ் மோட்டார் கம்பெனி களமிறக்கியுள்ளது. 'ஐ-டச் ஸ்டார்ட்' வெர்ஷனில் எலக்ட்ரிக் ஸ்டார்ட், யூஎஸ்பி சார்ஜர் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன.

அரசின் புதிய விதிகளுக்கு ஏற்ப, பிஎஸ்-IV இன்ஜின் மற்றும் பகல் நேரத்திலும் எரியும் எல்இடி விளக்குகள் என எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி மொபட் கடந்த ஆண்டில் அப்கிரேட் செய்யப்பட்டது. அந்த வகையில் பார்த்தால், தற்போது 2வது மிகப்பெரிய அளவிலான அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இதன் டிசைனில் மாற்றங்கள் செய்யப்படவில்லை. எனினும் 'ஐ-டச் ஸ்டார்ட்' வெர்ஷனில், மைனரல் பர்ப்பிள் மற்றும் காப்பர் ஷைன் என 2 புதிய நிறங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே ரெட், பிளாக், க்ரீன் மற்றும் க்ரே ஆகிய நிறங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபட்டில், 99.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 4 பிஎச்பி பவரையும், 6.5 என்எம் டார்க் திறனையும் வழங்கவல்லது. இந்த மொபட்டின் மொத்த எடை 86 கிலோ மட்டும்தான் என்பது கவனித்தக்கது.

இந்த மொபட்டில் லிட்டருக்கு 67 கிலோ மீட்டர்கள் மைலேஜ் கிடைக்கும் என டிவிஎஸ் நிறுவனம் கூறுகிறது. புதிய 'ஐ-டச் ஸ்டார்ட்' வெர்ஷனின் விலை 36,109 ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). ஆனால் இதில் டிஸ்க் பிரேக் இல்லை.

முன்பகுதியில் 80 எம்எம், பின்பகுதியில் 110 எம்எம் ட்ரம் பிரேக் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிலோ மீட்டர்கள். தற்போது நாட்டின் பல பகுதிகளில் உள்ள டிவிஎஸ் டீலர்ஷிப்களில், புதிய 'ஐ-டச் ஸ்டார்ட்' வெர்ஷன் விற்பனை தொடங்கியுள்ளது.

புதிய 'ஐ-டச் ஸ்டார்ட்' வெர்ஷனின் விற்பனை அதிகளவில் நடக்கும் என டிவிஎஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 'ஐ-டச் ஸ்டார்ட்' என்ற புதிய பிரீமியம் வெர்ஷன் தவிர, கம்போர்ட் மற்றும் சூப்பர் ஹெவி டியூட்டி என்ற வேரியண்ட்களிலும் எக்ஸ்எல் 100 மொபட் கிடைக்கிறது. இந்த மொபட்டுக்கு சந்தையில் நேரடி போட்டி என எந்த டூவீலரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்


Click it and Unblock the Notifications








