விரைவில் வருகிறது டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்
டிவிஎஸ் ஜுபிடர் கிராண்ட் எடிசன் என்ற புதிய சிறப்பு பதிப்பு மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, டிவிஎஸ் ஜுபிடர் ஸ்கூட்டரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் கொண்டு வரப்பட இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஸ்கூட்டரில் இடம்பெற இருக்கும் சிறப்பம்சங்கள் மற்றும் படங்களை இந்த செய்தியில் காணலாம்.

டிவிஎஸ் ஜுபிடர் கிராண்ட் எடிசன் என்ற பெயரில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் பல்வேறு பிரிமியம் அம்சங்கள் மற்றும் ஆக்சஸெரீகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

முன்புற அப்ரானின் மேற்புறத்தில் கிராண்ட் எடிசன் பேட்ஜ் பதிக்கப்பட்டு இருக்கிறது. ஃபுட்போர்டில் பீஜ் வண்ண பிளாஸ்டிக் பேனல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோன்று, லெதர் இருக்கையும் இந்த ஸ்கூட்டரின் மதிப்பை உயர்த்துகிறது.

ஜுபிடர் கிளாசிக் மாடலில் இருப்பது போலவே, இந்த ஸ்கூட்டடரில் மட்கார்டில் க்ரோம் பீடிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது நிச்சயம் இந்த ஸ்கூட்டரின் தனித்துவத்தை காட்டுவதோடு, பார்க்க பிரிமியம் ஸ்கூட்டர் போலவே தோற்றமளிக்கிறது.

புதிய டிவிஎஸ் ஜுபிடர் கிராண்ட் எடிசன் மாடலில் முழுவதுமான எல்இடி ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது. அனலாக் மானி மற்றும் மின்னணு திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரில் இருக்கும் 109.7சிசி எஞ்சின் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8 என்எம் டார்க் திறனையும் வழங்கும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. அராய் சான்றுபடி, இந்த ஸ்கூட்டர் லிட்டருக்ககு 56 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான தேர்வை வழங்கும் விதத்தில், இந்த சிறப்பு பதிப்பு மாடலை டிவிஎஸ் விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த ஸ்கூட்டர் விரைவில் அனைத்து டீலர்களுக்கும் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அறிமுகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை.

ஸ்கூட்டர் மார்க்கெட்டில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்து டிவிஎஸ் ஜுபிடர்தான் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருந்து வருகிறது. இந்த சூழலில், இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல் நிச்சயம் டிவிஎஸ் ஜுபிடருக்கு அதிக வாடிக்கையாளர்களை பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை.
Source:GaadiWaadi


Click it and Unblock the Notifications