பஸ் டிக்கெட் விலை உயர்விற்கு கார்பரேட் நிறுவனங்கள் காரணமா? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்...
இன்று இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்று போக்குவரத்து நெருக்கடி. பல்வேறு வகையான போக்குவரத்து வசதிகள் புதிது புதிதாக வந்தாலும் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே
இன்று இந்தியாவில் உள்ள மிக முக்கியமான பிரச்னைகளில் ஒன்று போக்குவரத்து நெருக்கடி. பல்வேறு வகையான போக்குவரத்து வசதிகள் புதிது புதிதாக வந்தாலும் போக்குவரத்து நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்தியாவில் உள்ளதை போல் மற்ற நாடுகளில் போக்குவரத்து நெருக்கடி அவ்வளவாக இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்தியாவில் குறிப்பாக டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து நெருக்கடிகள் மிகவும் அபாயகரமான நிலையில் உள்ளது. இவ்வாறான போக்குவரத்து நெருக்கடி அந்நகரங்களின் வளர்ச்சியை பெரும் அளவில் பாதிக்கிறது. இந்த போக்குவரத்து நெருக்கடியை கட்டாயமாக குறைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அரசு உள்ளது.

சமீபத்தில் பெங்களூருவில் வசிக்கும் ஒருவர்தான் வசிக்கும் பகுதியில் இருந்து தனது அலுவலகத்திற்கு செல்ல சுமார் 16 கி.மீ. பயணிக்க வேண்டும். அதற்கு அவர் தினமும் 3 மணி நேரம் அதாவது காலையில் அலுவலகத்திற்கு செல்ல 1.5 மணி நேரம், திரும்பி வர 1.5 மணி நேரம் செலவிடுவதாக தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் உள்ள டிராபிக்கிற்கு இது போன்ற நடப்பது சாதாரணமான ஒன்றுதான். பெங்களூருவில் பிரதானமான பொது போக்குவரத்து வசதி என்பது பஸ்கள்தான். சென்னை மற்றும் மும்பையில் எலெக்ட்ரிக் ரயில் போக்குவரத்து உள்ளது. டெல்லி மற்றும் கொல்கத்தாவில் பெரும்பாலான பகுதிகளை மெட்ரோ இணைக்கிறது.

பெங்களூருவில் மெட்ரோ வசதி இருந்தாலும் இது பெரும்பாலான பகுதிகளை இணைப்பது இல்லை. அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. அதனால் பெரும்பாலான மக்கள் பஸ்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இதனால் கூட்ட நெருக்கடி காரணமாக பலர் சொந்தமான வாகனங்களை வாங்கி பயன்படுத்த துவங்கி விட்டனர். இன்று பெரும்பாலான நகரங்களில் பொது போக்குவரத்தை பயன்படுத்துபவர்களை விட சொந்த வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாக உள்ளது.

இந்த பிரச்னை பெங்களூருவில் மட்டும் அல்லாது இந்தியா முழுவதும் உள்ளது. தற்போது அரசிற்கு பெரும் சவாலாக இருப்பது பொது போக்குவரத்தை எப்படி அதிகரிப்பது மற்றும் சொந்த வாகனம் பயன்படுத்துபவர்களை எப்படி பொது போக்குவரத்திற்கு கொண்டு வருவது என்பதுதான்.

சொந்த வாகனம் பயன்படுத்தும் பலர் பொது போக்குவரத்தை வெறுப்பதற்கு முக்கியமான காரணம் கூட்ட நெரிசலும், செலவும் தான். இன்று பெரும்பாலான பெருநகரங்களில் பொது வாகனங்கள் போதுமான அளவிற்கு இல்லை. இதனால் கூட்ட நெரிசல் பெரும்பாலான வாகனங்களில் உள்ளது.

அதே போல் இன்று பொது வாகனங்களுக்கு உள்ள விலையும் மிக அதிகமாக உள்ளது. சொந்த வாகனத்தில் பயணம் செய்வதற்கு ஆகும் செலவும், பொது வாகனத்தில் பயணம் செய்வதற்கு ஆகும் செலவும், ஏறக்குறைய ஒரே மாதிரியாகவோ அல்லது பொது வாகனங்களை விட சொந்த வாகனங்களில் சில நேரங்களில் குறைவாகவோ செலவாகிறது.

இவ்வாறாக சொந்த வாகன பயன்பாடு அதிகரித்து வருவதால் இந்தியாவில் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையின் அளவுகளும் அதிகரித்துள்ளது. தற்போது வாகனங்களால் ஏற்படும் மாசுவில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது அரசு வரும் 2030ம் ஆண்டிற்குள் பெரும் அளவில் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ளது.

உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்தியாவில் முதல் 10 கோடி வாகனங்கள் விற்பனையாக சுமார் 60 ஆண்டுகள் எடுத்துக்கொண்டன. ஆனால் அந்த 10 கோடி 20 கோடியாக அதிகரிக்க வெறும் 7 ஆண்டுகள்தான் ஆனது. 10 ஆண்டுகளில் அது 30 கோடியாக மாறிவிட்டது. சொந்தமாக வாகனம் வைத்திருப்பது என்பது இன்றைய மக்களின் வாழ்க்கை முறையில் அடிப்படை தேவையில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்தியா முழுவதும் தான் வாகனங்கள் விற்பனையாகிறது. ஆனால் பெரு நகரங்களில் மட்டும்தான் அதிக அளவிற்கு போக்குவரத்து நெருக்கடி இருக்கிறதே என கேட்கிறீர்களா? இந்திய மக்கள் தற்போது நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டே வருகின்றனர்.

கடந்த 2011ம் ஆண்டு கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை புள்ளி விபரங்களின் படி இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 3ல் 1 பங்கு மக்கள் நகரங்களிலேயே வசிக்கின்றனர். மேலும் ஒரு ஆய்வு இது 2050ம் ஆண்டு இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதமானோர் பெரு நகரங்களிலேயே வசிப்பார்கள் என கூறுகிறது.

பொதுவாக 30 கார்களில் பயணிக்கும் அளவிலான பயணிகள், ஒரு பஸ்ஸில் பயணிக்கிறார்கள். தற்போது கார்களில் செல்பவர்கள் பொது வாகனங்களில் சென்றால் அந்த கார்கள் மூலம் ஏற்படும் மாசு மற்றும் அதற்காக ஆகும் எரிபொருள் செலவு எல்லாம் 30 கார்களை பயன்படுத்துவதை காட்டிலும் 6ல் ஒரு பங்கு தான் செலவாகும் என அறிக்கை கூறுகிறது.

தற்போது ஒட்டு மொத்த போக்குவரத்திற்கான எரிபொருள் பயன்பாட்டில் 2013 அறிக்கையின்படி 13 சதவீதம் கார்களுக்கு பயன்படுகிறது. இது 2040ல் 27 சதவீதமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு எல்லாம் முக்கிய காரணம் மக்கள் மத்தியில் கார்களை வாங்க வேண்டும் என்ற கனவு அதிகரிப்பதுதான்.

அதே நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் கர்நாடக மாநில அரசு தற்போது பெங்களூரு நகரில் 6,500 பஸ்கள் இயக்கப்படுவதாகவும், இன்னும் பஸ்களை அதிகரிக்க ரோட்டில் இடம் இல்லை எனவும் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் தினமும் பெங்களூருவில் மட்டும் சுமார் 300 வாகனங்கள் விற்பனையாகி வருகின்றன. அதுவும் அதே ரோட்டில்தான் இயங்கி வருகிறது.

பெங்களூருவில் மெட்ரோ இன்னும் சரிவர இணைக்கப்படவில்லை. இதனால் மெட்ரோவில் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. பெங்களூரு மெட்ரோவில் தினமும் பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையை விட 12 மடங்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் பெங்களுரு பஸ்களில் பயணிக்கின்றனர்.

இந்தியாவில் டெல்லியில் தான் மக்கள் அதிகம் மெட்ரோ ரயிலை பயன்படுத்துகின்றனர். 2002ம் ஆண்டு முதன் முதலில் துவங்கப்பட்ட மெட்ரோ இன்று டில்லி நகரில் சுமார் 425 கி.மீ., தூரத்திற்கு கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் போக்குவரத்து நெருக்கடிக்கு மெட்ரோ பெரிய தீர்வை தந்து விடாது. லக்னோ, ஜெய்ப்பூர், கொச்சி, சென்னை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ வசதிகள் வந்த பின்பும், மக்களிடம் அதற்கு போதிய வரவேற்பு இல்லை.

எதிர்பார்த்ததை விட குறைவான மக்களே அதை பயன்படுத்துகின்றனர். தற்போது மத்திய உள்துறை, மெட்ரோ பணிகளுக்காக சுமார் 14,300 கோடியை ஒதுக்கியுள்ளது.

மேலும் மெட்ரோவிற்கு அதிகமாக செலவாகிறது. அதை செலுத்தும் அளவிற்கு வருமானம் உள்ளவர்களே அதில் பயணிக்க முற்படுவார்கள். அதனால் ஏழைகளுக்கு பயணங்களில் மெட்ரோ பெரிய மாற்றங்களை எல்லாம் செய்து விடாது.

இருந்தாலும் போக்குவரத்து நெருக்கடிக்கு சில மாற்றங்களை செய்யும் மெட்ரோவை தவிர போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் மற்ற வழிகளையும் ஆராய வேண்டும்.

மும்பையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தாக மின்சார ரயில் போக்குவரத்துதான் உள்ளது. அது அரசு எதிர்பார்த்தை விட அதிகமாக மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதனால் ரயில்கள் எப்பொழுதும் கூட்டமாவே இருக்கும்.

கடந்த 2017ம் ஆண்டு ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலுக்கே 23 பேர் பலியான சம்பவங்கள் எல்லாம் உங்களுக்கு தெரியும். தற்போது மும்பையில் மெட்ரோ பயன்பாட்டை அதிகரிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அதற்காக சுமார் 12,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து நெருக்கடிக்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு வகையான போக்குவரத்தையும் ஒவ்வொரு துறை கையாள்வதுதான் என கூறப்படுகிறது பஸ்களை போக்குவரத்து துறையும், ரயில்களை ரயில்வே துறையும், மெட்ரோக்களை தனியாக ஒரு அமைப்பும் கையாள்கிறது.

இதற்கிடையில் இந்த மூன்றிற்கான கட்டுமான அமைப்புகளை முனிசிபல் கார்பரேஷன் கவனிக்கிறது. அதனால் அதிக இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. பஸ்கள், ரயில்கள் ,மெட்ரோக்களில் பயணிப்பவர்களின் பயண தகவல்களை சேகரித்து அதன் மூலம் மக்கள் எங்கிருந்து எங்கு, எந்த நேரத்தில் அதிகம் பயணிக்கிறார்கள்?

அவர்களுக்கு ஏற்படும் அசெளகரியம் என்ன? என்பதை புரிந்து அதற்கு தகுந்த நேரத்தில் பஸ்கள், ரயில்கள், மெட்ரோக்களின் நேரங்களையோ, பயண இடங்களையோ மாற்றியமைத்தால் பொதுமக்களுக்கும் செளகரியமாக இருக்கும். அரசிற்கும் வருமானம் அதிகரிக்கும் என ஆர்வலர்கள் பலர் கூறுகின்றனர்.

இதை மனதில் வைத்தே ஸ்மார்ட் சிட்டிகள் உருவாக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் சிட்டிகளில் உள்ள போக்குவரத்து வசதிகளில் ஒன்றொடு ஒன்று தொடர்பு இருக்கும் வகையில் வடிவமைக்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ஒரு நகருக்கு ஆண்டிற்கு ரூ.100 கோடி விதம் 5 ஆண்டுகளுக்கு உள்ளாட்சி மற்றும் மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.

தற்போது பொது வாகனங்களால் ஏற்படும் மாசுகளை கட்டுப்படுத்த அரசு மாற்று சக்தி கொண்ட வாகனங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இதன்படி தற்போது புனேவில் சுமார் 500 குளிரூட்டப்பட்ட எலெக்ட்ரிக் பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுமார் 150 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அந்த பஸ்களின் மதிப்பு தலா சுமார் 75 லட்சம்.

இது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். கடந்த சில ஆண்டுகளாக மக்கள் விருப்பம் செல்போன் ஆப்களில் புக் செய்யப்பட்டு இயக்கப்படும் கேப்கள் மீது சென்று விட்டது. ஓலா மற்றும் உபேர் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அதிக அளவில் கேப்களை இயக்கி வருகின்றன.

இந்த கேப்களின் வருகையால் ஆட்டோரிக்ஷா மற்றும் பைக்குகளின் பயன்பாடு சுமார் 20 சதவீதம் குறைந்து விட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இதற்கிடையில் குஜராத் அரசு சார்பில் தற்போது 20,000 கேப்களை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரக போக்குவரத்து வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள ஷேர் ரைடிங் எனும் ஆப்ஷன் தான். அதாவது நீங்கள் ஒருவர் மட்டும் ஒரு காரில் செல்கிறீர்கள் என்றால் நீங்கள் செல்லும் அதே ரூட்டிலோ அல்லது சற்று அதற்கு தொடர்பான ரூட்டிலோ மற்றொருவர் செல்ல விரும்பினால் நீங்கள் இருவரும் அந்த காரில் ஒன்றாக செல்லலாம்.

அதற்காக ஆகும் தொகையை பகிர்ந்து கொள்ளலாம். இந்தியாவில் பஸ்களுக்கான டிக்கெட் விலை அதிகமாக இருப்பதற்கு இது ோன்ற கேப் நிறுவனங்களின் மறைமுக தலையீடும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

இவ்வாறாக பயணிப்பதன் மூலம் மக்கள் குறைவான செலவையே சந்திக்கின்றனர். இதனால்தான் மக்கள் மத்தியில் இந்த ரக போக்குவரத்து பெரும் பிரபலமடைந்து வருகிறது.

இது எல்லாம் இப்பொழுது இருக்கும் போக்குவரத்து வசதி என்றால் எதிர்காலத்தில் நாம் எதை எல்லாம் காணப்போகிறோம் தெரியுமா? பறக்கும் கார்கள் தான் எதிர்காலத்தில் உலகை போக்குவரத்து துறையில் ஆளப்போகிறது. அதற்காக தற்போது உபேர், போயீங் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் கார்களை தயாரிக்கும் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

தற்போது இந்தியாவில் எந்த நகரமும் சிறப்பான போக்குவரத்து வசதியை பெற்றிருக்கவில்லை. அரசு போக்குவரத்து நெருக்கடியை குறைக்க பல்வேறு வகையிலான போக்குவரத்து வசதிகளை கொண்டு வர வேண்டும். அனைத்து போக்குவரத்தையும் ஒரு இடத்தில் கையாளும் சூழ்நிலை அமைக்க வேண்டும்.

முதற்கட்டமாக மக்களுக்கு தேவையானவற்றை உணர்ந்து அதற்கு தகுந்தார் போல் அவர்களுக்கு போக்குவரத்து வசதியை வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பு.


Click it and Unblock the Notifications