ஷோரூம்களுக்கு வந்து சேர்ந்த அப்ரில்லாவின் புதிய ஸ்டார்ம் 125 சிசி ஸ்கூட்டர்: முக்கிய விபரம்!
அப்ரில்லா நிறுவனத்தின் புதிய ஸ்டார்ம் 125 சிசி ஸ்கூட்டர் விற்பனைக்காக, அதன் டீலர்களை வந்தடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

பியாஜியோ நிறுவனத்தின் அப்ரில்லா பிராண்டில் வெளிவரும் வாகனங்களில், பைக்குகள்தான் உலகம் முழுவதிலும் புகழ்வாய்ந்தவையாக இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்களுக்குத்தான் மவுசு அதிகம். இதன்காரணமாகவே இந்த நிறுவனம், பைக்குகளைக் காட்டிலும் அதிகளவில் ஸ்கூட்டர்களையே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

அதேபோன்று, இத்தாலியன் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள், ஸ்போர்ட்ஸ் ரகத்தில் அதிக சக்தியைக் கொண்டிருப்பதால் இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனாலேயே, அந்த நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள், விற்பனையில் அமோகமான வளர்ச்சியைப் பெற்று வருகின்றது.

இந்த நிலையில், இந்த நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்த எஸ்ஆர் 125 மாடலை, ஸ்டார்ம் 125 என்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அண்மையில் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்த ஸ்கூட்டர்கள் தற்போது விற்பனைக்காக அதன் ஷோரூம்களை வந்தடைந்திருப்பதாக ரஷ்லேன் ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால், ஒரு வருட காத்திருப்பிற்கு பின் இந்த ஸ்கூட்டர்கள் இந்தியச் சாலையை கலக்க இருக்கின்றன. இந்த புத்தம் புதிய 2019 அப்ரில்லா ஸ்டார்ம் 125 ஸ்கூட்டரில், டிஸ்க் பிரேக்கிற்கு பதிலாக டிரம் பிரேக்குகள்தான் வழங்கப்பட்டுள்ளன. இது விலை குறைப்பிற்கான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேசமயம், வாடிக்கையாளர்களைக் கவர இந்த ஸ்கூட்டர்கள் புதிய வண்ணங்களில் களமிறக்கப்பட இருக்கின்றன.

அந்த வகையில், அவை மேட் பினிஸிங்கில் கருப்பு வண்ணத்திலான ஹைலைட்டைக் கொண்டுள்ளன. அவ்வாறு, இந்த ஸ்கூட்டர் மஞ்சள், சிவப்பு மற்றும் கருப்பு ஆகிய மூன்று நிறங்களில் களமிறங்க இருக்கின்றன. இத்துடன் நவீன வசதிகளாக, பேனிக் அலர்ட், நேவிகேஷன், அவசரகால உதவி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், ஸ்கூட்டர் தொலைந்தால்கூட எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.

அதேபோன்று, இந்த ஸ்கூட்டரை அவ்வளவு எளிதாக யாராலும் திருடிவிட முடியாது. அதற்குதான் பேனிக் அலர்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இது, ஸ்கூட்டரை யாரேனும் திருடும் எண்ணத்தில் அசைத்தால் அலர்ட் செய்ய ஆரம்பித்துவிடும். மேலும், இந்த ஸ்கூட்டரில் ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்டு ஆப்புகளை இணைக்கும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், ஸ்கூட்டர் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இத்துடன், ஸ்கூட்டரில் 7 லிட்டர் கொள்ளளவில் பெட்ரோலைச் சேமிக்கும் வகையில் டேங்க் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த அப்ரில்லா 125 ஸ்டார்ம் இளம் தலைமுறையினரை அதிகளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டரில் 124.49 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 9.5 எச்பி பவரையும், 9.9 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இத்துடன், இந்த எஞ்ஜினில் சிவிடி ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதன் 12 இன்ச் கொண்ட அலாய் வீல்களில், நல்ல ரைட் அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில், முன்பக்கத்தில் 120/80 அளவு கொண்ட டயரும், பின் பக்கத்தில் 130/80 அளவு கொண்ட டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் சஸ்பென்ஸனை பொருத்தவரை, டெலஸ்கோபிக் ஃபோர்க்ஸ் முன்பக்கத்திலும், மேனோஷாக் அப்சார்பர் பின்பக்கத்திலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புத்தம் புதிய நவீன அம்சங்களைக் கொண்ட ஸ்டார்ம் 125 ஸ்கூட்டருக்கு, இந்திய மதிப்பில் ரூ. 65 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








