2019 யமஹா எம்டி-03 மோட்டார் சைக்கிள் வெளியீடு... இந்தியாவிற்கு எப்போது வரும்?
பாங்காக் மோட்டார் வாகன கண்காட்சியில், 2019 யமஹா எம்டி-03 மோட்டார் சைக்கிள் வெளியிடப்பட்டுள்ளது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தாய்லாந்தில் நடைபெற்ற பாங்காங் மோட்டார் வாகன கண்காட்சியில், 2019 எம்டி-03 (Yamaha MT-03) ஸ்ட்ரீட்ஃபைட்டர் மோட்டார் சைக்கிள் மாடலை யமஹா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள யமஹா ஒய்இஸட்எஃப்-ஆர்3 (Yamaha YZF-R3) ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட எம்டி-03 பைக்கின் 2019 வெர்ஷன் புதிய வெள்ளை மற்றும் சிகப்பு நிற பெயிண்ட் ஸ்கீமை பெற்றுள்ளது.

தனது எம்டி ரேஞ்ச் மோட்டார் சைக்கிள்களுக்கு யமஹா நிறுவனம் செய்து வரும் 'டார்க் சைட் ஆஃப் ஜப்பான்' (Dark Side of Japan) பிரச்சாரத்தில் இருந்து இந்த பெயிண்ட் பெறப்பட்டுள்ளது. புதிய நிறத்தை தவிர 2019 எம்டி-03 பைக்கில் யமஹா நிறுவனம் பெரிய அளவிலான மாற்றங்கள் எதையும் செய்யவில்லை. பெரும்பாலான விஷயங்கள் முந்தைய வெர்ஷனை போலவே உள்ளது.

இதன் எரிபொருள் டேங்க் பைக்கிற்கு கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. ஆர்3 மோட்டார் சைக்கிளிடம் இருந்து பெறப்பட்ட உயர்த்தப்பட்ட டெயில் செக்ஸனும் சிறப்பாக உள்ளது. இந்திய இளைஞர்களின் மனம் கவர்ந்த மாடல்களில் ஒன்றாக திகழும் யமஹா ஒய்இஸட்எஃப்-ஆர்3 பைக்தான் பொதுவாக ஆர்3 என்ற பெயரால் அறியப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அனலாக் டேக்கோமீட்டருடன் கூடிய செமி டிஜிட்டல் டிஸ்ப்ளேவை எம்டி-03 மோட்டார் சைக்கிள் பெற்றுள்ளது. இந்தோனேஷிய மார்க்கெட்டில் விற்பனையாகி வரும் யமஹா எம்டி-15 (MT-15) மோட்டார் சைக்கிளின் சக்கரங்களை போன்றே, எம்டி-03 பைக்கின் சக்கரங்களும் உள்ளன. அதே நேரத்தில் ஸ்விங்ஆர்மானது (Swingarm) பாக்ஸ் டைப் யூனிட்டாக கொடுக்கப்பட்டுள்ளது.

2019 எம்டி-03 மோட்டார் சைக்கிளில், 321 சிசி, லிக்யூட் கூல்டு, டிஓஎச்சி, பேரலல்-டிவின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 41 பிஎச்பி பவரையும், 29.6 என்எம் டார்க் திறனையும் உருவாக்கி சாலைகளில் சீறிப்பாய்ந்து செல்லும். இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஆனால் யமஹா எம்டி-03 மோட்டார் சைக்கிள் அடுத்த ஆண்டுதான் (2020) இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ரூ.2.80 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரையிலான விலையில் யமஹா எம்டி-03 மோட்டார் சைக்கிள் எதிர்பார்க்கப்படுகிறது. பிஎம்டபிள்யூ ஜி310ஆர் (BMW G310 R) மற்றும் கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke) உள்ளிட்ட மாடல்களுடன் இது போட்டி போடும். முன்னதாக எம்டி-03 பைக், நடப்பாண்டின் மத்தியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் உலா வந்து கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








