ராயல் எண்ட்பீல்டின் 2020 தண்டர்பேர்டு எக்ஸ் 350 பைக் மீண்டும் சோதனை ஓட்டம்...
2020ல் அறிமுகமாகவுள்ள ராயல் எண்ட்பீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் 350 பைக் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் போட்டோக்களை வைத்து பார்க்கும்போது பைக்கில் பல மாற்றங்கள் நடைபெற்றிருப்பது தெரிய வருகிறது.

அதாவது பைக்கில் ஃப்ரேம் மற்றும் என்ஜின் போன்றவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன. முக்கியமான அப்டேட்டாக சிங்கிள் பேட் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலிற்கு பதிலாக இரட்டை-பேட் கன்சோல் இந்த தண்டர்பேர்டு எக்ஸ் 350 பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் முந்தைய மாடலில் இருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக இரண்டாக பிளவுப்பட்ட இருக்கை அமைப்பை இந்த தண்டர்பேர்டு எக்ஸ் 350 பைக்கில் கொடுத்துள்ளனர். இந்த இருக்கை அமைப்பு தொலைத்தூர பயணங்களுக்கு மிகவும் சவுகரியமானதாக இருக்கும். அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய லிவர்ஸ் மற்றும் அப்டேட்டான ஸ்விட்ச் கியரையும் இந்த புதிய தண்டர்பேர்டு எக்ஸ் 350 பைக்கில் எதிர்பார்க்கலாம்.

தண்டர்பேர்டு எக்ஸ் 350 மாடலுக்கே உரிய கருப்பு நிற பெயிண்ட் அமைப்பு இந்த புதிய வேரியண்ட்டிலும் தொடர்கிறது. ஆனால் அதிலிருந்து இந்த புதிய பைக்கை வேறுபடுத்தி காட்டுவதற்காக மெட்டாலிக் ஸ்டீல் என்ற விசேஷ வர்ணம் வெளிப்புற பாகங்களில் பூசப்பட்டுள்ளது.
இந்த ஷேட் பைக்கின் மற்ற பாகங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை இந்த சோதனை ஓட்ட பைக்கின் மூலம் அறிய முடியவில்லை. ஹெட்லைட், கண்ணாடி மற்றும் ஓட்டுனர் கால் வைக்கும் பகுதி போன்ற பாகங்கள் எந்த மாற்றமும் இன்றி அப்படியே இந்த புதிய தண்டர்பேர்டு பைக்கிலும் தொடர்கின்றன.

2020 கிளாசிக் 350 பைக்கில் உள்ள பிஎஸ்-6 தரத்திற்கு இணக்கமான என்ஜின் அமைப்பை தான் இந்த பைக்கும் பெற்றுள்ளது. ஆனால் இதில் வழங்கவுள்ள என்ஜினின் வெளியிடும் ஆற்றல் நிச்சயமாக சிறிது வித்தியாசப்படும். அதேபோல் கியர்பாக்ஸ் அமைப்பு இண்டர்செப்டர் 650 பைக்கின் கியர்பாக்ஸை ஒத்துள்ளது. டூரிங் பைக்கிற்கான திறனை பெற இந்த புதிய தண்டர்பேர்டு எக்ஸ் 350 பைக்கில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வையும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்சமயம் விற்பனையாகி வரும் தண்டர்பேர்டு எக்ஸ் 350 பைக் 346சிசி என்ஜினுடன் 5250 ஆர்பிஎம்-ல் 19.8 பிஎச்பி பவரையும் 4000 ஆர்பிஎம்-ல் 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் என்ஜினுடன் 5-ஸ்பிடு ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த என்ஜின் மாற்றம் மட்டுமல்லாமல் என்ஜினை சுற்றி கொடுக்கப்பட்டிருக்கும் ஃப்ரேம் அமைப்பும், தற்போதைய தண்டர்பேர்டு எக்ஸ் 350 பைக்கில் சிங்கிள் டவுன் ட்யூப் வடிவத்தில் உள்ளது. அதுவே இந்த புதிய வேரியண்ட் பைக்கில் தடினமான எளிதில் வளையாத வகையில் இரட்டை-தொட்டில் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இத்தகைய மாற்றங்களால் இந்த புதிய பைக்கின் விலை தற்போதைய விற்பனை மாடலை விட ரூ.10,000-ரூ.15,000 வரை அதிகரிக்கப்படவுள்ளது. இதனால் இந்த பைக் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.80 லட்சத்தில் இருந்து ரூ.1.85 லட்சம் வரை விற்பனையாகலாம். பஜாஜ் டாமினார் 400 பைக்கிற்கு போட்டியாக சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய தண்டர்பேர்டு எக்ஸ் 350 பைக்கை தொடர்ந்து ராயல் எண்ட்பீல்டு நிறுவனம், கிளாசிக் 350 மற்றும் புல்லட் 350 பைக்குகளையும் அப்டேட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








