2020 சுஸுகி ஹயபுசா பைக் வெளியீடு... ஆனால், பெருத்த ஏமாற்றம்!!
புதிய சுஸுகி ஹயபுசா பைக் வெளியிடப்பட்டு இருக்கிறது. ஆனால், இந்த புதிய மாடல் பெருத்த ஏமாற்றத்தை வாடிக்கையாளர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

ஸ்போர்ட்ஸ் டூரர் ரக மாடல்களில் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற மாடல் சுஸுகி ஹயபுசா. மிக நீண்டகாலமாக டிசைனில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லாமல் விற்பனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், முற்றிலும் புதிய ஹயபுசா பைக் உருவாக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது.

மேலும், புதிய ஹயபுசா பைக்கின் காப்புரிமை குறித்த படங்களும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் ஆவலை ஏற்படுத்தியது. 2020 மாடலாக புதிய தலைமுறை ஹயபுசா மாடல் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், 2020 மாடலாக குறிப்பிட்டு புதிய ஹயபுசா பைக்கை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.

ஆனால், இந்த புதிய மாடல் முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக இல்லாமல் புதிய வண்ணத் தேர்வுகளில் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. புதிய ஹயபுசா பைக் கேண்டி டேரிங் ரெட் மற்றும் மெட்டாலிக் தண்டர் க்ரே ஆகிய இரண்டு வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதற்கு தக்கவகையில், இதே வண்ணத் தேர்வுகளில் அலாய் வீல்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த புதி மாடலில் வேறு எந்த மாற்றங்கள் இல்லை என்பதுதான் பெரிய ஏமாற்றமாக மாறி இருக்கிறது. மேலும், புதிய தலைமுறை ஹயபுசா பைக் உடனடியாக வருவதற்கான வாய்ப்பில்லை என்றும் தெரிகிறது.

இந்த புதிய 2020 ஹயபுசா பைக்கில் 4 சிலிண்டர்கள் கொண்ட 1,340 சிசி எஞ்சின்தான் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 197 பிஎச்பி பவரையும், 155 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், சுஸுகி டிரைவ் மோடு செலக்டர் வசதியும் உள்ளது. ஓட்டுனர் விருப்பத்திற்கு ஏற்ப வண்டியின் இயக்க நிலைகளை மாற்றிக் கொள்ள முடியும்.

2020 மாடலாக வர இருக்கும் இந்த புதிய சுஸுகி ஹயபுசா பைக் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவிலும், அதைத்தொடர்ந்து இந்தியாவிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, புதிய தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக் வரும் நவம்பரில் இத்தாலியில் நடைபெற இருக்கும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் கான்செப்ட் மாடலாக பார்வைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தலைமுறை சுஸுகி ஹயபுசா பைக் முற்றிலும் புதிய மாடலாக வர இருக்கிறது. அசத்தலான புதிய டிசைன் மற்றும் பெரிய டர்போசார்ஜ்டு எஞ்சினுடன் அறிமுகமாகும் என்று தகவல்கள் கூறுகின்றன. கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ்14ஆர் பைக்குடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








