'96' பட இயக்குனருக்கு விஜய் சேதுபதியின் பரிசு.. விலை உயர்ந்த இந்த பைக்கை வழங்கியதற்கு காரணம் இதுதான்
'96' திரைப்பட இயக்குனர் பிரேம் குமாருக்கு, அப்படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி விலை உயர்ந்த பைக் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து, இன்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார் விஜய் சேதுபதி. 'விஜய் சேதுபதி' என்ற மகா நடிகனுக்கு தற்போது தமிழகத்தில் பல லட்சக்கணக்கான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

ஆரம்பத்தில் சிவகார்த்திகேயன்-விஜய் சேதுபதி ஆகியோர் இடையேதான் போட்டி என்ற பேச்சு எழுந்தது. ஆனால் 2 பேரும் வேறு வேறு டிராக்கில் பயணிக்க தொடங்கினர். ''ஹீரோயிசம்'' காட்டும் கமர்ஷியல் படங்களுக்கே சிவகார்த்திகேயன் முக்கியத்துவம் கொடுத்தார்.

ஆனால் கலை மீது கொண்ட ஆர்வத்தால், எப்பேர்பட்ட கேரக்டரையும் துணிந்து ஏற்று நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. சீதக்காதி, ஆரஞ்சு மிட்டாய் உள்ளிட்ட படங்களில் வயதான கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்திருப்பது இதற்கு ஓர் உதாரணம் மட்டுமே.

தமிழ் சினிமாவில் இன்றைய சூழலில் எந்த ஹீரோவும் செய்ய துணியாத காரியம் இது. இதுதவிர ரசிகர்கள் எளிதில் அணுக கூடிய நபராகவும் விஜய் சேதுபதி உள்ளார். இதுபோன்ற காரணங்களால்தான், விஜய் சேதுபதிக்கான ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

விஜய் சேதுபதி நடிப்பில், பேட்ட, செக்க சிவந்த வானம், 96 உள்ளிட்ட திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வசூலை வாரி குவித்தன. ஆனால் இதில் அனைவராலும் பாராட்டப்பட்ட படம் '96'தான். திரைப்படம் பார்த்த அனைவரையும் அவர்களின் பள்ளி பருவத்திற்கே கூட்டி சென்று விட்டார் இயக்குனர் பிரேம் குமார்.

விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா நடிப்பில், இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 96. கடந்த அக்டோபர் மாதம் வெளியான 96 திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

விஜய் சேதுபதியின் சினிமா பயணத்தில் 96 திரைப்படம் ஒரு மைல்கல் என்றால் மிகையல்ல. எனவே தனக்கு மாபெரும் வெற்றிப்படம் கொடுத்த இயக்குனர் பிரேம் குமாருக்கு சர்ப்ரைஸாக பரிசு ஒன்றை வழங்க விஜய் சேதுபதி முடிவு செய்திருந்தார்.

இயக்குனர் பிரேம் குமாருக்கு கிளாசிக் பைக்குகள் மீது, குறிப்பாக ராயல் என்பீல்டு பைக்குகள் மீது அதிக ஆர்வம் உள்ளது. இதனை தெரிந்து கொண்ட விஜய் சேதுபதி, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Interceptor 650) மோட்டார் சைக்கிளை, இயக்குனர் பிரேம் குமாருக்கு பரிசளித்துள்ளார்.

அந்த பைக்கை தானே ஓட்டி சென்ற விஜய் சேதுபதி, இயக்குனர் பிரேம் குமாருக்கு சர்ப்ரைஸாக பரிசளித்து விட்டு வந்துள்ளார். இதில், குறிப்பிடத்தகுந்த மற்றொரு விஷயம் என்னவென்றால், இந்த பைக்கின் பதிவு எண் '0096' என வாங்கப்பட்டுள்ளது.

96 படத்தின் பெயரை நினைவுபடுத்தும் வகையில்தான், இந்த பதிவு எண் வாங்கப்பட்டுள்ளது. இயக்குனர் பிரேம் குமாருக்கு, விஜய் சேதுபதி பரிசாக வழங்கியுள்ள ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக் சமீபத்தில்தான் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கில், 648 சிசி, இரட்டை சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47.65 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது.

இன்றைய தேதியில் இந்திய மார்க்கெட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்து வரும் மிக விலை உயர்ந்த பைக்குகளில் ஒன்றாக இன்டர்செப்டார் 650 திகழ்ந்து வருகிறது. இதன் ஆரம்ப விலையே 2.50 லட்ச ரூபாய் (டெல்லி, எக்ஸ் ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் இன்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கானது மொத்தம் 6 வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகிறது. வண்ணத்தை பொறுத்துதான் இதன் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. எனவே வண்ணத்தை பொறுத்து விலை வேறுபடும்.

இதன்படி டாப் எண்ட் க்ரோம் பெயிண்ட் ஃபினிஷ் விலை 2.70 லட்ச ரூபாய் வருகிறது. இதுவும் எக்ஸ் ஷோரூம் விலைதான். ஆன் ரோடு வருகையில் இதன் விலை சுமார் 3 லட்ச ரூபாயை கடந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மோட்டார் சைக்கிளின் டாப் ஸ்பீடு மணிக்கு 146.96 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பிற்காக ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இன்டர்செப்டார் 650 பைக்கானது, ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடல்களில் ஒன்றாக இருந்தாலும், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் மலிவான இரட்டை சிலிண்டர் (Twin-Cylinder) மோட்டார் சைக்கிள் என்ற பெருமையையும் பெறுகிறது.

1960களில் அமெரிக்க வாடிக்கையாளர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கிய மோட்டார் சைக்கிள்களில் ஒன்று இன்டர்செப்டார். இதனைதான் தற்போதைய சூழலுக்கு ஏற்ப, நவீன தொழில்நுட்ப அம்சங்களை புகுத்தி புதிய மாடலாக வெளியிட்டுள்ளது ராயல் என்பீல்டு.

இன்டர்செப்டார் 650 பைக்கில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆரவாரமான டிசைன்கள் பெரிய அளவில் இல்லாமல், மிக எளிமையாக அதே நேரத்தில் கனகச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ள ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்கிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications








