டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் அறிமுகம்... படங்களுடன் தகவல்கள்!
சூப்பர் பைக் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய டுகாட்டியின் புதிய ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 சூப்பர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

சூப்பர் பைக் தயாரிப்பில் பிரபலமான இத்தாலி நிறுவனமான டுகாட்டி தனது சூப்பர் பைக் மாடல்களின் எண்ணிக்கையை விரிவுப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தனது பனிகேல் வி4 பைக்கின் நேக்கட் ரக மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 என்ற இந்த புதிய சூப்பர் பைக் இத்தாலியின் ரிமினி நகரில் நடந்த நிகழ்ச்சியில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக் டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மற்றும் வி4 எஸ் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது.

டுகாட்டி பனிகேல் வி4 பைக்கின் ஃபேரிங் பேனல்கள் இல்லாத நேக்கட் வகை மாடலா இந்த பைக்கின் டிசைன் மிகவும் மிரட்டலாக உள்ளது. கூர்மையான ஹெட்லைட் ஹவுசிங் அமைப்பு, சிறப்பான ஏரோடைனமிக்ஸ் திறனை வழங்கும் டியூவல் விங் பிளேன் அமைப்பானது தனித்துவத்தை அளிக்கிறது.

முறுக்கலான பெட்ரோல் டேங்க் டிசைன், ஸ்டெப்டு இருக்கை அமைப்பு, பின்புறத்தை சக்கரத்தை பைக்குடன் இணைக்கும் ஒருபக்கத்திலான ஸ்விங் ஆர்ம் அமைப்பு, பித்தளை வர்ண பூச்சுடன் எஞ்சின், எஞ்சின் பகுதிக்குள்ளாகவே அடக்கப்பட்ட சைலென்சர் உள்ளிட்டவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

டுகாட்டி பனிகேல் வி4 பைக்கில் பயன்படுத்தப்படும் அதே 1,103 சிசி எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 208 பிஎ:்பி பவரையும், 123 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதேபோன்று, அக்ரபோவிக் புகைப்போக்கி அமைப்பை தேர்வு செய்தால் 220 பிஎச்பி பவரையும், 130 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

பனிகேல் வி4 பைக்கிற்கு இணையான சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதற்கு இதன் பை விங் பிளேன் அமைப்பு உதவுகிறது. பக்கவாட்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் இந்த விங் பிளேன் அமைப்பானது பைக் 270 கிமீ வேகத்தில் செல்லும்போது அதிகபட்சமாக 28 கிலோ அளவுக்கான டவுன்ஃபோர்ஸ் விசையை பைக்கிற்கு வழங்கும். இது பைக்கின் நிலைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது.

இந்த பைக்கில் ஓலின்ஸ் நிறுவனத்தின் உயர்வகை எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷன் ஸ்டீயரிங் டேம்பர் மற்றும் இலகு எடையிலான மர்செஸினி சக்கரங்கள் ஆகியவை மதிப்பை கூட்டுகின்றன. முன்புறத்தில் 43 மிமீ ஷோவா பிக் பிஸ்டன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சாக்ஸ் ஷாக் அப்சார்பரும் உள்ளன. ஓலின்ஸ் சஸ்பென்ஷன் விலை உயர்ந்த வேரியண்ட்டில் கிடைக்கும்.

இரண்டு வேரியண்ட்டுகளிலுமே பிரேக் சிஸ்டத்தில் மாற்றம் இல்லை. இந்த பைக்கின் முன்சக்கரத்தில் பிரெம்போ ஸ்டைலெமா மோனோபிளாக் காலிபர்களுடன் 330 மிமீ டிஸ்க்குகள் கொண்ட பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் இரண்டு பிஸ்டன் காலிபர்கள் கொண்ட 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பிரேக் சிஸ்டம் 6 ஆக்சில் இனர்ஷியல் மெசர்மென்ட் யூனிட் மற்றும் டுகாட்டி கார்னரிங் ஏபிஎஸ் எவோ பிரேக் சிஸ்டம் ஆகிய தொழில்நுட்பங்களுடன் உதவியுடன் அதீத பாதுகாப்பை வழங்கும்.

புதிய டுகாட்டி ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 பைக் இந்தியாவில் அடுத்த ஆண்டு முதல் பாதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பேஸ் வேரியண்ட் ரூ.19 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








