தமிழகத்தின் இந்த நகரங்களை சேர்ந்தவர்கள் இனி ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எளிதாக வாங்கலாம்!
தமிழகத்தின் குறிப்பிட்ட நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இனி ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை எளிதாக வாங்கலாம். ஏன்? என்பது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி இந்த விஷயத்தில் மிகவும் ஆர்வமாக உள்ளார். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வரிசையாக அறிவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பு இதற்கு ஓர் உதாரணம்.

மத்திய அரசு அளித்து வரும் ஆதரவு காரணமாக, பல்வேறு முன்னணி நிறுவனங்களும் இந்தியாவில் போட்டி போட்டு கொண்டு மின்சார வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன. இதில், ஆம்பியர் நிறுவனமும் ஒன்று. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் க்ரீவ்ஸ் காட்டன் நிறுவனத்தின் துணை நிறுவனமாக ஆம்பியர் இயங்கி கொண்டுள்ளது.

இந்த சூழலில், ஆம்பியர் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இனி அமேசான் தளத்தின் வாயிலாகவும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ளன. இதற்கான அறிவிப்பை ஆம்பியர் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இதற்காக ஆம்பியர் மற்றும் அமேசான் நிறுவனங்கள் புது கூட்டணியை அமைத்துள்ளன.

இதன்மூலம் குறிப்பிட்ட நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இனி அமேசான் தளம் மூலமாக ஆம்பியர் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கி கொள்ள கூடிய வாய்ப்பை பெறுவார்கள். அமேசான் தளத்தில் ஆம்பியர் எலெக்ட்ரிக் டூவீலர்களை வாடிக்கையாளர்கள் வாங்கிய பிறகு, கட்டணம் செலுத்தியதை உறுதிபடுத்தும் ரசீது அவர்களுக்கு வழங்கப்படும்.

இதன்பின் சம்பந்தப்பட்ட டீலர் பாயிண்ட்டில் வாடிக்கையாளர்கள் வாகனத்தை டெலிவரி பெற்று கொள்ள முடியும். இதன் மூலமாக ஆன்லைன் ஷாப்பிங்கின் அனைத்து சௌகரியங்களையும் வாடிக்கையாளர்கள் பெறுவார்கள். இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்ட் தற்போது 200 சதவீதத்திற்கும் மேலான வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகிறது.

எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு (SMEV - Society of Manufacturers of Electric Vehicles) இதனை மதிப்பிட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ஆம்பியர் நிறுவன எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அமேசான் ஷாப்பிங் தளத்தில் கிடைக்கவிருப்பது அந்நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்பியர் நிறுவனத்தின் ஸீல், வி-48 எல்ஏ, மேக்னஸ் 60, ரியோ எல்ஏ மற்றும் ரியோ எல்ஐ உள்ளிட்ட மாடல்கள் அமேசானில் கிடைக்கும். தேனி, தூத்துக்குடி, உடுமலைப்பேட்டை, கோபிச்செட்டிபாளையம், கோவை, கரூர், ஆம்பூர், திருச்சி, பெங்களூர், மங்களூர் மற்றும் மூடாபித்ரி ஆகிய நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ள முடியும்.

நீங்கள் மேற்கண்ட நகரங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் என்றால், ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அமேசான் தளத்திலே வாங்கி கொள்ளலாம். இந்தியாவின் பிற நகரங்களுக்கும் இந்த வசதியை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. நாட்டின் மற்ற நகரங்களில் இந்த வசதியை வெகு விரைவில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








