ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்!
ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிஸ்கவுண்ட் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பண்டிகை காலத்தில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாங்குவோரை கவரும் வகையில் ஆம்ப்-அப் என்ற பெயரில் இந்த டிஸ்கவுண்ட் ஆஃபர்களை ஆம்பியர் நிறுவனம் அறிவித்துள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் அதிகபட்சமான சேமிப்புச் சலுகைகளை வழங்குவதாகவும் ஆம்பியர் தெரிவித்துள்ளது.

கடந்த 20ந் தேதி முதல் அக்டோபர் 31ந் தேதி வரை ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை முன்பதிவு செய்வோருக்கு இந்த சிறப்புச் சேமிப்புச் சலுகைகளை பெற முடியும். அதிகபட்சமாக ரூ.26,990 மதிப்பிலான சேமிப்பை பெற இயலும் என்று ஆம்பியர் தெரிவிக்கிறது.

க்ரீவ்ஸ் காட்டன் அங்கமாக செயல்படும் ஆம்பியர் நிறுவனம் வி48, வி48 எல்ஐ, ரியோ, ரியோ எல்ஐ, மேக்னஸ் மற்றும் ஸீல் என்று 6 ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனையில் வைத்துள்ளது. இதில், வி48 மற்றும் ரியோ ஆகியவை குறைவான செயல்திறன் கொண்ட மாடல்களாகவும், மேக்னஸ் மற்றும் ஸீல் ஆகியவை அதிசெயல்திறன் மிக்கதாகவும் இருக்கின்றன.

ஆம்பியர் நிறுவனத்தின் அதிசெயல்திறன் மிக்க மாடலாக விற்பனையில் உள்ள ஸீல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அதிக வரவேற்பு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் 12kW எலெக்ட்ரிக் மோட்டாரும், 60V 30Ah லித்தியம் அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 75 கிமீ தூரம் பயணிக்கலாம். மணிக்கு 55 கிமீ வேகம் வரை செல்லலாம்.. இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 5 முதல் 6 மணிநேரம் பிடிக்கும். 130 கிலோ எடையை சுமந்து செல்லும்.

இந்த ஸ்கூட்டரில் எல்இடி விளக்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. டெலிஸ்கோப்பிக் ஃபோர்ககுகள், டியூவல் ஷாக் அப்சார்பர்களுடன் சஸ்பென்ஷன் அமைப்பு இடம்பெற்றுள்ளது. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம், இரண்டு ரைடிங் மோடுகள் ஆகியவற்றுடன் பேட்டரியை கழற்றி மாட்டும் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








