ஏத்தருக்கு ஆப்பு வைக்க தமிழகத்தில் விரைவில் களமிறங்கும் ஆம்பியர்... சபாஷ் சரியான போட்டி..!
கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏத்தர் நிறுவனம் அதன் மின்சார வாகனங்களை சென்னையில் விற்பனைக்குக் கொண்டுவரும் விதமாக புதிய ஷோரூம்களை நிறுவியது. இதைத்தொடர்ந்து, தற்போது ஆம்பியர் நிறுவனமும் அதன் ஷோரூம்களை திறப்பதற்கான பணியில் ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஸ்டார்ட் அப் எனப்படும் ஆரம்பநிலை மின் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஆம்பியர், பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனத்தின், உற்பத்தி மையம் தமிழகத்தின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. இருப்பினும் இதன் தயாரிப்புகள் தமிழகத்தில் இதுவரை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவில்லை. குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்நிலையை போக்கும் விதமாக ஆம்பியர் நிறுவனம் தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆகையால், தமிழகத்தில் வெகு விரைவில் ஆம்பியர் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் விற்பனைக்கு வரவுள்ளது.
ஆம்பியர் தமிழகம் மட்டுமின்றி மேலும் சில மாநிலங்களில் அதன் தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கின்றது. அந்தவகையில், கர்நாடகா, கேரளா, ஒடிசா, மேற்கு வங்கம், உபி, உத்தர்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் ஆம்பியல் மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதற்காக 23 புத்தம் புதிய டீலர்ஷிப் நெட்வொர்க் அவுட்லெட்டுகளை நிறுவ அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன் வழியாக அதன் அதிவேக மின்சார ஸ்கூட்டர் எனப்படும் ஜூல் மற்றும் குறைந்த வேகம் கொண்ட மாடலான ரியோ உள்ளிட்டவை விற்பனைக்குக் கொண்டுவரப்பட உள்ளன.
இதுதவிர வி-48 எல்ஏ, மக்னஸ் 60 மற்றும் ரியோ எல்ஏ உள்ளிட்ட மாடல்களும் களமிறக்கப்பட உள்ளன.

இந்த நிறுவனத்தின் ஜூல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சந்தையில் தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்தவகையில், அண்மையில் இந்த ஸ்கூட்டரின் யூனிட்டுகள் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக விற்பனையாகியதாக தகவல் வெளியாகியது.
மேலும், இந்த புதிய மைல் கல்லை கொண்டாடும் விதமாக இலவச காப்பீட்டு திட்டம் மற்றும் ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அக்ஸசெரீஸ் என்ற சலுகையை அது அறிவித்திருந்தது.

ஜூல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 1,200 W திறன் கொண்ட BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. 30Ah 60V லித்தியம்-அயன் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை சாதாரண மின்சார பாயிண்டின்மூலம் சார்ஜ் செய்தால் முழுமையாக சார்ஜாக 6 மணி நேரம் எடுத்துக் கொள்ளும். அவ்வாறு, இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் குறைந்தது 75 கிமீ தூரம் வரை செல்லலாம்.

0-த்தில் இருந்து 50 கிமீ என்ற வேகத்தை வெறும் 6 செகண்டுகளிலேயே இந்த மின்சார ஸ்கூட்டர் தொட்டுவிடும். இதன் உச்சபட்ச வேகம் 55 கிமீட்டராக இருக்கின்றது. இத்துடன், எக்கனாமிக் மற்றும் ஸ்பீடு உள்ளிட்ட மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எலெக்ட்ரிக் பைக்கில் 75 கிலோ வரை மிகச் எளிதாக ஏற்றிச் செல்ல முடியும்.

இந்த மின்சார ஸ்கூட்டரில் சிபிஎஸ் பிரேக்கிங்கிற்கு இணையான ஹார்மோனிக் பிரேக்கிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், ட்யூப் லெஸ் டயர், ஃபுல்லி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஃபிரண்ட் க்ளோவ் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆம்பியர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 67 ஆயிரம் என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இது, ஏத்தர் மற்றும் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள பஜாஜ் மின்சார ஸ்கூட்டர்களின் விலையைக் காட்டிலும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றது. அதிலும், பிரிமியம் வசதிகளும் இதில் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications








