குறைவான விலையில் தலைவலி கொடுக்கும் போட்டியாளர்கள்... ஹோண்டா சிபிஆர்250ஆர் விற்பனை கடும் சரிவு
இந்தியாவில் ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்கின் விற்பனை மிக கடுமையாக சரிவடைந்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹோண்டா நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தியாவில் மொத்தம் 559 சிபிஆர்250ஆர் (Honda CBR250R) பைக்குகளை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 161 யூனிட்களாக சரிவடைந்துள்ளது. இது 71 சதவீத வீழ்ச்சியாகும்.

ஹோண்டா சிபிஆர்250ஆர் மாடலின் விற்பனை 71 சதவீதம் சரிவடைந்திருப்பதன் மூலம், பழைய தயாரிப்புகளின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் நம்பிக்கை நாளுக்கு நாள் மோசமடைந்து கொண்டே வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஏபிஎஸ் பிரேக்கிங் செட் அப் உடன் கூடிய ஹோண்டா சிபிஆர்250ஆர் மாடல் மட்டுமே மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலை சுமார் 1.95 லட்ச ரூபாய். இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஆனால் முந்தைய காலங்களில் இந்த செக்மெண்ட்டில் இல்லாத பைக்குகள் தற்போது கிடைக்கின்றன. தேர்ந்து எடுக்கும் சுதந்திரத்தை இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. ஹோண்டா சிபிஆர்250ஆர் மாடலின் விற்பனை இவ்வளவு மோசமாக சரிவடைந்திருப்பதற்கு இது முக்கியமான காரணம்.

வாடிக்கையாளர்கள் புதிய பஜாஜ் டோமினார் 400 பைக்கை கூட தேர்வு செய்யலாம். இதன் விலை சுமார் 1.74 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. ஹோண்டா சிபிஆர்250ஆர் மாடலுக்கு மாற்றாக பஜாஜ் டோமினார் 400 பைக்கை தேர்வு செய்தால் வாடிக்கையாளர்கள் அதிக பணத்தை மிச்சப்படுத்தலாம்.

பஜாஜ் டோமினார் 400 மட்டுமல்ல. ஹோண்டா சிபிஆர்250ஆர் மாடலுடன் ஒப்பிடுகையில் விலை குறைவான இன்னும் பல மோட்டார்சைக்கிள்கள் மார்க்கெட்டில் கிடைக்கின்றன. அவை ஹோண்டா சிபிஆர்250ஆர் மாடலை காட்டிலும் அதிக பவர் அவுட்புட்டை கொடுக்கின்றன.

இதுதவிர அதிக வசதிகளும் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் புதுவரவான புத்தம் புதிய சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எப் 250 மாடலும், ஹோண்டா சிபிஆர்250ஆர் மோட்டார்சைக்கிளுக்கு தலைவலியை கொடுக்கிறது.

சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எப் 250 மாடலின் விலை வெறும் 1.71 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) மட்டுமே. அதாவது போட்டியாளரான ஹோண்டா சிபிஆர்250ஆர் மாடலுடன் ஒப்பிடுகையில் இதன் விலை 24 ஆயிரம் ரூபாய் குறைவு.

இது ஹோண்டா சிபிஆர்250ஆர் மாடலின் நிலையை இன்னும் மோசமாக்கி விடுகிறது. இந்தியாவில் ஹோண்டா சிபிஆர்250ஆர் மாடலின் வீழ்ச்சிக்கு யமஹா எப்இஸட்25 மோட்டார்சைக்கிள் மற்றொரு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக்கில், 249.6 சிசி, லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 26.5 எச்பி பவரையும், 7,000 ஆர்பிஎம்மில் 22.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 145 கிலோ மீட்டர்கள் (தோராயமாக). ஹோண்டா சிபிஆர்250ஆர் பைக் ஒரு லிட்டருக்கு 35-40 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்ககூடியது (தோராயமாக).


Click it and Unblock the Notifications








