அதிரடி காட்டும் யமஹா எம்டி15.... கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் விற்பனை சரிவுக்கு காரணம் இதுதான்...
இந்தியாவில் கேடிஎம் 125 ட்யூக் பைக்கின் விற்பனை சரிவடைந்து வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

யமஹா எம்டி15 (Yamaha MT15) மோட்டார்சைக்கிள் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் விற்பனையில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த யமஹா எம்15 கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே 5,203 எம்டி15 பைக்குகளை யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்தது. இதன் மூலம் போட்டியாளரான கேடிஎம் 125 ட்யூக் பைக்கை யமஹா நிறுவனம் விற்பனையில் வீழ்த்தியது.

அதுமட்டுமல்லாமல் கேடிஎம் 125 ட்யூக் மற்றும் கேடிஎம் 200 ட்யூக் ஆகிய 2 பைக்குகளின் மார்ச் மாத மொத்த விற்பனை எண்ணிக்கையை காட்டிலும், யமஹா எம்டி15 பைக்கின் விற்பனை எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது கடந்த மார்ச் மாதத்தில், 3,069 கேடிஎம் 125 ட்யூக் பைக்குகளும், 2,017 கேடிஎம் 200 ட்யூக் பைக்குகளும் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மொத்த எண்ணிக்கை 5,086 மட்டுமே. ஆனால் அதே மாதத்தில் விற்பனையான யமஹா எம்டி15 பைக்குகளின் எண்ணிக்கை 5,203.

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் மாத விற்பனையிலும் கேடிஎம் 125 ட்யூக் பைக்கை யமஹா எம்டி15 வீழ்த்தியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 3,823 எம்டி15 பைக்குகளை யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

ஆனால் அதே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட கேடிஎம் 125 ட்யூக் பைக்குகளின் எண்ணிக்கை வெறும் 2,199 மட்டுமே. கேடிஎம் ட்யூக் 125 பைக்கிற்கு ஆரம்பத்தில் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு காணப்படவே செய்தது.

இருந்தபோதும் யமஹா எம்டி15 பைக்கின் அறிமுகத்திற்கு பிறகு, கேடிஎம் ட்யூக் 125 மாடலின் விற்பனை சரிவடைய தொடங்கியுள்ளது. இந்தியாவின் 150 சிசி செக்மெண்ட்டில் யமஹா எம்டி15 பைக் பீரிமியம் மாடலாக திகழ்ந்து வருகிறது.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி, பஜாஜ் பல்சர் என்எஸ் 200 மற்றும் கேடிஎம் 125 ட்யூக் உள்ளிட்ட போட்டியாளர்களை காட்டிலும் யமஹா எம்டி15 பைக்கின் விலை அதிகம். யமஹா எம்டி15 பைக்கின் விலை 1.36 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்பது குறிப்பிடத்தக்கது.

டார்க் மேட் ப்ளூ மற்றும் மெட்டாலிக் ப்ளாக் ஆகிய கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் யமஹா எம்டி15 பைக், தனது பெரும்பாலான பாகங்களை யமஹா ஆர்15 வி3.0 மாடலுடன் பகிர்ந்து கொண்டுள்ளது. இதில், 155 சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவர் மற்றும் 14.7 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இதில், 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதன் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனிடையே இந்திய பொருளாதாரத்தில் நிலவும் மந்த நிலை காரணமாக கடந்த சில மாதங்களாகவே பிரீமியம் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை குறைவாகதான் உள்ளது. இதன் காரணமாக யமஹா எம்டி15, கேடிஎம் ட்யூக் 125 மற்றும் அதன் போட்டியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பொருளாதார நிலை சீரான பிறகு, பைக்குகளின் விற்பனை மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








