இந்தியாவில் 30 நகரங்களில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை துவங்க ஏத்தர் திட்டம்...
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தனது சந்தையை விரிவுப்படுத்த திட்டங்களை தீட்டி வருகிறது. இதற்காக புதிய தொழிற்சாலை ஒன்றை தமிழகத்தில் துவங்கவுள்ளதாகவும் பேச்சுக்கள் அடிப்படுகின்றன.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 30-35 நகரங்களில் புதிய தொழிற்சாலைகளை வரும் ஆண்டுகளில் துவக்க ஏத்தர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் 10 முக்கிய நகரங்களில் ஏத்தரின் புதிய தொழிற்சாலைகள் அடுத்த ஆண்டில் துவங்கப்பட்டுவிடும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் பெங்களூருக்கு அடுத்து இரண்டாவது நகரமாக மும்பையில் புதிய தொழிற்சாலை ஒன்றை அடுத்த ஆண்டின் மத்தியில் தொடங்கி தனது சந்தையை இந்நிறுவனம் விரிவுப்படுத்தவுள்ளது. முன்னதாக இரண்டாவது தொழிற்சாலை தமிழகத்தில் ஒரு முக்கியமான நகரத்தில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்த புதிய தொழிற்சாலைகளினால் எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன் மோட்டார்சைக்கிள்களையும் வருங்காலத்தில் ஏத்தர் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக ஏத்தர் நிறுவனத்தின் முதன்மை வணிக அதிகாரி ரவ்னீட் போகேலே கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் கூறிய அவர், ஏத்தர் நிறுவனம் புதிதாக ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதற்கான வேலைகளில் தற்சமயம் ஈடுப்பட்டு வருகிறது. இந்த புதிய ஸ்கூட்டரின் அறிமுகம் அடுத்த 12- 18 மாதங்களில் நடைபெற்றுவிடும்.

இது தற்போதைய ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விட விலை குறைவானதாக இருக்கும். அதற்காக ரூ. 50,000 அளவில் எதிர்பார்க்க வேண்டாம். ஏனெனில் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜில் குறைந்தது 75 கிமீ-ஆவது இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது என கூறினார். ஏத்தர் மோட்டார்சைக்கிள் பற்றி கூறிய அவர், ஏத்தர் நிறுவனத்தில் இருந்து மோட்டார்சைக்கிள்கள் விற்பனையாவதற்கு குறைந்தது 3- 4 வருடங்களாவது ஆகும் என்றார்.

ஏத்தர் 450 ஸ்கூட்டரை விட மட்டுமில்லாமல் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விடவும் ஏத்தரின் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைவானதாக இருக்கும் என கூறப்படுகிறது. பஜாஜின் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றியும் அதன் டெலிவரி குறித்த தகவல்களையும் அறிய கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

ஏத்தர் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் விற்பனையாகி வரும் ஏத்தர் 450 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.1.15 லட்சத்தில் விற்கப்பட்டு வருகிறது. இது ஏத்தர் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு மாடலாகும். முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஏத்தர் 340, ஏத்தர் 450 அளவிற்கு வாடிக்கையாளர்களை கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வருடத்திற்கு 35,000- 40,000 யூனிட் ஸ்கூட்டர்களை தயாரித்து வரும் ஏத்தர் நிறுவனம் மற்ற நிறுவனங்களை போல் வழக்கமான டீலர்ஷிப்கள் மூலம் ஸ்கூட்டர்களை விற்பதில்லை. அதற்கு பதிலாக 3,000 சதுர அடியில் சென்டர்களை விரைவில் தொழிற்சாலை துவங்கவுள்ள முக்கியமான அனைத்து நகரங்களிலும் சொந்தமாக வைத்துள்ளது.

மேலும் பசுமை தொழிற்சாலை ஒன்றையும் விரைவில் இந்தியாவில் துவங்கவுள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்பட இருக்கும் இந்த பசுமை தொழிற்சாலையின் மூலம் தற்சமயம் 30 ஆயிரம்- 40 ஆயிரம் என இருக்கும் வருடாந்திர உற்பத்தி 5,00,000 வரையில் அதிகரிக்கலாம்.

இந்தியாவில் 35 சார்ஜர்களை 29 இடங்களில் இந்நிறுவனம் வைத்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 11 சார்ஜர்கள் உள்ளன. வீட்டிலும் சார்ஜிங் செய்யும் வசதியை கொடுக்கும் இந்நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கியவரின் வீட்டில் இருந்து 2 கிமீ சுற்றளவில் ஒரு சார்ஜர் இருக்கும்படியும் பார்த்து கொள்கிறது.

மும்பையில் விரைவில் நிறுவப்பட இருக்கும் இந்த தொழிற்சாலையின் மூலமாக இந்திய சந்தையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட முடியும் என இந்நிறுவனம் நம்புகிறது.


Click it and Unblock the Notifications








