அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம்
அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு இரண்டு முதல் நான்கு மணிநேரம் ஆகும்.
அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அவான் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவான் ஸீரோ ப்ளஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொதுபார்வைக்கு கொண்டு வந்தது. இந்த ஸ்கூட்டர் பல்வேறு சிறப்புகளை பெற்றிருந்ததால் கவனத்தை ஈர்த்தது.

குறிப்பாக, இந்த ஸ்கூட்டரில் பேட்டரியை தனியாக கழற்றி மாட்டும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. பேட்டரியை சார்ஜ் செய்து பின்னர் ஸ்கூட்டரில் எளிதாக பொருத்தும் விதத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் சிங்கிள் பேக் பேட்டரி கொண்ட மாடல் 60 கிமீ தூரம் வரையில் பயணிக்கும். டபுள் பேட்டரி பேக் மாடலானது 110 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறனை பெற்றிருக்கிறது.

இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு இரண்டு முதல் நான்கு மணிநேரம் ஆகும். வீட்டிலுள்ள சாதாரண பிளக் பாயிண்ட் மூலமாகவே சார்ஜ் ஏற்ற முடியும் என்பதும் இதன் சிறப்பு.

இந்த ஸ்கூட்டர் மணிக்கு 45 கிமீ வேகம் வரை பயணிக்கும் திறன் வாய்ந்தது. தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்கூட்டரில் 48V, 28 ஆம்பியர் திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பிரஷ்லெஸ் டிசி மின் மோட்டார் மூலமாக இந்த ஸ்கூட்டர் இயங்குகிறது.

இந்த ஸ்கூட்டரின் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் காயில் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் அமைப்பும் இடம்பெற்றுள்ளது. முன்சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் டிரம் பிரேக்கும் உள்ளன.

பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கான எரிபொருள் செலவீனத்தை ஒப்பிடும்போது இந்த ஸ்கூட்டருக்கு ஆகும் மின்சார செலவு வெறும் 10 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

பின்புறத்தில் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான பூட்டி திறக்கும் வசதி கொண்ட பெட்டி இருப்பது இதன் முக்கிய அம்சம். இந்தியர்களின் எதிர்பார்ப்பையும், இந்திய சாலை நிலைகளையும் கொண்டு இந்த ஸ்கூட்டர் உருவாக்கப்பட்டு இருப்பதாக அவான் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்கூட்டர் சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். கூடுதல் கால வாரண்டி, சாலை அவசர உதவித் திட்டம், ஸ்பேர் பார்ட்ஸ் டூல் கிட் ஆகியவற்றை அவான் மோட்டார்ஸ் வழங்குகிறது.

ரூ.47,000 எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய அவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. ஒகினவா பிரெய்ஸ் மற்றும் ஏத்தர் மின்சார ஸ்கூட்டர்களைவிட சிறந்த விலை தேர்வாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








