பஜாஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் உத்தரவாதம் எத்தனை ஆண்டுகளுக்கு தெரியுமா?
பஜாஜ் நிறுவனம் தனது புதிய சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு வழங்கவுள்ள உத்தரவாத கால அளவு மற்றும் சர்வீஸ் தகவல்களை வெளியிட்டுள்ளது. இதன் முழு விபரங்களை இனி பார்ப்போம்.

தனது பிரபல ஸ்கூட்டர் மாடலான சேத்தக்கின் பெயரையே சமீபத்தில் அறிமுகம் செய்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் சூட்டி இருக்கும் இந்நிறுவனம், இந்த ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவை 2020 ஜனவரி முதல் துவங்க திட்டமிட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பஜாஜ் நிறுவனம் மூன்று வருட/ 50,000 கிமீ உத்தரவாதத்தை வழங்கியுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி பஜாஜ் நிறுவனத்தில் வெளியாகி இருக்கும் இந்த முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியின் ஆயுட்காலம் சுமார் 70,000 கிமீ ஆகும்.

மேலும் இந்த சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 15,000 கிமீ-க்கு சர்வீஸ் இடைவெளியையும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் மோட்டார்சைக்கிள்களும் அதிகளவிலான சர்வீஸ் இடைவெளியை கொண்டுள்ளன. ஏனெனில் இவற்றில் இயங்கக்கூடிய பாகங்களின் எண்ணிக்கை, என்ஜின் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களை விட குறைவாகவே உள்ளது.

கடந்த அக்டோபர் மாதத்தில் அனைத்து சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் வாடிக்கையாளர்கள் முன் காட்சிப்படுத்திய பஜாஜ் நிறுவனம் சில நாட்களுக்கு முன்பு தான் இவற்றின் விற்பனை மாடல்களை அறிமுகம் செய்தது. மேலும் இதே தினத்தில் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் யாத்ராவையும் தொடங்கி வைத்தது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

சேத்தக் மாடலின் அனைத்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் மிருதுவான ரெட்ரோ டிசைன், கூர்மையே இல்லாமல் வளைவுகளை மட்டுமே கொண்ட பாகங்கள், பெரிய அளவில் க்ராபிக்ஸ் இல்லாத பாகங்களை கொண்டுள்ளன. இந்த டிசைன் பலருக்கும் பிடித்திருந்தாலும், சிலர் இது வெஸ்பா ஸ்கூட்டரின் டிசைனை காப்பியடித்தாற் போல் உள்ளது என கூறி வருகின்றனர்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டிசைன் பிரிவு துணைத்தலைவரும் சமூக வலைத்தளத்தில் வெளிப்படையாக இவ்வாறு கூற, பஜாஜ் நிறுவனர்களுள் ஒருவரான ராஜீவ் பஜாஜ் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகத்தின் போது அவரை விளாசி தள்ளி இருந்தார். இதுகுறித்த முழு தகவலை கீழேயுள்ள லிங்கில் காணலாம்.

பகல் நேரத்திலும் ஒளிரக்கூடிய எல்இடி ஹெட்லைட்கள், எல்இடி டர்ன்-சிங்கிள் இண்டிகேட்டர்ஸ், ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்வதற்கு எலக்ட்ரானிக் ஸ்விட்ச்கள் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவற்றை விற்பனையின் போது இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நிச்சயம் எதிர்ப்பார்க்கலாம்.

பஜாஜ் நிறுவனம் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை இந்திய எக்ஸ்ஷோரூம்களில் ரூ.1.15 லட்சத்தில் இருந்து ரூ.1.25 லட்சம் வரை நிர்ணயிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பஜாஜ் நிறுவனம் அறிவித்துள்ள இந்த உத்தரவாத கால அளவும் சர்வீஸ் இடைவெளியும் சிறப்பானதாக தான் உள்ளது. இந்நிறுவனம் இந்தியா முழுவதும் அருமையான நெட்வொர்க்கை உருவாக்கி வைத்துள்ளதால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனையில் பெரியளவில் எந்த பிரச்சனையும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








