இலவச பராமரிப்பு, தள்ளுபடி... தீபாவளிக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள பஜாஜ் நிறுவனம்
இந்திய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, அடுத்த மாதம் வரவுள்ள தீபாவளிக்கு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை வாரி வழங்கவுள்ளது. அதன் விவரங்களை விரிவாக பார்ப்போம்.

பஜாஜ் நிறுவனம் அதன் முதன்மை மாடல் பைக்களுக்கு ரூபாய் 1,500லிருந்து 6,000 வரை பணத்தை தள்ளுபடி செய்யவுள்ளது. அதிகப்பட்சமாக பஜாஜ் டாமினார் 400 மாடலுக்கு விற்பனை விலையில் ரூ.6 ஆயிரத்தை தள்ளுபடி செய்கிறது. இத்துடன் சர்வீஸ் மெயின்டனன்ஸ், 5 வருட உத்தரவாதம் மற்றும் 1,200 ரூபாய் மதிப்பிலான ஐந்து இலவச சர்வீஸ்களையும் செய்து தரவுள்ளது. ஒவ்வொரு பைக்கிற்கும் ஒவ்வொரு விதமான சலுகைகள் வழங்கப்படவுள்ளன.

பஜாஜ் சிடி100
கிக் ஸ்டார்ட் ஸ்போக், கிக் ஸ்டார்ட் அலாய் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் அலாய் என மூன்று வேரியண்ட்களில் இந்த பைக் அறிமுகமானது. இதில் கிக் ஸ்டார்ட் வேரியண்ட் பைக் பண்டிக்கை சலுகையில் இடம் பெறவில்லை. எலக்ட்ரிக் ஸ்டார்ட் அலாய் வேரியண்ட் ரூ.1,500 தள்ளுபடியில் ரூ.1,200 மதிப்பிலான 5 இலவச சர்வீஸ் மற்றும் இலவச 5 வருட உத்தரவாதங்களுடன் விற்பனையாகவுள்ளது.
இந்த சிடி100 பைக் 102சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அம்சங்களுடன் அறிமுகமானது. இதன் கிக் ஸ்டார்ட் வேரியண்ட் பைக் 8பிஎச்பி பவரையும் 8.05 என்எம் டார்க் திறனையும், எலக்ட்ரிக் ஸ்டார்ட் வேரியண்ட் 7.5பிஎச்பி பவரையும் 8.24 டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன.

பஜாஜ் சிடி110
பஜாஜ் நிறுவனம் இந்த பண்டிக்கைக்கு வழங்கவுள்ள சலுகை லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ள இந்த சிடி110 பைக்கின் கிக் ஸ்டார்ட் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் என இரு வேரியண்ட்களுக்கும் ஒரே விதமாக ரூ.2,000 தள்ளுபடி மற்றும் அதே ரூ.1200 மதிப்பிலான சர்வீஸ் பேக்கேஜ்கள் வழங்கப்படவுள்ளன.
இந்த சிடி110 பைக், 115சிசியில் 8.4 பிஎச்பி பவரையும் 9.81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதன் என்ஜின் 4 வேக கியர் பாக்ஸ்களை கொண்டது.

பஜாஜ் பிளாடினா 100
இந்த பஜாஜ் பிளாடினா பைக்கிற்கு ரூ.2000 தள்ளுபடி மற்றும் சர்வீஸ் மெயின்டனன்ஸ் என மொத்தம் 3,200 ரூபாய்க்கு சலுகையில் விற்பனையாகவுள்ளது. இந்த பைக்கானது 102சிசியில் 7.7 பிஎச்பி பவரையும் 8.34 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பஜாஜ் பிளாடினா 110
பஜாஜ் பிளாடினா 110, சிபிஎஸ் மற்றும் எச்-கியர் என இரண்டு வகையான வேரியண்ட்களில் விற்பனையாகி வருகின்றன. இதில் சிபிஎஸ் வேரியண்ட்டிற்கு ரூ.2,000 தள்ளுபடியும், எச்-கியருக்கு ரூ.2,500 தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டிற்கும் ஒரே மாதிரியான சர்வீஸ் பேக்கேஜ் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிளாடினா 100 போல 102சிசியில் ஓடக்கூடிய இந்த பைக்கில் கூடுதல் அம்சமாக சிங்கிள் சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 7.7 பிஎச்பி பவரையும் 8.34என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் பகல் நேரத்திலும் ஓளிரக்கூடிய எல்இடி பல்ப்பும் பொருத்தப்பட்டுள்ளது.

பஜாஜ் டிஸ்கவர் 110& 125
இதில் பஜாஜ் டிஸ்கவர் 110, ரூ.2000 தள்ளுபடி மற்றும் சர்வீஸ் மெயிண்டனன்ஸ் என மொத்தம் ரூ.3,200 சலுகையில் தீபாவளி பண்டிக்கையையொட்டி விற்பனையாகவுள்ளது. 115.45சிசியில் செல்லக்கூடிய இந்த பைக் 8.4 பிஎச்பி பவரையும் 9.81 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இதே சலுகையில் விற்பனையாகவுள்ள பஜாஜ் டிஸ்கவர் 125 மாடல் பைக், முன்பக்க டிஸ்க் பிரேக்குடன் 124.5சிசியில் ஓடக்கூடியது. இது 10.8 பிஎச்பி பவரையும் 11என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பஜாஜ் பல்சர் 125
பஜாஜ்ஜின் ஆரம்ப நிலை பைக்குகளில் ஒன்றான பல்சர் 125, தீபாவளி நாட்களில் ரூ.2,500 தள்ளுபடி மற்றும் சர்வீஸ் மெயின்டனன்ஸ் சலுகைகளுடன் விற்பனையாகவுள்ளது. 124.4சிசியில் சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜினுடன் 11.8 பிஎச்பி பவரையும் 11 என்எம் டார்க் திறனையும் இந்த பைக்கானது வெளிப்படுத்தும். நியான் வேரியண்ட்டில் மட்டுமே தற்போது விற்பனையாகி வரும் இந்த மாடல் பைக்கின் இரண்டாக பிரிக்கப்பட்ட சீட் வேரியண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

பஜாஜ் பல்சர் 150
கிளாசிக், நியான், ட்வின் என மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனையாகும் இந்த பைக்கிற்கு விழா கால சலுகைகளாக, ரூ.3000 தள்ளுபடி மற்றும் சர்வீஸ் மெயின்டனன்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 149சிசியில் 13.8 பிஎச்பி பவரையும் 13.4 என்எம் டார்க் திறனையும் இந்த பைக் வெளிப்படுத்தும்.

பஜாஜ் பல்சர் 180எஃப்
பல்சர் 150யின் அதே சலுகைகளுடன் வரும் பண்டிக்கை விற்பனையாகவுள்ள இந்த பைக், 178.6சிசி என்ஜினுடன் 16.7 பிஎச்பி பவரையும் 14.22 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200, என்எஸ்200 மற்றும் 220எஃப்
இந்த மூன்று பைக்கிற்கும் ஒரே விழா கால சலுகைகளாக ரூ.3,800 தள்ளுபடியும் அதே ரூ.1,200 மதிப்பிலான சர்வீஸ் மெயின்டனன்ஸும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் என்எஸ்200 மற்றும் ஆர்எஸ்200 பைக்குகள் 199.5சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட்-கூல்டு என்ஜினுடன் ஓடக்கூடியது. ஆனால் என்எஸ்200ன் என்ஜின் 23.1 பிஎச்பி பவரையும் 18.3 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆர்எஸ்200 மாடல், 24.1 பிஎச்பி பவரையும் 18.6 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

பல்சர் 220F பைக், 220சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு, ஆயில் இண்டர்கூலர் என்ஜினுடன் 20.6 பிஎச்பி பவரையும் 18.55 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த 220F-ன் ஸ்டைலான தோற்றம் வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமானதால் இதே வடிவம் மற்றும் தோற்றத்தில் பல்சர் 180 சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் அவென்ஜர் 160 ஸ்ட்ரீட், 220 ஸ்ட்ரீட் மற்றும் 220 க்ரூஸ்
இந்த மூன்று பைக்கிற்கும் ரூ.3,000 தள்ளுபடி மற்றும் சர்வீஸ் மெயின்டனன்ஸ் சலுகைகளாக ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் அவென்ஜர் 220 க்ரூஸிற்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவென்ஜர் 160 ஸ்ட்ரீட், 160சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜினுடன் 14.7 பிஎச்பி பவரையும் 13.5 என்எம் டார்க் திறனையும், 220 மாடல்கள் இரண்டும் 18.7 பிஎச்பி பவரையும் 17.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகின்றன.

பஜாஜ் டாமினார் 400
பஜாஜ் நிறுவனத்தால் இந்த பைக்கிற்கு தான் அதிகப்பட்ச பண்டிக்கை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. தள்ளுபடி மட்டும் ரூ.6000மும் சர்வீஸ் மெயின்டனன்ஸ் எல்லா பைக்கிற்கும் போல ரூ.1,200 என மொத்த ரூ.7,200 சலுகையில் இந்த டாமினார் 400 விற்பனையாகவுள்ளது.
இதன் 373.3சிசி லிக்யூட்-கூல்டு என்ஜின் 39.4 பிஎச்பி பவரையும் 35 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கின் என்ஜின் 6 நிலை வேக கியர் பாக்ஸ்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. செருப்பை அணிந்து கொண்டே சரி செய்யும் வகையில் கிளட்ச் புதிய அம்சங்களாக சேர்க்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








