பஜாஜ் - கேடிஎம் கூட்டணியில் உயர்வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
இந்தியாவின் வெற்றிகரமான கூட்டணியாக பதிவு செய்துள்ள, பஜாஜ் - கேடிஎம் நிறுவனங்களின் கூட்டணியில் உயர்வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் நிறுவனம் பிரிமீயம் வகை பைக் தயாரிப்பில் உலக அளவில் மிகவும் பிரபலமாக விளங்குகிறது. தனித்துவமான டிசைன், செயல்திறன் மிக்க எஞ்சின்கள் மற்றும் மிக சரியான விலையில் கிடைக்கும் கேடிஎம் பைக்குகளுக்கு உலக அளவில் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தியாவிலும் கேடிஎம் பைக்குகளுக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது.

தற்போது கேடிஎம் நிறுவனத்தின் 48 சதவீத பங்குகள் பஜாஜ் ஆட்டோ வசம் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் கேடிஎம் நிறுவனத்தின் பைக் உற்பத்தி பணிகள் பஜாஜ் ஆலையில்தான் நடந்து வருகின்றன. மேலும், கேடிஎம் பைக்குகளின் அப்படையிலான சில பைக் மாடல்களையும் பஜாஜ் ஆட்டோ விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில், இரு நிறுவனங்களும் இணைந்து உயர்வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வருவது தெரிய வந்துள்ளது. மணிகன்ட்ரோல் தளத்திடம் பேசிய பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் உயர் அதிகாரி ராகேஷ் சர்மா இந்த தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்," தற்போதைய நிலையில் இந்த எலெக்ட்ரிக் மாடல் குறித்து அதிக தகவல்களை பகிர்ந்து கொள்ள இயலாது. அது ஸ்கூட்டரா அல்லது பைக் மாடலா என்பதை இப்போது தெரிவிக்க இயலாது. ஆனால், புதிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்க இருப்பதை மட்டும் கூற இயலும்," என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பஜாஜ் நிறுவனம் அர்பனைட் என்ற பெயரில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தோம். இதுகுறித்த ஸ்பை படங்கள் மற்றும் தகவல்களையும் பகிர்ந்திருந்தோம்.

ஆனால், பஜாஜ் ஆட்டோவின் அர்பனைட் பிராண்டில் வர இருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும், கேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கும் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கும் தொடர்பு இருக்காது என்றே தெரிகிறது.

ஏனெனில், பஜாஜ் - கேடிஎம் கூட்டணியில் உயர்வகை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்தான் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும், வெளிநாடுகளில் கேடிஎம் இ - ஸ்பீடு என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் உள்ளது.

இந்த ஸ்கூட்டரின் அடிப்படையில் புதிய மாடலை இந்திய சந்தைக்கு தக்கவாறு பஜாஜ் - கேடிஎம் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வருவதாக கருதப்படுகிறது. மேலும், 48V எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டணியானது 3kW முதல் 10kW வரை திறன் கொண்ட ஸ்கூட்டர் மாடல்களை களமிறக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பஜாஜ் அர்பனைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை படங்களை வைத்து பார்க்கும்போது இரட்டை டெயில் லைட்டுகள், மடக்கும் வசதியுடன் பின்புற ஃபுட்ரெஸ்ட்டுகள், அலாய் வீல்கள், ஒற்றை சைடு ஆர்ம் கொண்ட பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு ஆகியவை கேடிஎம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிரதிபலிப்பதாக உள்ளது.


Click it and Unblock the Notifications








