புதிய பாதுகாப்பு வசதியுடன் பஜாஜ் பிளாட்டினா 100 பைக்!
புதிய பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சத்துடன் பஜாஜ் பிளாட்டினா 100 பைக் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பட்ஜெட் பைக் மாடல்களில் பஜாஜ் பிளாட்டினா 100 பைக் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. பஜாஜ் நிறுவனத்தின் மிக குறைவான விலை கொண்ட இந்த பைக் ரூ.32,000 முதல் ரூ.40,883 எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

இந்த நிலையில், வரும் 1ந் தேதி முதல் புதிய இருசக்கர வாகனங்களில் நவீன பிரேக் தொழில்நுட்ப அம்சம் சேர்க்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இதனை மனதில் வைத்து பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கில் சிபிஎஸ் பிரேக் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.

பஜாஜ் பிளாட்டினா 100 பைக்கின் கிக் ஸ்டார்ட் வேரியண்ட்டில் இந்த புதிய பிரேக் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, இரண்டு சக்கரங்களுக்குமான பிரேக் பவர் சரியான விகிதத்தில் செலுத்தப்படுவதால், திடீரென பிரேக் பிடிக்கும்போதும் வண்டி சறுக்குவதையும், நிலைகுலைந்து கீழே விழும் வாய்ப்பையும் தவிர்க்கும்.

இந்த மேம்படுத்தப்பட்ட மாடலுக்கு ரூ.40,500 விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. புதிய சிபிஎஸ் பிரேக் வசதி சேர்க்கப்பட்டாலும், பஜாஜ் பிளாட்டினா 100 கிக் ஸ்டார்ட் மாடல் செல்ஃப் ஸ்டார்ட் மாடலைவிட ரூ.6,000 வரை குறைவான விலையில் இருப்பது கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கும். அதாவது, வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து மிக குறைவான விலையில் சிறந்த பட்ஜெட் மாடலாக இருக்கும்.

புதிய பிளாட்டினா 100 பைக்கில் 102சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 7.9 பிஎச்பி பவரையும், 8.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 4 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்களின் கையை கடிக்காத வகையில், மிகச் சிறப்பான மைலேஜை வழங்கும் மாடல்களில் ஒன்றாகவும் இருக்கிறது.

இந்த பைக்கில் 11.5 லிட்டர் கொள்திறன் கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதனால், முழுமையாக எரிபொருள் நிரப்பினால் அதிக தூரம் பயணிக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. குறிப்பாக, ஊரக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது.

முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் சாதாரண வகை ட்வின் ஷாக் அப்சார்பர்களும் இடம்பெற்றுள்ளன. இது கடினமான சாலைகளில் கூட நீடித்த உழைப்பை வழங்கும் மாடலாக இருக்கிறது.
புதிய பஜாஜ் பிளாட்டினா 100 கிஸ் ஸ்டார்ட் சிபிஎஸ் மாடலானது எபோனி பிளாக் மற்றும் காக்டெயில் ரெட் ஆகிய இரண்டு வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

நவீன தொழில்நுட்பம் கொண்ட சிபிஎஸ் பிரேக் சிஸ்டம் மற்றும் புதிய வண்ணங்களில் வந்துள்ள புதிய பஜாஜ் பிளாட்டினா 100 கிக் ஸ்டார்ட் மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை வழக்கம்போல் ஈர்க்கும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications








