விற்பனையில் கலக்கும் குறைவான விலை பஜாஜ் பல்சர் பைக்!
பஜாஜ் பல்சர் 125 பைக் விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பஜாஜ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான பைக் மாடல் பல்சர். பல்வேறு சிசி திறன் கொண்ட எஞ்சின்களுடன் பல்சர் வரிசையில் பல மாடல்கள் விற்பனை செய்யப்பட்டாலும், இதன் 150 சிசி மாடல்தான் வாடிக்கையாளர்களின் அமோக வரவேற்பை பெற்ற மாடலாக வலம் வருகிறது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் பல்சர் வரிசையில் புதிய 125 சிசி மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிற பல்சர் பைக்குகள் போல அல்லாமல், எல்லோரையும் கவர்ந்த பல்சர் 150 மாடலின் டிசைனுடன் எஞ்சினை மட்டும் மாற்றி களமிறக்கப்பட்டது.

பல்சர் 125 சிசி பைக் டிரம் பிரேக் மாடல் ரூ.64,000 விலையிலும், டிஸ்க் பிரேக் மாடல் ரூ.66,618 விலையிலும் அறிமுகம் செய்யப்பட்டது. பல்சர் 150 பைக்கை போன்ற பாடி கிராஃபிக் ஸ்டிக்கர்கள், ஸ்பிளிட் இருக்கைகள், எஞ்சின் கவுல் உள்ளிட்டவை அடங்கிய பிரிமீயம் மாடலுக்கு ரூ.70,618 எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வந்த இந்த புதிய பல்சர் 125 பைக் முதல் இரண்டு மாதங்களில் 40,000 யூனிட்டுகள் விற்பனையாகி சாதனை புரிந்துள்ளது. பல்சர் 150 பைக்கை போலவே தோற்றத்தை பெற்றிருப்பது இதன் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட்டாக மாறி இருப்பதுடன், விலை குறைவான பல்சர் பைக் என்பதால் கவர்ந்துள்ளது.

புதிய பஜாஜ் பல்சர் 125 சிசி பைக்கில் 124 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 12 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. இது பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினை பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்படும்.

பஜாஜ் பல்சர் 125 சிசி மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் இரண்டு கேஸ் சார்ஜ்டு ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இந்த பைக்கின் உயர் வேரியண்ட்டில் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது. காம்பி பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதிக மைலேஜ், விலை குறைவான பல்சர் என்பதுடன், பல்சர் 150 பைக்கின் தோற்றத்தில் கிடைப்பதால் தொடர்ந்து சிறப்பான வரவேற்பையும், விற்பனையையும் இந்த பைக் பதிவு செய்யும் என்று தெரிகிறது. ஹோண்டா சிபி ஷைன் உள்ளிட்ட பைக் மாடல்களுக்கு இது கடும் போட்டியை தரும்.


Click it and Unblock the Notifications








