வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வசதியை இந்த பல்சர் மாடலில் வழங்கியது பஜாஜ்... விலை உயர்வு
வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த வசதியை, பல்சர் என்எஸ் 160 மாடலில் பஜாஜ் நிறுவனம் வழங்கியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மிக தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது 125 சிசிக்கும் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும், 125 சிசிக்கும் அதிகமான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

இந்த புதிய உத்தரவு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனைத்து இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் மாடல்களில், சிபிஎஸ், ஏபிஎஸ் பிரேக் வசதியை வழங்கி வருகின்றன. இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகன நிறுவனமான பஜாஜ் நிறுவனமும் தனது மாடல்களை புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப வரிசையாக அப்டேட் செய்து வருகிறது.

இந்த வரிசையில் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் கூடிய பஜாஜ் பல்சர் என்எஸ் 160 (Bajaj Pulsar NS 160 ABS) மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பல்சர் என்எஸ் 160 மாடலில் பஜாஜ் நிறுவனம் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதியை வழங்கியுள்ளது. இதன் காரணமாக அதன் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

சிங்கிள் சேனல் ஏபிஎஸ் வசதியுடன் கூடிய பஜாஜ் பல்சர் என்எஸ் 160 மாடலின் விலை 92,595 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஏபிஎஸ் பிரேக் வசதி இல்லாத வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில் இதன் விலை 6,656 ரூபாய் அதிகம் ஆகும். பஜாஜ் லைன் அப்பில், பல்சர் 180எஃப் ஏபிஎஸ் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு கீழாக, பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் மாடல் நிலை நிறுத்தப்படுகிறது.

பல்சர் 180எஃப் மாடலை பஜாஜ் நிறுவனம் ஏபிஎஸ் வசதி இல்லாமல்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன்மூலம் சற்று குறைவான விலையில் அந்த மாடலை விற்பனை செய்தது. ஆனால் தற்போது பல்சர் 180எஃப் மாடலையும் ஏபிஎஸ் பிரேக் வசதியுடன் பஜாஜ் நிறுவனம் அப்டேட் செய்து விட்டது. இதன் காரணமாக அதன் விலையும் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பல்சர் என்எஸ் 160 மாடலில் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டிருப்பதை தவிர மெக்கானிக்கலாக எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் மாடலில், 160.3 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,500 ஆர்பிஎம்மில் 15.5 எச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 14.6 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதில், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

பல்சர் என்எஸ் 160 ஏபிஎஸ் மாடலின் முன் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 130 மிமீ ட்ரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர தற்போது கூடுதல் பாதுகாப்பிற்காக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் வசதி வழங்கப்பட்டுள்ளது. பல்சர் என்எஸ் 160 மாடலில் ஏபிஎஸ் பிரேக் வசதியை வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








