இன்னும் சில நாட்களில் பெனெல்லி லியோன்சினோ 250 பைக் அறிமுகம்?
அடுத்த சில நாட்களில் புதிய பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் பெனெல்லி நிறுவனம் இரண்டாவது இன்னிங்சை மிக ஆக்ரோஷமாக ஆடி வருகிறது. இந்தியாவில் புதிய கூட்டணி அமைத்து பல புதிய மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர்தான் பெனெல்லி லியோன்சினோ 500 என்ற ஸ்க்ராம்ப்ளர் வகை பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

இந்த நிலையில், இதன் குறைவான சிசி திறன் கொண்ட லியோன்சினோ 250 பைக் மாடலை வரும் 5ந் தேதி பெனெல்லி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக புதிய செய்தி வெளியாகி இருக்கிறது. இது அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட லியோன்சினோ 500 மாடலின் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கும். புதிய ஹெட்லைட் அமைப்பு மற்றும் கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர் மூலமாக வேறுபட்டிருக்கும்.

இந்த புதிய பைக்கில் ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் டிசைனில் மட்டுமல்ல, கையாளுமையிலும் சிறப்பாக இருக்கும் வகையில் ஸ்விங் ஆர்ம், சஸ்பென்ஷன் அமைப்பு இருக்கும்.

கடந்த ஆண்டு விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட பெனெல்லி டிஎன்டி 25 பைக்கில் இருந்த அதே 249 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின்தான் இந்த பைக்கிலும் பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 25.8 எச்பி பவரையும், 21.2 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் இடம்பெற்றிருக்கும். முன்புறத்தில் காலிபர்களுடன் கூடிய பெட்டல் டிஸ்க் பிரேக் சிஸ்டம் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிறங் சிஸ்டமும் உள்ளது.

இந்த புதிய பெனெல்லி லியோன்சினோ 250 பைக் ரூ.1.80 லட்சம் முதல் ரூ.2 லட்சம் இடையிலான விலையில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவில் 250 சிசி ரகத்தில் மிகவும் தனித்துவமான ரகத்தில் இந்த புதிய பைக் நிலைநிறுத்தப்படும்.

வரும் 21ந் தேதி இம்பீரியல் 400 என்ற ரெட்ரோ க்ளாசிக் வகையிலான பாரம்பரிய டிசைன் அம்சங்கள் கொண்ட பைக் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். அதற்கு முன்னதாகவே, ஒரு புதிய பைக்கை பெனெல்லி அறிமுகம் செய்ய இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








