அக்.25ல் அறிமுகமாகிறது பெனெல்லி இம்பீரியல் 400 பைக்?
அக்டோபர் 25ந் தேதி புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரிய வந்துள்ளது.

பெனெல்லி நிறுவனம் இரண்டாவது இன்னிங்சில் அடித்து ஆட ஆரம்பித்துள்ளது. இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும், எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதத்தில் புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அதில் அனைவரின் எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ள பைக் மாடல் இம்பீரியல் 400 பைக். இதற்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு என்ற ரீதியில் சிலர் யோசிக்கலாம். ஆனால், ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டை குறிவைத்து இந்த புதிய மாடலை பெனெல்லி நிலைநிறுத்தப் போகிறது.

அதாவது, பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் கூடிய ரெட்ரோ கிளாசிக் வகை பைக் மாடலாக வர இருக்கிறது. இந்த புதிய பைக்கின் இந்திய வருகை குறித்து இதுவரை உறுதியானத் தகவல்கள் இல்லை. அக்டோபர் 25ல் பத்திரிக்கையாளர் நிகழ்ச்சியை நடத்த பெனெல்லி திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியானது இம்பீரியல் 400 பைக்கின் அறிமுக நிகழ்வாக அமையும் என்று ஆட்டோமொபைல் துறையினர் கருதுகின்றனர். பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட், ஸ்போக்ஸ் சக்கரங்கள், இருக்கை அமைப்பு மற்றும் அதிக அளவிலான க்ரோம் உதிரிபாகங்கள் ஆகிய அனைத்துமே பாரம்பரிய டிசைன் அம்சங்களை நினைவூட்டுகின்றன.

அதேநேரத்தில், டிஸ்க் பிரேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கிராடில் ஸ்டீல் டியூப் ஃப்ரேம் கட்டமைப்பு ஆகியவை இதனை நவீன யுக மாடலாக நிலைநிறுத்துகிறது. இந்த பைக்கில் டியூவல் ஷாக் அப்சார்பர்களும் இடம்பெற்றுள்ளன.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கில் சிங்கிள் சிலிண்டர் மற்றும் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட 373.5 சிசி எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 19 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ரூ.2.5 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350, ஜாவா கிளாசிக் மாடல்களுடன் போட்டி போடும்.


Click it and Unblock the Notifications








