அடுத்த மாதம் அறிமுகமாகும் பென்லிங் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!
சீனாவை சேர்ந்த பென்லிங் நிறுவனம் விரைவில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சீனாவை சேர்ந்த பென்லிங் நிறுவனம் இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்க உள்ளது. ஆரா என்ற பெயரில் வர இருக்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சற்று பிரிமீயம் மாடலாக நிலைநிறுத்தப்படும்.

பென்லிங் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அடுத்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது நேரடியாக ஏத்தர் 450 ஸ்கூட்டர் மாடலை குறிவைத்து நிலைநிறுத்தப்படும் வாய்ப்புள்ளது.

சீன வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் உலகின் மிக பிரபலமான கார், பைக் மாடல்களை காப்பியடிப்பது வழக்கமான விஷயம்தான். அந்த வகையில், புதிய பென்லிங் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெஸ்பா ஸ்கூட்டர்களின் டிசைன் அம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்த புதிய பென்லிங் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், ஆன்ட்டி தெஃப் அலாரம், கீ லெஸ் என்ட்ரி, ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, பிரேக்டவுன் அசிஸ்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு தொழிநுட்ப அம்சங்களுடன் வருகிறது.

புதிய பென்லிங் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2500W 72V பிரஷ்லெஸ் எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் ஆற்றல் வாய்ந்த 72V/40Ah லித்தியம் அயான் பேட்டரி இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்கூட்டரின் லித்தியம் அயான் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். ஏத்தர் 450 ஸ்கூட்டரைவிட 45 கிமீ தூரம் கூடுதல் பயண தூரத்தை இந்த ஸ்கூட்டர் வழங்கும்.

இந்த ஸ்கூட்டரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு மூன்று மணிநேரம் பிடிக்கும். ஏத்தர் 450 ஸ்கூட்டர் மணிக்கு 80 கிமீ வேகம் வரை செல்லும். ஆனால், இந்த ஸ்கூட்டர் 60 கிமீ வேகம் வரை மட்டுமே செல்லும் திறன் வாய்ந்ததாக இருக்கும்.

புதிய பென்லிங் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.90,000 எக்ஸ்ஷோரூம் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு இருக்கிறது. ஃபேம்-2 மானியத் திட்டத்தின் கீழ் தள்ளுபடி பெறும் வாய்ப்பும் உள்ளது.

அடுத்த மாதம் பென்லிங் ஆரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பரில் அடுத்ததாக பிலிவ் என்ற அடுத்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பென்லிங் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.


Click it and Unblock the Notifications