புதிய வண்ணத்தில் பிஎம்டபிள்யூ 310 பைக்குகள் அறிமுகம்!
பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் மற்றும் ஜி 310ஜிஎஸ் பைக்குகள் புதிய வண்ணக் கலவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் விலை உயர்ந்த பிரிமீயம் ரக பைக் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்த நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்துடன் இணைந்து விலை குறைவான பட்ஜெட் வகை ஸ்போர்ட்ஸ் பைக் மாடல்களை தயாரித்து களமிறக்கியது.
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் இந்த பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த பைக்குகள் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தேர்வை வழங்கும் விதத்தில், பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனம் தனது ஜி 310ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் ஆகிய இரண்டு பைக் மாடல்களிலும் புதிய வண்ணக் கலவையை அறிமுகம் செய்துள்ளது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில் காஸ்மிக் பிளாக் என்ற புதிய வண்ணத் தேர்வும், ஜி 310ஜிஎஸ் பைக்கில் ஸ்ட்ரோடோ புளூ மெட்டாலிக் என்ற வண்ணக் கலவையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த வண்ணக் கலவைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ மோட்டோராட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக்கில் கொடுக்கப்படும் காஸ்மிக் பிளாக் வண்ணக் கலவையில் கருப்பு வண்ணம் பைக்கின் பெரும்பான்மையான பாகங்களை ஆக்கிரமித்துள்ளது. பெட்ரோல் டேங்க் கவுல், முன்புற மட்கார்டு, வால் பகுதி உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே விசேஷ சிவப்பு வண்ண ஸ்டிக்கர் மூலமாக ஹைலைட் செய்யப்பட்டு இருப்பது அசத்துகிறது.

பிஎம்டபிள்யூ ஜி 310ஜிஎஸ் அட்வென்ச்சர் பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஸ்ட்ரோடோ புளூ என்ற விசேஷ நீல வண்ணக் கலவையில் சாம்பல், சில்வர், நீலம் ஆகிய வண்ணக் கலவையுடன் வந்துள்ளது. இது பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாக உள்ளது.

இரண்டு பைக்குகளிலும் 313 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 34 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்வர்டெட் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகள், டியூவல் சேனல் ஏபிஎஸ், எல்இடி டெயில் லைட்டுகள் ஆகியவை இந்த பைக்குகளின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

பிஎம்டபிள்யூ ஜி 310ஆர் பைக் ரூ.2.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஜி 310ஜிஎஸ் பைக் ரூ.3.49 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. பிஎம்டபிள்யூ மோட்டோராட் நிறுவனத்தின் விலை குறைவான பைக்குகள் என்ற பிராண்டு மதிப்பு இந்த இரு மாடல்களுக்கும் வலு சேர்க்கிறது.


Click it and Unblock the Notifications