18 லட்ச ரூபாய் பிஎம்டபிள்யூ பைக்கில் மணிக்கு 271 கிமீ வேகத்தில் பயணித்த ரைடர்... அதிர்ச்சி வீடியோ...
18 லட்ச ரூபாய் பிஎம்டபிள்யூ பைக்கில் மணிக்கு 271 கிமீ வேகத்தில் ரைடர் ஒருவர் பயணித்துள்ளார். அதுவும் இந்திய சாலையில். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகிலேயே மிகவும் அபாயகரமான சாலைகளை கொண்ட நாடு எது என்று கேட்டால், பச்சை குழந்தை கூட இந்தியா என்றுதான் சொல்லும். உலகில் மிகவும் அபாயகரமான சாலைகளில் ஒன்றாக இந்திய சாலைகள் பார்க்கப்படும் அளவிற்கு இங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

இந்திய சாலைகளில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான விபத்துக்கள் நிகழ்கின்றன. இதில், பல விபத்துக்கள் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் உயிரை பறித்து விடுகின்றன. இங்கு சாலை விபத்துக்களால் உயிர் இழப்பவர்களின் எண்ணிக்கையை நினைத்த அளவிற்கு குறைக்க முடியவில்லை.

இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் பல்வேறு முயற்சிகளுக்கு பெரிய அளவில் பலன் கிடைத்ததாக தெரியவில்லை. அவரவர்களாக பார்த்து திருந்தாவிட்டால், இங்கு சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை பெரிய அளவில் குறைக்க முடியாது.

இந்திய சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பது என்பது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக சூப்பர் பைக்குகள் மற்றும் சூப்பர் கார்கள் போன்ற சக்தி வாய்ந்த இயந்திரங்களில் இங்கு மின்னல் வேகத்தில் பயணித்தால், அதன் விளைவு மிகவும் விபரீதமானதாக இருக்கும்.

இந்திய சாலைகளில் அதிவேகத்தில் பயணிக்க அதிக ''ஸ்கில்'' தேவை. என்னதான் ஸ்கில் இருந்தாலும் கூட, மற்ற வாகன ஓட்டிகள், திடீரென குறுக்கே வரும் பாதசாரிகள் மற்றும் கால்நடைகள் ஆகிய விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த சூழலில், இந்தியாவின் பொது சாலையில் மின்னல் வேகத்தில் பயணம் செய்த டூவீலர் ரைடர் ஒருவரின் வீடியோ வெளியாகியுள்ளது. DV என்ற யூ-டியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதனை நீங்கள் கீழே காணலாம்.
பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் (BMW S1000RR) சூப்பர் பைக்கில் இந்த ரைடர் பயணம் செய்துள்ளார். அவர் அதிகபட்சமாக மணிக்கு 271 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை எட்டுவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

அதுவும் 4வது கியரிலேயே மணிக்கு 271 கிலோ மீட்டர்கள் என்ற ஹை ஸ்பீடை பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் எட்டிவிட்டது. ஆனால் பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் சூப்பர் பைக், 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனை பெற்றிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

''பேஷன்'' என்ற விஷயத்திற்காக இந்த ரைடர் இவ்வளவு வேகத்தில் பயணித்திருக்கலாம். ஆனால் இந்திய சாலைகளில் அதிவேகத்தில் அதுவும் இவ்வளவு அதிவேகத்தில் பயணிப்பது என்பது முட்டாள்தனமான ஒரு விஷயம்தான்.

சரி, இனி பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கிற்கு வருவோம். இந்த பைக்கில், 999 சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 199 பிஎச்பி பவர் மற்றும் 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது.

பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கின் விலை சுமார் 18 லட்ச ரூபாய். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. முழுமையாக எரிபொருள் நிரப்பப்பட்ட நிலையில், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கின் எடை 208 கிலோ.

சரி, இந்திய சாலைகளில் அதிவேகத்தில் பயணிப்பது ஏன் ஆபத்தான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது தெரியுமா? கணிக்க முடியாத சூழ்நிலைகளே இதற்கு முக்கிய காரணம். இங்கு பெரும்பாலான வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பது கிடையாது.

எவ்வித எச்சரிக்கையையும் கொடுக்காமலும், பின்னால் உள்ள டிராஃபிக்கை சோதிக்காமலும், திடீரென லேன் மாறும் வாகன ஓட்டிகள் இங்கு அதிகம். இதுதவிர திடீர் திடீரென தடம் மாறும் கால்நடைகள் மூலமும் அச்சுறுத்தல் உள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவை உங்கள் வாகனத்தின் முன்னால் குதித்து விடக்கூடும்.

அத்துடன் சாலை கடக்கிறேன் பேர்வழி என்கிற பெயரில், திடீரென வாகனத்தின் குறுக்கே வரும் பாதசாரிகளாலும், கடந்த காலங்களில் இந்தியாவில் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. இந்த சூழல்களில் நீங்கள் அதிவேகத்தில் பயணித்தால் உங்களால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாது.


Click it and Unblock the Notifications








