15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை வாங்கிய சினிமா நடிகை... எதற்காக என தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க...
சினிமா நடிகை ஒருவர் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள பைக்கை புதிதாக வாங்கியுள்ளார். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார் அல்லது பைக் போன்ற புதிய வாகனங்களை வாங்க வேண்டுமென்றால், சராசரி மக்களாகிய நாம் நீண்ட காலம் யோசிப்போம். அதன்பின்புதான் ஒரு முடிவுக்கு வருவோம். ஆனால் திரைப்பட நடிகர், நடிகைகளை பொறுத்தவரை புதிய வாகனங்களை வாங்குவது என்பதெல்லாம் சர்வ சாதாரணம். அதுவும் மிக விலை உயர்ந்த வாகனங்களை எல்லாம் அசால்டாக வாங்குவது அவர்களின் வாடிக்கை.

திரைப்படங்கள் மூலமாக அதிகமான வருமானம் ஈட்டுவதால் மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார் மற்றும் பைக்குகளை வாங்குவது அவர்களுக்கு எளிதாக உள்ளது. பெரும்பாலும் ஆடம்பரத்திற்காகவே சினிமா நட்சத்திரங்கள் சொகுசு வாகனங்களை வாங்குகின்றனர். ஆனால் சினிமா நடிகை ஒருவர் முற்றிலும் வித்தியாசமான காரணத்திற்காக விலை உயர்ந்த பைக் ஒன்றை தற்போது வாங்கியுள்ளார்.

ஊர்வசி ரவுத்தேலாதான் அந்த நடிகை. மிகவும் விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை ஊர்வசி ரவுத்தேலா தற்போது வாங்கியுள்ளார். இந்த பைக்கின் விலை எவ்வளவு தெரியுமா? 14.69 லட்ச ரூபாய். இது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை மட்டுமே. ஷோரூமை விட்டு வெளியே வரும்போது ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும்.

பாலிவுட் நடிகை மற்றும் மாடலான ஊர்வசி ரவுத்தேலா, கடந்த வாரம் தீபாவளி பண்டிகை சமயத்தில் இந்த ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை வாங்கியுள்ளார். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் பிரபலமான க்ரூஸர் மோட்டார்சைக்கிள்தான் ஃபேட் பாப். இது இந்திய மார்க்கெட்டில் மிக பிரபலமான மாடலாக உள்ளது.

குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலர் வரிசையாக ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை வாங்கி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகர் ராஜ்குமார் ராவ் கூட இதே ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கருப்பு நிறத்தில் இந்த பைக்கை வாங்கியிருந்தார்.

அதேபோல் நடிகை ஊர்வசி ரவுத்தேலாவும் கூட கருப்பு வண்ணத்தில்தான் ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை தேர்வு செய்துள்ளார். நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு மாடலாக தனது கேரியரை தொடங்கியவர். கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த 'சிங் சாப் தி கிரேட்' என்ற படத்தில் நடிகை ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். இதுதான் பாலிவுட்டில் அவர் அறிமுகமான திரைப்படம்.

அவர் தற்போது புதிதாக வாங்கியுள்ள ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கில், Milwaukee-Eight 107 V-Twin இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 145 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. ஆனால் இதன் அதிகாரப்பூர்வ பிஎச்பி பவரை ஹார்லி டேவிட்சன் நிறுவனம் வெளியிடவில்லை.

எனினும் சுயாதீனமாக மேற்கொள்ளப்பட்ட சில டைனோ சோதனைகளின்படி இந்த பைக், சுமார் 80 பிஎச்பி பவரை உருவாக்கும் என கூறப்படுகிறது. ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கின் எடை 309 கிலோ. இவ்வளவு விலை உயர்ந்த மற்றும் சக்தி வாய்ந்த பைக்கை தனது சகோதரருக்காகவே நடிகை ஊர்வசி ரவுத்தேலா வாங்கியுள்ளார்.

நடிகை ஊர்வசி ரவுத்தேலாவின் சகோதரர் யஷ்ராஜ் ரவுத்தேலா பைலட்டாக பணியாற்றி வருகிறார். அவர் போர்ச்சுக்கல்லில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சகோதரர் யஷ்ராஜ் ரவுத்தேலாவுக்கு பரிசளிக்க வேண்டும் என்பதற்காகவே ஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் பைக்கை நடிகை ஊர்வசி ரவுத்தேலா வாங்கியுள்ளார்.

இதுகுறித்து நடிகை ஊர்வசி ரவுத்தேலா கூறுகையில், ''இந்த உலகில் எனது சகோதரர் சிறந்த சகோதரியை பெற்றுள்ளார். அவர் மிகவும் நேசிக்க கூடிய ஒன்றை அவருக்கு சர்ப்ரைஸாக பரிசளிக்க வேண்டும் என விரும்பினேன். இந்த ஹார்லி டேவிட்சன் அவருக்கு நிச்சயம் ஆச்சரியத்தை கொடுக்கும் என்பது எனக்கு தெரியும்'' என்றார்.
இப்படி விலை உயர்ந்த மற்றும் நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றை பரிசாக கொடுக்கும் சகோதரி கிடைக்க நிச்சயம் கொடுத்து வைத்திருக்கதான் வேண்டும். இதனிடையே ஊர்வசி ரவுத்தேலாவிடம் வெள்ளை நிற ரேஞ்ச் ரோவர் எவோக் மற்றும் மெர்சிடிஸ் பி-க்ளாஸ் உள்ளிட்ட வாகனங்கள் சொந்தமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








