பல தடைகளைத் தாண்டி களமிறங்கும் சீன நிறுவனத்தின் புதிய ரக பைக்குகள்... அறிமுக தேதி வெளியீடு...!
சீனாவைச் சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம், பல தடைகளைத் தாண்டி அதன் தயாரிப்புகளை இந்தியாவில் களமிறக்க இருக்கின்றது. தற்போது, இந்த பைக்குகளின் அறிமுகம்குறித்த தகவல் வெளியாகியுள்ளன.

சீனாவைச் சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம், இந்தியாவில் அதன் தயாரிப்புகளை களமிறக்க முயற்சி செய்து வருகின்றது. ஆனால், அந்நிறுவனம் ஒவ்வொரு முறையும் இந்திய வருகையின்போது பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றது.
அந்தவகையில், சிஎஃப் நிறுவனம் இதுவரை இரண்டுக்கும் மேற்பட்ட முறை, பைக்குகளின் அறிமுக தேதியை பின் வாங்கியுள்ளது.

முன்னதாக, சிஎஃப் மோட்டோ நிறுவனம், இந்தியாவில் அதன் தயாரிப்புகளை களமிறக்க ஹைதராபாத்தைச் சேர்ந்த எய்டர் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. ஆனால், அந்நிறுவனம் போலியானது என்பதை அறிந்தவுடன், கூட்டணியிலிருந்து பின் வாங்கியது.

பின்னர், ஏஎம்டபிள்யூ நிறுவனத்துடன் கூட்டணி அமைத்த சிஎஃப் மோட்டோ, அதன் கூட்டணியில் கடந்த ஜூலை 8ம் தேதி மும்பையில் அதன் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.

ஆனால், கடந்த வாரங்களில் பெய்த கன மழையின் காரணமாக, மும்பை நகரம் முழுவதும் வெள்ளநீரால் சிக்கித் தவித்தது. இதனால், சிஎஃப் மோட்டோ நிறுவனத்தால், குறிப்பிட்ட தேதியில் அதன் பைக்குகளை அறிமுகம் செய்ய முடியவில்லை.

இவ்வாறு, தொடர்ச்சியாக பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் சிஎஃப் மோட்டோ நிறுவனம், தற்போது புதிய அறிமுக தேதியை வெளியிட்டுள்ளது.
அந்தவகையில், சிஎஃப் மோட்டோ நிறுவனத்தின் பைக்குகள் வருகின்ற 19ம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சிஎஃப் நிறுவனம், ஸ்ட்ரீட் ஃபைட்டர் வரிசையில் 300என்கே மற்றும் 650 என்கே மாடலையும், டூரிங் ரக மாடலில் 650ஜிடி மற்றும் 650எம்டி ஆகிய பைக்குகளையும் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த பைக்குகள் வருகின்ற 19ம் தேதி நிச்சயம் களமிறக்கப்பட்டுவிடும் என சிஎஃப் மோட்டோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுகுறித்த தகவலை பைக்வேல் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

இந்த பைக்குகள் முதற்கட்டமாக இந்தியாவின் முக்கிய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், மும்பை, கோவா மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வரவிருக்கின்றது. இதற்கான ஷோரூம்கள் மற்றும் டீலர்கள் நிறுவப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது.

சிஎஃப் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கும் பைக்குகளிலேயே, மலிவு விலை கொண்டதாக 300 என்கே மாடல் இருக்கின்றது. இதில், 292.4 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்ட் திறன் கொண்ட எஞ்ஜின் ஆகும்.

மேலும், இந்த எஞ்ஜின் 34எச்பி பவரையும், 20.5 என் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனையும் கொண்டுள்ளது. தொடர்ந்து, இந்த பைக்கில் பிரத்யேக வசதியாக ஸ்போர்ட் மற்றும் மழை என்ற இருவிதமான ரைடிங் மோட்கள் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளன.

இத்துடன், நவீன மற்றும் தொழிற்நுட்ப வசதியாக 300 என்கே மாடலில், டிஎஃப்டி வண்ணத் திரை, எல்இடி ரகத்திலான மின் விளக்குகள் மற்றும் ரியர் வீலுக்கான ஹஃகர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதைத்தொடர்ந்து, சற்று அதிக பவர் கொண்ட மாடல் பைக்குகளாக களமிறங்கும் 650 என்கே, 650 எம்டி மற்றும் 650 ஜிடி ஆகிய மூன்று பைக்குகளும் ஒரே திறன் எஞ்ஜினைதான் பெற்றிருக்கின்றன. அந்தவகையில், 649.3 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜினை அவை உள்ளடக்கியுள்ளன.

இதில், ஸ்ட்ரீட் ஃபைட்டர் ரகத்தில் களமிறங்கும் 650 என்கே மாடல் பைக் 61 எச்பி பவரையும், 56 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
அதேபோன்று, டூரிங் ரக மாடலில் களமிறங்கும் 650 எம்டி பைக் 70.7 எச்பி பவரையும், 62 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையில் ட்யூன்-அப்பைப் பெற்றிருக்கின்றது.

அதேபோன்று, 650 ஜிடி பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 649.3 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின், 62.5 எச்பி பவரையும், 58.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.
இதில், 650 என்கே மாடல் பைக்கைக் காட்டிலும் சற்று கூடுதல் சிறப்பம்சங்களைக் உள்ளடக்கிய மாடலாக 650 எம்டி பைக் இருக்கின்றது. அந்தவகையில், அதன் கெர்ப் எடை 650என்கே மாடலைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருக்கின்றது.

அதற்கு 650எம்டி பைக்கில் இடம்பெற்றுள்ள கூடுதல் உடற்கூறுகளே காரணமாக இருக்கின்றது. அதேசமயம், இந்த கூடுதல் பாகங்களால்தான், 650எம்டி பைக் டூரிங் ரகத்தில் காட்சியளிக்கின்றது.
இந்த பைக்குகளின் விலை குறித்த தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. மேலும், இந்த விலை குறித்த தகவல் அறிமுகத்தின்போது வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








