மும்பையின் சோகமான நிலைக்காக புதிய பைக்குகளின் அறிமுகத்தை ரத்து செய்த சீன நிறுவனம்...
மும்பை தற்போது வெள்ளத்தில் சிக்கி தவித்து வருவதால், சீனாவைச் சேர்ந்த சிஎஃப் மோட்டோ நிறுவனம், அதன் நான்கு புதிய மாடல் பைக்குகளின் அறிமுகத்தை தற்காலிமாக ரத்து செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் சிஎஃப் மோட்டோ நிறுவனம், இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக, அதன் நான்கு புத்தம் புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. அதன்படி, இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மும்பையில், நாளை (ஜூலை 4) நடைபெற இருந்த நிகழ்ச்சியி அறிமுகம் செய்ய இருப்பதாக கூறியிருந்தது.

ஆனால், தற்போது மும்பையின் நிலை மிக மோசமான சூழலைச் சந்தித்துக் கொண்டிருப்பதால், மோட்டார்சைக்கிள்களின் அறிமுகத்தை சிஎஃப் மோட்டோ நிறுவனம் பின் வாங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், இதனை மீண்டும் எப்போது அறிமுகம் செய்யும் என்ற தகவலை அது அறிவிக்கவில்லை.

மும்பை நகரம் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகின்றது. இதனால், நகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது. இதன்காரணமாகவே சிஎஃப் மோட்டோ நிறுவனம், அதன் அறிமுகத்தை தற்காலிமாக ரத்து செய்துள்ளது.
சிஎஃப் மோட்டோ நிறுவனம் இந்தியாவில், அதன் தயாரிப்புகளை ஏஎம்டபிள்யூ மோட்டார்சைக்கிள் நிறுவனத்துடன் இணைந்து அறிமுகம் செய்ய இருக்கின்றது.

முன்னதாக இந்நிறுவனம், கடந்த 2016ம் ஆண்டே இந்தியாவில் கால் தடம் பதிக்கும் விதமாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த எய்டர் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது. ஆனால், அந்நிறுவனம் போலியானது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, கூட்டணியில் இருந்து பின் வாங்கியது. இதைத்தொடர்ந்தே, சிஎஃப் மோட்டோ நிறுவனம் இரண்டாவது முயற்சியாக, நாளை அதன் பைக்குகளை அறிமகும் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது.

ஆனால், இயற்கை பேரிடரின் காரணமாக, இரண்டாவது முயற்சியும் தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், சிஎஃப் மோட்டோ நிறுவனம் சற்று கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.

இந்த நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த மாடல்களான 300 என்கே, 650என்கே, 650எம்டி மற்றும் 650ஜிடி ஆகிய மாடல் பைக்குகளையே முதற்கட்டமாக நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருந்தது. அதேசமயம், இந்த பைக்குகளை சிஎஃப் மோட்டோ நிறுவனம் இந்தியாவின் சில முக்கிய நகரங்களில் மட்டுமே முதற்கட்டமாக விற்பனைச் செய்ய முடிவ செய்துள்ளது.

அதன்படி, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சின், மும்பை, கோவா மற்றும் புனே உள்ளிட்ட நகரங்களில் ஷோரூம்கள் ஏற்கனவே ஷோரூம்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், இங்கிருந்தே அந்த நிறுவன் நான்கு புதிய பைக்குகளின் விற்பனையைத் தொடங்க திட்டமிட்டிருந்தது.

சிஎஃப் மோட்டோ நிறுவனம் களமிறக்கும் பைக்குகளிலேயே 300என்கே மாடல்தான் மிகவும் மலிவு விலை மாடாலகும். இந்த பைக்கில், 292.4 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 34எச்பி பவரையும், 20.5 என் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன்கொண்டது. இந்த பைக்கில் ஸ்போர்ட் மற்றும் மழை என்ற இரண்டு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து, நவீன மற்றும் தொழில்நுட்ப அம்சங்களாக 300 என்கே பைக்கில், எல்இடி மின் விளக்குகள், டிஎஃப்டி கலர் டிஸ்பிளே மற்றும் ரியர் வீல் ஹஃகர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக், கேடிஎம் 250 ட்யூக் மற்றும் ஹோண்டா சிபி300ஆர் ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

இதைத்தொடர்ந்து, களமிறங்கும் 650என்கே, 650எம்டி மற்றும் 650ஜிடி ஆகிய பைக்குகள் அனைத்திலும் 649.3சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர், லிக்யூடு கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளன.
இதில், நேக்கட் ரக 650 என்கே மாடல் பைக் 61எச்பி பவரையும், 56 என்எம்டார்க்கையும் வெளிப்படுத்தும் வகையிலான ட்யூன்-அப்பைப் பெற்றுள்ளது.

அதேபோன்று, அட்வென்டர் டூரர் மாடலான 650எம்டி பைக் 70.7 எச்பி பவரையும், 62 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். அதேசமயம், இந்த பைக் 650 என்கே மாடலைக் காட்டிலும் சற்று கூடுதல் அம்சங்களைக் உள்ளடக்கிய மாடலாக இருக்கின்றது.
அந்தவகையில், அதன் கெர்ப் எடை 213 கிலோவாக உள்ளது. ஆனால், 650என்கே மாடலின் எடையோ 206 கிலோவாக இருக்கின்றது.

650எம்டி பைக்கின் அதிக எடைக்கு, அதில் பொருத்தப்பட்டிருக்கும் கூடுதல் உடற்கூறுகளே காரணமாக இருக்கின்றது. அதேசமயம், இந்த கூடுதல் பாகங்களால்தான், அந்த பைக்கிற்கு அட்வென்சர் டூரர் தோற்றத்தை அளிக்கின்றது.
650ஜிடி பைக்கில் 649.3 சிசி திறன் கொண்ட ட்வின் சிலிண்டர் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 62.5 எச்பி பவரையும், 58.5 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

இந்த பைக்குகள் அனைத்தும் சர்வதேச சந்தையில் அதன் போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் வகையில், மலிவு விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. அதேபோன்று, இந்தியாவில் களமிறங்கும்போதும், இதேபோன்று மலிவு விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது, இந்த பைக்குகளின் அறிமுகம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் அவற்றின் அறிமுகம்குறித்த தகவலை சிஎஃப் மோட்டோ நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








