தொடர் கதையாகும் தீ விபத்து: சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்...!
புதிதாக வாங்கப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தானாக தீ பிடித்து எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

அண்மைக் காலமாக இந்திய அரசு, நாடு முழுவதும் மின்வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கின்ற முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதற்கு, எரிபொருள் வாகனங்களைப் போன்று அல்லாமல், அவை சுற்றுப்புறச் சூழலுக்கு நண்பனாக செயல்டுவதே முக்கிய காரணமாக இருக்கின்றது.

அதேசமயம், மின் வாகனங்கள் குறைந்த செலவில், அதிக பலனை கொடுப்பவையாக இருக்கின்றன. இதுபோன்ற சில காரணங்களாலேயே மின் வாகன பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகின்றது. மேலும், தற்போது இருக்கும் மின் வாகனங்களின் அளவை பன் மடங்கு உயர்த்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், மின் வாகனங்களுக்கு மானியம், நிதியுதவி மற்றும் வரிச் சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
அதேநேரத்தில், மக்கள் தொகைக்கு ஈடுகொடுக்கும் வகையில், அதீத எண்ணிக்கையில் பயன்பாட்டில் இருக்கும் எரிபொருள் வாகனங்களை அடியோடு ஒழித்துகட்டுகின்ற முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அது, தற்போது அதிதீவிரமாக மாறி வருகின்ரது. அந்தவகையில், சமீபகாலமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத போரைத் தொடுத்து வருகின்றது.
இதன்காரணமாக, பொதுமக்கள் பலர் தங்களை மின் வாகன பயன்பாட்டிற்கு மாற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், தலைநகர் சென்னையில் உள்ள மாங்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞரின் புதிய மின்சார ஸ்கூட்டர், சார்ஜ் செய்யும்போது வெடித்து சிதறி விபத்துக்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீப காலங்களாக மின் வாகன பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வரும்நிலையில், பொதுமக்களும் அவற்றிற்கு மாறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தானாக வெடித்துச் சிதறிய சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீ விபத்தைச் சந்தித்திருக்கும் இந்த ஸ்கூட்டர், அம்பாள் நகர், குபேரன் தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (32) என்பவருடையதாகும். இவர், கனரக வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகளை சர்வீஸ் செய்யும் தொழில் செய்து வருகின்றனர்.

மணிகண்டன் அண்மையில்தான், இந்த மின்சார ஸ்கூட்டரை புதிதாக வாங்கியதாக கூறப்படுகின்றது. இவர், ஒவ்வொரு நாளின் பயன்பாட்டிற்கும் பின்னர், எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் போடும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்.

அதன்படி, நேற்றைய தினம் ஸ்கூட்டரை, வீட்டின் வாசல் முன்பு நிறுத்தி, சார்ஜ்போட்டுவிட்டு வீட்டுக்குள் சென்றுள்ளார். அவர், சென்ற சிறிது நேர்த்திலேயே வீட்டிற்கு வெளியிலிருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டு சத்தம் கேட்டுள்ளது.

இதனால், வீட்டுக்குள் இருந்த அனைவரும் பதறியடித்துக்கொண்டு வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, மணிகண்டனுடைய புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்துள்ளது. இதையடுத்து, வீட்டர்கள் அனைவரும் தீயை அனைக்கும் விதமாக, தண்ணீரை குடம் குடமாக கொண்டு வந்து சாய்த்துள்ளனர்.

இருப்பினும், தீ கட்டுபாட்டிற்குள் வந்த பாடில்லை. இதனால், மணிகண்டன் தீயணைப்புத்துறைக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அவர்கள் வருவதற்குள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தமாக தீயிற்கு இறையாகி, வெறும் கூடாக மாறியது. மேலும், தீ விபத்தால், மணிகண்டனின் வாசல் முழுவதும் கருப்பு சுண்ணாம்பு அடித்து இருந்ததுபோல், கரும்புகை படிந்திருந்தது.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த அம்பாள் நகர் போலீஸார், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் நடந்த அன்றைய தினம் முழுவதும், அம்பாள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் குறைந்த மின்னழுத்தம் இருந்ததாக கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி எரிந்திருக்கலாம் என கூறப்படுகின்றது. அதேசமயம், ஸ்கூட்டர் பற்றி எரிய வேறு ஏதேனும் காரணமாக இருக்கின்றதா என்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது, தீ விபத்தில் சிக்கியிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எந்த நிறுவனத்துடையது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதேசமயம், முன்னதாககூட இதேபோன்று, எலெக்ட்ரிக் வாகனங்கள் திடீரென தானாக பற்றி எரிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்தவகையில், அண்மையில் வெளியான ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா எலக்ட்ரிக் கார் திடீரென எரிந்து நாசமாகியது.

இந்த சம்பவம் கனடாவில் உள்ள மாண்ட்ரியல் எனும் பகுதியில் அரங்கேறியுள்ளது. இது, கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 26ம் தேதி) அன்றுதான் நடைபெற்றுள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் அதே பகுதியைச் சேர்ந்த பியாரோ கோசென்டினோ என்பவருக்கு சொந்தமானது என கூறப்படுகின்றது. இவரும், இந்த காரை சமீபத்தில்தான் வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்நிலையில், கராஜில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து, பியாரோ கோசென்டினோ அளித்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால், அதற்குள் அந்த காரின் முன் பகுதி முழுவதுமாக எரிந்து நாசமாகியது. இதுகுறித்த விவரங்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








