அசின் கணவர் களமிறக்கும் எலக்ட்ரிக் பைக்கின் ஸ்கெட்ச் படம் வெளியாகியது..!
நடிகை அசினின் கணவர் களமிறக்கும் தொழில்நுட்பம் நிறைந்த எலக்ட்ரிக் பைக் குறித்த ஸ்கெட்ச் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட் வரைச் சென்றவர் தான் நடிகை அசின். இவர் தமிழில் விஜய், அஜித், சியான் விக்ரம், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து, பாலிவுட்டில் காலடி வைத்த அவர், ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு, அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

ராகுல் ஷர்மா, இவர் பிரபல மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஆனால், இந்த ஸ்மார்ட்போன்களுக்கு சந்தையில் வரவேற்பு கிடைக்காத காரணத்தால், மாற்று தொழிலை செய்யும் விதமாக, தற்போது எலக்ட்ரிக் வாகனங்களை உள்நாட்டிலேயே தயாரித்து விற்பனைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதற்கான பணியினை அவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

அவ்வாறு, அவர் மேற்கொண்டு வரும் நிறுவனம் தான் ரிவோல்ட் இன்டெல்லி கார்ப் நிறுவனம். இந்த நிறுவனத்தின்மீது அவர் சுமார் 400 முதல் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், இந்நிறுவனம் தயாரித்து வரும் முதல் மின் மோட்டார்சைக்கிள் குறித்த ஸ்பை படங்களை சமீபத்தில் த்ர்ஷ்ட்ஜோன் என்ற இணையதளம் வெளியிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, அந்த ஸ்பை படங்களை வைத்தே, எலக்ட்ரிக் பைக் குறித்த அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவ ஆரம்பித்தன.

இந்நிலையில், ரிவோல்ட் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் எலக்ட்ரிக் பைக் குறித்த ஸ்கெட்ச் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. அவ்வாறு, ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்தின் மூலம் வெளிவரும், இந்த முதல் எலக்ட்ரிக் பைக்கில் ஆட்டோ இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் சந்தையில் கிடைக்கவிருக்கும் முதல் எலக்ட்ரிக் பைக்காக இது இருக்கும் கூறப்படுகிறது.

இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கான டிசைனை, அந்த நிறுவனத்தின் மூத்த டிசைனிங் அதிகாரியான சிவம் ஷர்மா உருவாக்கியுள்ளார். இந்த ஸ்கெட்ச் டிசைனை வைத்து பார்க்கும் போது, இந்த எலக்ட்ரிக் பைக் ஏரோடைனமிக்ஸை மனதில் வைத்து உருவாக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இந்த டிசைனானது காற்றை கிழித்துக்கொண்டு அதிவேகமாகச் செல்லும் திறனை எலக்ட்ரிக் பைக்கிற்கு வழங்கும்.

இந்த மோட்டார்சைக்கிளின் ஸ்மார்ட்டான ஸ்போர்ட்ஸ் லுக் மற்றும் தொழில்நுட்பங்கள் எந்தவொரு வாகன ஓட்டியையும் எளிதில் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் போல்டான மற்றும் துடிப்பான தோற்றம் புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இருக்கிறது.
அதேபோன்று, இது நகர்ப்புறங்களில் வாழும் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், வசதியானதாகவும் இருக்கும். மேலும், சுற்றுபுறச் சூழலுக்கு நண்பனாகவும் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப்-இன் முதல் எலக்ட்ரிக் பைக்கிற்கு டிசைன் செய்த அனுபவம் குறித்து சிவம் ஷர்மா கூறியதாவது,
"ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் மின் மோட்டார்சைக்கிளுக்கு டிசைன் செய்த அனுபவம் ஒரு அற்புதமான செயல்முறையாக இருந்தது. மேலும், இதை நாங்கள் அனைத்து கோணங்களிலும் முற்றிலுமாக பரிசோதித்து பார்த்துள்ளோம். இந்த எலக்ட்ரிக் பைக்கை இயக்கும் வாகன ஓட்டி, ஒவ்வொரு நாளும் புதிய அனுபவத்தை பெரும் வகையில், தொழில்நுட்பங்கள் மட்டுமின்றி பைக்கின் சௌகரியம் குறித்தும் பார்த்து பார்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

மேலும் பேசிய அவர், "ரிவோல்ட் இன்டெல்லி கார்ப்-இன் இந்த புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கிற்கான டிசைன் பணி ஆறு மாதங்களாக நடைபெற்று வந்தது. மேலும், மூன்று விதமான வழிகளில், ஏழு விதமான டிசைன்களைக் கொண்டு தற்போது உருவம் பெற்றிருக்கும் டிசைன் தேர்வு செய்யப்பட்டது" என தெரிவித்தார்.
தற்போது ரிவோல்ட் நிறுவனம் இந்த புதிய மாடல் எலக்ட்ரிக் பைக்கை இந்தியச் சாலையில் வைத்து பரிசோதனைச் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. ஆகையால், இந்த புதிய மாடல் எலக்ட்ரிக் பைக் கூடிய விரைவில் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








