ரூ.199-க்கு சர்வீஸ் செய்யும் ஹூரோ நிறுவனம்: இந்த சலுகையைப் பெற நீங்க என்ன செய்யனும் தெரியுமா...?
ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு ரூ.199-க்கு சர்வீஸ் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சலுகையைப் பெற வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பினை கடந்த மார்ச் மாதம் 10ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், இம்மாதம் 11ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதேபோன்று, ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தலும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெற இருக்கின்றது.

இந்நிலையில், கடந்த 11ம் தேதி முதல்கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் தெலங்கானா, ஆந்திரபிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், மிசோரம், நாகலாந்து, மணிப்பூர், திரிபுரா, அசாம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேர்தல் நடைபெற இருக்கின்றது.

இந்தசூழ்நிலையில், தேர்தலின்போது வாக்களிப்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் என்பதனைக் குறித்து தேர்தல் ஆணையம் உட்பட சில தொண்டு நிறுவனங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றன. அந்த வகையில், தமிழக தேர்தல் ஆணையம் சமீபத்தில், வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு பாடல் ஒன்றை வெளியிட்டது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் நாட்டுபுறப்பாடலை பாடி வரும் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி குறலில் இந்த பாடல் வெளியாகியது.
மேலும், அந்த பாடலில் சில முன்னணி நடிகர்களும், பாடகர்களும் இடம் பெற்றிருந்தனர். அவ்வாறு, அந்த விழிப்புணர்வு பாடலில், தேர்தலின் முக்கியத்துவம் குறித்தும் தேர்தல் உரிமையைப் பெறுவதற்காக நம் முன்னோர்கள் செய்த தியாகத்தைக் குறித்தும் பாடப்பட்டிருந்தது.

இதேபோன்று, கர்நாடக அரசு இயக்கிவரும் அரசுப் போக்குவரத்து கழகமான பெங்களூரு நகர போக்குவரத்து கழகம், தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பயணிகளுக்கு வழங்கப்படும் டிக்கெட்டுகளில் 'வாக்களிப்பது உங்கள் உரிமை', 'தயவுசெய்து வாக்களியுங்கள்' என எழுதியிருந்தது.

இவ்வாறு மக்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வரும்நிலையில், வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூரோ மோட்டோகார்ப் வித்தியாசமான வகையில் பிரச்சாரத்தை வழங்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில், தேர்தலில் வாக்களிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 199 விலையில், பிரஸ்ஸர் வாஷ் மற்றும் ஜெனரல் சர்வீஸ் வழங்கப்பட உள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள், தாங்கள் வாக்களிக்கும்போது, விரலில் வைக்கப்படும் மை-யை அத்தாட்சியாக காண்பிக்க வேண்டும். மேலும், சில ஆவணங்களைச் சமர்பித்து இந்த சலுகையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சலுகையை ஹூரோ மோட்டோகார்ப் நிறுவனம் நாடு முழுவதும் வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதன் கால வரம்பு குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. இதேபோன்று, இந்த சலுகையைப் பெற முன்-பதிவும் செய்யப்படுகிறது. ஹூரோ நிறுவனத்தின் இந்த திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications








