ஆக்டிவா-விற்கு செம்ம டஃப் கொடுக்க இருக்கும் ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்: விற்பனைக்கு அறிமுகம்!
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக இரண்டு புதிய ஸ்கூட்டர்களை விற்பனைக்கு களமிறக்கியுள்ளது. இதில், புதிதாக களமிறங்கியுள்ள ப்ளஷர் ப்ளஸ் ஸ்கூட்டர் குறித்த தகவலை காணலாம்.

இரு சக்கர வாகன தயாரிப்பில் ஜாம்பவானாக செயல்பட்டு வரும் ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம், அதன் மிகவும் பிரபலமான இரண்டு ஸ்கூட்டர்களின் புதுப்பிக்கப்பட்ட மாடல்களை இந்தியாவில் விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டியாக இந்த இரண்டு புதிய ஸ்கூட்டர்களும் இன்று விற்பனைக்கு களமிறக்கப்பட்டு உள்ளன. மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் ப்ளஷர் ப்ளஸ் ஆகிய இரண்டு ஸ்கூட்டர்களைத்தான் அந்த நிறுவனம், ஸ்கூட்டர் சந்தைக்கு புதிதாக களமிறக்கியுள்ளது.

ஏற்கனவே, மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் குறித்த தகவலை நாம் பார்த்துவிட்டதால், இந்த பதிவில் ஹீரோ ப்ளஷர் ப்ளஸ் ஸ்கூட்டர் குறித்த தகவலைப் பார்க்கலாம். ஹீரோ நிறுவனம், ப்ளஷர் ப்ளஸ் ஸ்கூட்டருக்கு ரூ. 49,300 என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

ஹீரோ நிறுவனம், ப்ளஷர் ப்ளஸ் ஸ்கூட்டரில் கணிசமான மாற்றங்களைச் செய்துள்ளது. இதனால், அதன் ஸ்டைல் மற்றும் லுக் முந்தைய ப்ளஷர் ஸ்கூட்டரைக் காட்டிலும் சற்று கவர்ச்சியாக அமைந்துள்ளது. அதேபோன்று, புதிய வண்ணத்தினாலும் மிடுக்கான காட்சியை இந்த ஸ்கூட்டர் வழங்குகிறது.

ஸ்கூட்டரின் பவரான செயல்பாட்டிற்காக, 110சிசி எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 8.0 பிஎச்பி பவரையும், 8.1 என்எம் டார்க்கையும் வழங்கும் திறன் கொண்டது. இந்த ப்ளஷர் ப்ளஸ், இந்திய ஸ்கூட்டர்கள் சந்தையில், ஹோண்டாவின் ஆக்டிவா, டிவிஎஸ் நிறுவனத்தின் ஜூபிடர், அப்ரில்லா 150 உள்ளிட்ட மாடல்களுடன் கடுமையான போட்டியைச் சந்திக்கும்.

ஹீரோ நிறுவனம் அண்மையில் தான், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200, எக்ஸ்பல்ஸ் 200டி, எக்ஸ்ட்ரீம் 200 எஸ் ஆகிய மூன்று மாடல் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கியது. இந்த சூழ்நிலையில், ஸ்கூட்டர்களின் சந்தையில் தனக்கு இருக்கும் சம்ராஜ்யத்தை நிலைநாட்டிக் கொள்ளும் வகையில் தற்போது இந்த இரண்டு புதிய ஸ்கூட்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

இதில், ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மாடலானது ஆஃப் ரோடு மற்றும் அட்வென்ஜர் பயணத்திற்கு ஏற்ப தயாராகியுள்ளது. அதேபோன்று, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடலானது, ஆன் ரோடு டூரர் வெர்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200டி மாடலின் விலை ரூ.94 ஆயிரமாகவும், எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளின் கார்ப் வெர்ஷன் ரூ. 97 ஆயிரமாகவும், எஃப்ஐ வெர்ஷன் விலை ரூ. 1.05 லட்சமாகவும், எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலின் விலை 98,500 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.


Click it and Unblock the Notifications








