ஹீரோ நிறுவனத்தின் சக்தி வாய்ந்த பைக்குகளின் விற்பனை எப்போது? தகவல் உள்ளே!
ஹீரோ மோட்டாகார்ப் நிறுவனம் நீண்ட நாள் இழுத்தடிப்புக்கு பின்னர், அதன் இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களின் விற்பனைக் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

இருசக்கர வாகன தயாரிப்பில் ஜாம்பவனாக திகழ்ந்து வரும் ஹீரோ நிறுவனம், அதன் தயாரிப்பில் இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி ஆகிய இரண்டு மாடல்களைத்தான் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளினை கான்செப்ட் மாடலாக, கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. தொடர்ந்து, இந்த மாடலின் உற்பத்தி வெர்ஷனை கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது.

இதேப்போன்று, டூரிங் மாடலான எக்ஸ்பல்ஸ் 200டி வேரியண்டை, 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களையும், ஹீரோ நிறுவனம் அவ்வப்போது சாலைகளில் வைத்து சோதனைச் செய்து வந்தது.

இந்த நிலையில், நீண்ட நாட்களுக்கு பின் இந்த இரண்டு இருசக்கர வாகனங்களையும் விற்பனைக்கு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை காடிவாடி ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. அவ்வாறு, இந்த இரண்டு மாடல் மோட்டார்சைக்கிள்களும் வருகின்ற மே மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரு மோட்டார்சைக்கிள்களையும் ஒப்பிடுகையில், எக்ஸ்பல்ஸ் 200 மாடலில் சற்று உயரமாக சைலென்சர் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த மோட்டார்சைக்கிளின் முன்பக்கத்தில் 21 இன்ச் கொண்ட ஸ்போக்ஸ் வீலும், பின்பக்கத்தில் 18 இன்ச் கொண்ட ஸ்போக்ஸ் வீலும் பொருத்தப்பட்டுள்ளன.

இத்துடன் இந்த மோட்டார்சைக்கிளில் பாதுகாப்பு அம்சமாக சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சிறந்த பயண அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில், 190mm உயர டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன்பக்கத்திலும், 170mm உயர மோனோசாக்ஸ் பின்பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளன. இது ஆஃப் ரோடு பயணம் மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு சௌகரியமான அனுபவத்தை வழங்கும்.

இதேபோன்று, டூரிங் வெர்ஷனான எக்ஸ்பல்ஸ் 200டி மோட்டார்சைக்கிளில் 17 இன்ச் கொண்ட அலாய் வீல் பொருத்தப்பட்டுள்ளது. இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ் 30mm-ஆக உள்ளது. இதன் ஹேண்டில் பார்கள் எக்ஸ்பல்ஸ் 200 மாடலைக் காட்டிலும் சற்று தாழ்வாகவும், நேராகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், இதில் உள்ள பிரேக் மற்றும் சில பாகங்கள் எக்ஸ்பல்ஸ் 200 மோட்டார்சைக்கிளுடன் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் ஸ்டைல் மற்றும் சஸ்பென்சஸ் செட் அப் உள்ளிட்ட அம்சங்களில் மாறுபடுகின்றன.
ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 மற்றும் 200டி மோட்டார்சைக்கிள்களில் ஒரே எஞ்ஜின் தான் பொருத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், 199.5 சிசி கொண்ட ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் இவற்றில் பொருத்தப்பட்டுள்ளன. இது, அதிகபட்சமாக 18.4 பிஎஸ் பவர் மற்றும் 17.1 என்எம் டார்க் திறனை வழங்கும் திறன் கொண்டது.

மேலும், 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய மாடல் மோட்டார்சைக்கிள்களின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகையால், இந்த மோட்டார்சைக்கிள்களின் விற்பனைக்கு பின்னரே இதுகுறித்த முழுமையான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








