புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 டெலிவிரி எப்போது?
பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரின் டெலிவிரி துவங்கும் நாள் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஹோண்டா நிறுவனம் தனது முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மாடலாக ஆக்டிவா 125 ஸ்கூட்டரை நேற்று விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த ஸ்கூட்டரில் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு இருப்பதுடன், பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களையும் பெற்றிருக்கிறது.

புதிய வடிவமைப்பிலான பொசிஷன் லைட்டுடன் கூடிய எல்இடி ஹெட்லைட், முன்புற அப்ரான் மற்றும் சைடு பேனல்களில் க்ரோம் பாகங்களுடன் பொலிவு கூட்டப்பட்டு இருக்கிறது. மேலும், பழைய மாடலைவிட பரிமாணத்தில் சற்றே பெரிய மாடலாக வந்துள்ளது. ஆனால், வீல் பேஸில் எந்த மாற்றங்களும் இல்லை.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டரில் பிஜிஎம் - எஃப்ஐ என்ற நவீன தொழில்நுட்பத்திலான ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் 124சிசி எஞ்சின் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 8.1 பிஎச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

உராய்வுகள் குறைவான உதிரிபாகங்களுடன் வடிமைப்பு மற்றும் கட்டமைப்பு செய்யப்பட்டிருப்பதால், கூடுதலாக 13 சதவீதம் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் ஸ்டார்ட்- ஸ்டாப் சிஸ்டமும் இருப்பது கூடுதல் எரிபொாருள் சிக்கனத்திற்கு வழிகோலுகிறது.

மேலும், இந்த ஸ்கூட்டரில் சப்தம் இல்லாமல் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் புதிய ஸ்டார்ட்டர் மோட்டாரும் இடம்பெற்றுள்ளது. ரிமோட் முறையில் பெட்ரோல் டேங்க் மூடி மற்றும் இருக்கையை திறப்பதற்கான வசதிகளுடன் மல்டி பங்ஷன் சாவி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஹோண்டா ஆக்டிவா பிஎஸ்-6 ஸ்கூட்டரில் சைடு ஸ்டான்டு போட்டுள்ளபோது, எஞ்சின் ஸ்டார்ட் ஆகாத வகையிலான தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கிறது. இது விபத்துக்களை தவிர்க்கும் வாய்ப்பாக இருக்கும்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் மூன்று வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. ஸ்டான்டர்டு வேரியண்ட் ரூ.67,490 எக்ஸ்ஷோரூம் விலையிலும், அலாய் வீல் வேரியண்ட் ரூ.70,990 விலையிலும், டீலக்ஸ் வேரியண்ட் ரூ.74,490 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும்.

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்-6 ஸ்கூட்டர் வரும் செப்டம்பர் 29ந் தேதி நவராத்திரி பண்டிகையின் முதல் நாளிலிருந்து டெலிவிரி கொடுக்கப்பட இருக்கிறது. நாடுமுழுவதும் பல கட்டங்களாக டெலிவிரி கொடுக்கும் பணிகளை செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








