வெளிநாட்டு எலக்ட்ரிக் பைக்குகளுக்கு டஃப் கொடுக்க உள்ள இந்திய தயாரிப்பு: ரகசியத்தை உடைத்த டிவிஎஸ்!
வெளிநாட்டு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இந்தியாவில் தயராகி வரும் அதிநவீன பைக் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் அல்ட்ராவைலட் நிறுவனம் மின்வாகனங்களுக்கான எந்திரங்களை உருவாக்கி வருகிறது. இந்த நிறுவனம் தற்போது எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது 200-250 சிசி திறனுக்கு இணையான எலக்ட்ரிக் பைக்கினை இந்த நிறுவனம் தயாரித்து வருகின்றது.

இந்த நிறுவனத்தின்மீது தமிழ்நாட்டைச் சேர்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் ரூ. 6 கோடி முதலீடு செய்துள்ளது. அல்ட்ராவைலட் நிறுவனம் தனித்துவமான கொள்கையைக் கொண்டு இயங்குவதால் இந்த உதவியைச் செய்திருப்பதாக டிவிஎஸ் விளக்கியது. மேலும், இந்த நிறுவனம் இந்தியாவில் தன்னிரகற்ற எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்குக் கொண்டுவர இருக்கின்றதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அல்ட்ரா வைலட் நிறுவனம் தயாரித்து வரும் புத்தம் புதிய எலக்ட்ரிக் பைக் பற்றிய சிறப்பு தகவலை அந்த நிறுவனம், அதன் அதிகார்பூர்வமான இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

எஃப்77 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பைக் அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டதாக உருவாகி உள்ளது. அதன்படி, இந்த பைக்கில் செயல் திறனை மாற்றியமைத்தல் (Performance customisation), வண்டியின் இயக்க நிலையை ஆய்ந்தறிதல் (Ride analysis), பழுது தவிர்ப்பு பராமரிப்பு முறை (Preventive maintenance), இணைய வழி பழுது கண்டறியும் முறை (remote diagnostics), வண்டியின் செயல்திறன் மென்பொருள் மேம்படுத்துதல் (OTA upgrades) உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் இடம் பெற்றுள்ளன. மேலும், இவையனைத்தையும் உங்களது ஸ்மார்ட்போனில் சிறிய டேப் செய்வதன் மூலம் இந்த அனைத்து தகவலையும் அறிந்து கொள்ள முடியும்.

இத்தகைய சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த அல்ட்ராவைலட் எலக்ட்ரிக் பைக்கில் 25 கிலோவாட் கொண்ட, 33.5 குதிரை திறனை வெளிப்படுத்தும் மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வெறும் மூன்று செகண்டில் அதிகபட்சமாக 60 கிமீ வேகத்தைத் தொட்டுவிடும் அளவிற்கு சக்தி வாய்ந்தது. மேலும், இது 450 என்எம் டார்க்யூவை வெளிப்படுத்தும்.

அல்ட்ராவைலட் எஃப்77 இல் முக்கிய அம்சமாக ரிஜெனரேடிவ் பிரேக்கிங் சிஸ்டம் அமைக்கப்பட்டுள்ளது. இது, வாகனம் அதிவேகமாக சென்றுக் கொண்டிருக்கும்போது, திடீரென பிரேக் போடுவதால் ஏற்படும் சக்தி இழப்பை தடுக்கும். இதனால், பேட்டரி பவர் எளிதில் விரையமாவது தவிர்க்கப்படும். மேலும், அதிக மைலேஜிற்கும் வழி வகுக்கும்.

இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ள பேட்டரியானது அதிக சக்தி வாய்ந்ததாகவும், மின் கோளாறு மற்றும் வெப்பத்தினால் ஏற்பாடும் பிரச்னைகளை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பைக்கை எளிதில் சார்ஜ் செய்யும்படி, வீட்டிலேயே மினி இ-ஸ்டேஷனை இந்த நிறுவனம் அமைத்துக் கொடுக்கிறது. இதன்மூலம், நீங்கள் சார்ஜிங் நிலையங்களைத் தேடி அலையும் அவலநிலை தவிர்க்கப்படும்.

அல்ட்ராவைலட் எலக்ட்ரிக் பைக்கானது மூன்று விதமான ரைட் மோட்களில் விற்பனைக்கு வரவுள்ளது. அதன்படி, ஈகோ, ஸ்போர்ட் மற்றும் இன்சேன் ஆகிய மோட்களில் சாலையைக் கலக்க உள்ளது. மேலும், நீங்கள் இந்த பைக்கை எங்கேனும் தவரவிட்டால், அதில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு பைக் எங்கே உள்ளது என்பதை எளிதில் கண்டறிந்துகொள்ளலாம். இந்த பைக்கின் விலை மற்றும் விற்பனைக் குறித்த மற்ற தகவல்களை அல்ட்ராவைலட் நிறுவனம் அதிகாரமாக அறிவில்லை. இருப்பினும் இப்போதே இந்த பைக்கின் மீதான ஆவல் வாகன ஓட்டிகளிடையே அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது.


Click it and Unblock the Notifications








