வாடிக்கையாளர்களை கவர ஜாவாவின் புதிய உறுதி மொழி: என்னனு தெரியுமா...?
ஜாவா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ஓர் புதிய உறுதி மொழி ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் முழுமையாக காணலாம்.

இந்தியா வாகனங்களுக்கான திறந்தவெளி சந்தையாக இருந்து வருகிறது. நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகின்றன.
இந்தியாவின் வாகனத் தேவையை அறிந்த பல்வேறு உள் மற்றும் வெளிநாட்டு வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களின் தயாரிப்புகளை இந்திய வாகனச் சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், கடந்த 1970ம் ஆண்டுகளில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஜாவா நிறுவனம், மீண்டும் இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் களமிறங்கியது. அவ்வாறு, ஜாவா நிறுவனம், ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்களை களமிறக்கியது.

இந்த மோட்டார்சைக்கிள்களின் பாரம்பரியமிக்க தோற்றத்தில் மதிமயங்கிய இந்திய இளைஞர்கள், இவற்றிற்கான சந்தையை பெருமளவில் ஏற்படுத்திக் கொடுத்தனர். தொடர்ந்து, புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு கடந்த மார்ச் மாதம் டெலிவரி செய்யப்பட்டது.

ஆனால், உற்பத்திக் குறைவின் காரணமாக முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் முழுமையாக டெலிவரிச் செய்யப்படவில்லை. உரிய நேரத்தில் டெலிவரியை வழங்காத காரணத்தால் வாடிக்கையாளர்கள் பெரும் அதிருப்தியை அடைந்தனர். இதனால், ஜாவா நிறுவனத்திற்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்பட்டது.
இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குநரான அனுபம் தரேஜா,
"தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவு வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் சீர் செய்யப்படும். பின்னடைவிற்கு குறைவான உற்பத்தியே காரணம். ஆகையால், உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஜாவா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. எனவே, இன்னும் ஐந்து மாதங்களில் ஜாவா நிறுவனம் அனைவருக்கும் மோட்டார்சைக்கிள்களை டெலிவரி செய்துவிடும்" என உறுதியளித்தார்.

ஜாவா மோட்டார்சைக்கிள்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போதுவரை முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக புக்கிங் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்தபின்னரே, இது மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், வாடிக்கையாளர்கள் யாரேனும் ஜாவா மோட்டார்சைக்கிளை புக் செய்ய நினைத்தால், ஜாவா டீலர்களை நேரடியாக அணுகலாம். இதற்காக நாடு முழுவதும் 100க் கணக்கான டீலர்கள் நிறுவப்பட்டுள்ளனர். மேலும், வாடிக்கையாளர்கள் விரும்பினால் ஜாவா மோட்டார்சைக்கிள்களை அங்கு டெஸ்ட் டிரைவ் செய்தும் பார்க்கலாம்.

ஜாவா நிறுவனம் சிங்கிள் ஏபிஎஸ் வசதி கொண்ட மோட்டார்சைக்கிள்களைத் தான் விற்பனைச் செய்தது. ஆனால், வாடிக்கையாளர்களின் கோரிக்கையை அடுத்து டியூவல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட மோட்டார்சைக்கிள்கள் விற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு, டியூவல் சேனல் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட ஜாவா மோட்டார்சைக்கிள்கள் வருகின்ற ஜீலை மாதத்திற்கு பின்னர் விற்பனைச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜாவா நிறுவனம் கடந்த மாதத்தில் 255 யூனிட்களை டெலிவரி செய்திருந்தது. ஆனால், இதுவரை ஒட்டுமொத்தமாக எத்தனை புக்கிங்கள் பெற்றுள்ளது என்ற தகவலை மட்டும் ஜாவா நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால், அது 1000-த்திற்கும் மேற்பட்ட புக்கிங்குகளைப் பெற்றிருக்கலாம் என யூகிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








