விமர்சனங்களை தவிடு பொடியாக்கிய ஜாவா: புதிய உற்சாகத்துடன் வீர நடைபோட காரணம் இதுதான்!
ஜாவா நிறுவனம், அதன்மீது ஏற்பட்ட கலங்கத்தைத் தீர்க்கும் வகையில், மீண்டும் டெலிவரியை தொடங்கியிருப்பதாக அதன் முகப்புத்தக பக்கத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

பெரும் புரட்சியாளன் என்ற பட்டத்தை வழங்கிய அதே இந்தியர்கள்தான், தற்போது ஜாவா நிறுவனத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர். அவ்வாறு, ஜாவா நிறுவனத்தின்மீது களங்கம் ஏற்பட, ஜாவா மோட்டார்சைக்கிள்களின் டெலிவரியில் ஏற்பட்ட கால தாமதம் முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஜாவா நிறுவனம், 1970ம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புரட்சியை ஏற்படுத்தும் விதமாக, கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம் தேதி ஜாவா, ஜாவா42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல் மோட்டார்சைக்கிள்களை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்தது.

இதில், முதல்கட்டமாக ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய மாடல்களுக்கான புக்கிங் ஆன்லைன் மற்றும் ஆப்ஃலைனில் அமோகமான வரவேற்புடன் தொடங்கியது. அவ்வாறு, புக்கிங் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே, விற்பனைக்கு நிர்ணயிக்கப்பட்ட அனைத்து யூனிட்களுக்கான புக்கிங்கும் நிறைவடைந்தன. அவ்வாறு, நடப்பாண்டின் செப்டம்பர் மாதம் வரையிலான புக்கிங்குகள் முடிவடைந்தன.

இவ்வாறு, பெரும் திரளான வரவேற்பு இந்த மோட்டார்சைக்கிளுக்கு கிடைக்க ஆரம்பித்தது. மேலும், அனைத்தும் சுமூகமாகச் சென்றுக்கொண்டிருக்க, ஜாவாவின் நற்பெயருக்கு குந்தகம் ஏற்படும் வகையில் தற்போதைய சூழல் நிலவி வருகிறது. ஆம், ஜாவா நிறுவனத்தால் முன்பதிவு செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் குறிப்பிட்ட நாளுக்கு நாள் மோட்டார்சைக்கிளை டெலிவரி செய்ய முடியவில்லை. இதற்கு, உற்பத்தி குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

இதனால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் பலர் ஜாவா நிறுவனத்தின்மீது அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், சிலர் தாங்கள் செலுத்திய முன்பணத்தைத் திரும்பத் தந்துவிடுமாறு ஜாவாவிடம் முறையிட்டு வருகின்றனர். இவ்வாறு, ஜாவாவிற்கு எதிரான சூழல் தலைகீழாக மாறிக்கொண்டிருக்க, வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் புதிய உறுதி மொழி ஒன்றினை ஜாவா நிறவனம் அண்மையில் வெளியிட்டிருந்தது.

அதன்படி, தற்போது ஏற்பட்டுள்ள பின்னடைவை சீர் செய்யும் விதமாக, வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள், புக்கிங் செய்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் மோட்டார்சைக்கிள்கள் டெலிவரி செய்யப்படும் என ஜாவா நிறுவனம் அறிவித்திருந்தது. இதற்காக, மோட்டார்சைக்கிள்களின் உற்பத்தியை பன்மடங்கு வேகத்தில் உயர்த்தியிருப்பதாகவும் அது தெரிவித்தது.
இந்நிலையில், ஜாவா நிறுவனம் அதன் முகப்புத்தக பக்கத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஜாவா மோட்டார்சைக்கிள்களை டெலிவரி வழங்குவது போன்ற புகைப்படங்களைப் பகிர்ந்து உள்ளது.
மேலும், "மே மாதம் வேண்டுமானாலும் தற்போது தொடங்கியிருக்கலாம், ஆனால் ஜாவாவின் டெலிவரி ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது. தற்போது முழுவீச்சில் ஜாவா மற்றும் ஜாவா42 மோட்டார்சைக்கிள்களின் டெலிவரி நடைபெற்று வருகின்றது" என அந்த நிறுவனம் பதிவிட்டுள்ளது.

இத்துடன், ஜாவா நிறுவனத்திற்கு ஏற்பட்ட அவல சூழ்நிலை மாறி, புதிய மெமரிகள், அட்வென்சர் மற்றும் எவர்கிரீன் கதைகள் உருவாகியிருப்பதாகவும் அந்த பதிவில் ஜாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








