புதிய ஜாவா பெராக் பைக் விற்பனைக்கு அறிமுகம்: படங்களுடன் தகவல்கள்!
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய ஜாவா பெராக் பைக் இன்று முறைப்படி இந்திய சந்தையில் களமிறக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கடந்த ஆண்டு நவம்பர் 15ந் தேதி ஜாவா பிராண்டில் ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மூன்று மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன. மஹிந்திராவின் அங்கமாக செயல்படும் கிளாசிக் லெஜென்ட்ஸ் நிறுவனம் ஜாவா பைக்குகளின் உற்பத்தி, வினியோக பணிகளை மேற்கொண்டுள்ளது. மூன்று பைக்குகளின் விலையும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், ஜாவா, ஜாவா 42 பைக்குகளுக்கு மட்டுமே முன்பதிவு துவங்கப்பட்டு டெலிவிரி கொடுக்கப்பட்டு வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜாவா பெராக் பைக்கிற்கு ரூ.1.89 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக அறிவிக்கப்பட்டாலும், சந்தைக்கு வரவில்லை. இந்த நிலையில், ஜாவா நிறுவனம் இரண்டாவது இன்னிங்சை துவங்கி இன்று ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில், இந்த முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி, பெராக் பைக்கை இன்று முறைப்படி இந்திய சந்தையில் களமிறக்கி உள்ளது ஜாவா நிறுவனம். பிற இரண்டு பைக்குகளிலிருந்து பெராக் முற்றிலும் வேறுபட்ட மாடலாக நிலைநிறுத்தப்படுகிறது.

அதாவது, ஜாவா 42 பைக்கின் அடிப்படையில் வால் இல்லாத வகையில் ஓட்டுபவருக்கான இருக்கையுடன் மட்டும் வடிவமைக்கப்படும் 'பாபர்' என்ற வகையில் இந்த பைக் டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. பின் இருக்கை இருக்காது. பொதுவாக சாதாரண பைக்குகளை இதுபோன்று கஸ்டமைஸ் செய்வது வழக்கம்.

ஆனால், இந்த டிசைனில் ஜாவா நிறுவனமே நேரடியாக தயாரித்து விற்பனை செய்வதால், ஜாவா பிரியர்கள் மற்றும் பைக் ஆர்வலர்கள் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது. 1946ம் ஆண்டு பாரிஸ் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஜாவா பெராக் பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன் நவீன தொழில்நுட்ப அம்சங்களை சேர்த்து உருவாக்கி இருக்கின்றனர்.

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜாவா மற்றும் ஜாவா 42 பைக்குகளைவிட இந்த புதிய பெராக் பைக்கின் எஞ்சின் சற்று கூடுதல் திறன் வாய்ந்தது. இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டர் 334சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 30 பிஎச்பி பவரையும், 31 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் வந்திருக்கும் முதல் ஜாவா பைக் மாடல் என்ற பெருமையையும் பெராக் பெற்றுள்ளது. இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பைக்கில் சாதாரண வகை டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக வீல்பேஸ் நீளம் கொண்ட பைக்குகளில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், கையாளுமை சிறப்பாக இருக்கும் என்று ஜாவா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

புதிய ஜாவா பெராக் பைக் ரூ.1,94,500 எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. வரும் ஜனவரி முதல் முன்பதிவு துவங்கப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் டெலிவிரி கொடுக்கப்படும். நாடு முழுவதும் உள்ள ஜாவா டீலர்களில் நாளை முதல் டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தனித்துவமான ரகத்தில் வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








